மட்டு. எல்லையிலிருந்து பொதுபலசேனா பின்வாங்கியது
2016-12-05 12:20:17 | General

களுவாஞ்சிக்குடி, வாழைச்சேனை நிருபர்கள்      


பலத்த ஏற்பாடுகளுடன் தொண்டர்களுடன் மட்டக்களப்பு நோக்கிப் புறப்பட்ட ஞானசாரர் குழுவினர் மட்டக்களப்பு பொலனறுவை மாவட்ட எல்லையில் படையினர் மற்றும் பொலிஸாரால் வழிமறிக்கப்பட்டதால் மட்டக்களப்புக்குள் நுழைய முடியாது தாங்கள் புறப்பட்ட இடத்துக்கே திரும்பியுள்ளனர்.

பொதுபலசேனா, ராவண பலய உள்ளிட்ட  பல பேரின மதவாத அமைப்புக்கள் இணைந்து கலபொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் சனிக்கிழமையன்று மட்டக்களப்பு நோக்கி வாகனங்களில் வந்தபோது மட்டக்களப்பு மாவட்ட எல்லைக் கிராமமான ரிதிதென்ன பகுதியில் வைத்து மட்டக்களப்பு எல்லைக்குள் பிரவேசிக்க முடியாதவாறு  பொலிஸாரால் தடுக்கப்பட்டனர்.

பிக்குகளும் அவர்களது ஆதரவாளர்களும் வழிமறிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்டதை அடுத்து அவ்விடத்தில் பெரும் பதற்றநிலை நிலவியது.


இதனால் அவர்கள் அவ்விடத்தில் வீதியை மறித்து போக்குவரத்துகளை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கொழும்பு  மட்டக்களப்பு புகையிரதத்தையும் தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து அன்று மாலை வாகனங்களை கைவிட்டு  பொலிஸாரின் தடைகளையும் உடைத்துக் கொண்டு  மட்டக்களப்பு  நோக்கி தமது பயணத்தை நடந்து மேற்கொள்ள ஆயத்தமானபோது விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாருக்கு உதவியாக இணைந்து கொண்டு கலகக் குழுவினரைத் தடுத்து நிறுத்தினர்.

 இந்த நிலையில் இருள் சூழ்ந்து கொண்டிருந்த காரணத்தினால் புனானை ஸ்ரீ பஞ்சமா விஹாரையில் சனிக்கிழமை இரவு தங்கியிருந்து பிக்குகள் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.

பொலிஸாருக்கும் ஞானசாரர் தலைமையிலான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து நேற்று ஞாயிறு அதிகாலை  மட்டக்களப்புக்கான தமது பயணத்தை கைவிட்டு தாம் வந்த வழியே திரும்பிச் சென்றுள்ளனர்.

எனினும் மீண்டும் வருவோமென புறப்படும் போது அவர்கள் கூறியுமுள்ளனர். இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் போக்குவரத்து உட்பட இயல்புநிலை வழமைக்குத் திரும்பியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஞானசாரரின் ஆர்ப்பாட்டத்துக்கான முஸ்தீபுகள் பற்றி ஏற்கனவே புலனாய்வுப் பிரிவு மூலம் அறிந்து கொண்ட பொலிஸார், வெறுப்புணர்வைத் தூண்டும் சட்டரீதியற்ற ஒன்று கூடலைத் தடுக்கும் தடை உத்தரவொன்றை வழங்குமாறு கரடியனாறு பொலிஸார் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றுக்கு மனுவொன்றை சமர்ப்பித்திருந்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் வெறுப்புணர்வைத் தூண்டும் ஆர்ப்பாட்டங்களையும்  ஒன்று கூடல்களையும் தடுக்கும் தடை உத்தரவினை வழங்கியிருந்ததும் தெரிந்ததே.

TOTAL VIEWS : 8143
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
xumj3
  PLEASE ENTER CAPTA VALUE.