பிரிக்கப்பட முடியாத நாடு மாகாண சபைக்குள் தீர்வு; பிரதமர் ரணில்
2017-09-22 09:54:40 | General

பா.கிருபாகரன், டிட்டோகுகன்


இன, மத, சமூக பாகுபாடுகள் இன்றி இலங்கையர்கள் பொதுவாக பயன்பெறக்கூடிய புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கி அதனூடாக சகல இலங்கையர்களுக்கும் பயன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரிக்கப்பட முடியாத ஒரே நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்பதை ஏற்க சகல கட்சிகள், குழுக்கள் மற்றும் அமைப்புகள் அடங்கலாக சகலரும் 
தயாராக இருப்பதாகவும் நாட்டை மீண்டும் குரோத எதிர்காலத்தை நோக்கி தள்ள இடமளிக்க முடியாது என்றும் கூறினார். 


புதிய அரசியலமைப்பொன்றை இயற்றும் நிமித்தமான வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை அக்குழுவின் தலைவர் என்ற வகையில் நேற்று அரசியலமைப்பு (நிர்ணய) சபைக்கு சமர்ப்பித்து உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த விடயங்களைத் தெரிவித்தார். 


இந்த இடைக்கால அறிக்கையிலுள்ள முன்மொழிவுகளுக்கு தேசிய அரசாங்கத்திலுள்ள இரு பிரதான கட்சிகளும் இணங்கும் பட்சத்தில் தாங்களும் அதற்கு உடன்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்போக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.


இது முன்மொழிவு அறிக்கை மாத்திரமே சட்ட பூர்வ ஆவணமல்ல என்றும் இறுதி ஆவணம் மக்களுடனான கலந்துரையாடலின் பின்னரே தயாரிக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். அவர் இதன்போது மேலும் பேசுகையில்;


பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கையை அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளனர். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பமாகும். பிரிந்து செயற்பட்ட ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் பொது உடன்பாட்டிற்காக இணைந்துள்ளன. இந்த மேலான சந்தர்ப்பத்தை நாம் கைநழுவ இடமளிக்கக்கூடாது.


மாகாண முதலமைச்சர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் அதிகாரப்பகிர்வு கோட்பாடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அரசியலமைப்பினூடாக நாடு பாரிய மாற்றத்தை எட்ட இருப்பதோடு சுபீட்சம் மற்றும் அபிவிருத்தியை நோக்கிய புதிய யுகத்தை நோக்கி நாடு பயணிக்கும்.


சகலரதும் கருத்துகளைப் பெற்று புதிய அரசியலமைப்பை உருவாக்கி பலமான நாட்டை கட்டியெழுப்ப பங்காற்ற வேண்டும். இன, மத, சமூக பாகுபாடுகள் இன்றி இலங்கையர்களுக்கு பொதுவாக பயன்பெறக்கூடிய புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க வேண்டும். ஜனநாயகத்தை விஸ்தரித்து சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்பி சகல இலங்கையர்களுக்கும் பயன் கிடைப்பதை அரசியலமைப்பினூடாக உறுதி செய்ய வேண்டும். 


இந்த இடைக்கால அறிக்கை பெரும்பான்மை அல்லது சிறுபான்மை அறிக்கை கிடையாது. குழு உறுப்பினர்கள் சகலரதும் கருத்துகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இடைக்கால அறிக்கையின் முதலாவது சரத்தில் இலங்கை பிரிக்கப்படாத நாடாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அதிகாரத்தை பகிர உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். எமக்கிடையில் உடன்பாடு எட்டுவதிலேயே நாட்டின் எதிர்காலம் முடிவாகும். எமது ஜனநாயக வழிமுறையில் குரோதத்திற்கு இடமில்லை. எமது நாட்டை மீண்டும் குரோத எதிர்காலத்தை நோக்கி தள்ள இடமளிக்க முடியாது. 


பௌத்த மதத்திற்கான முன்னுரிமை அரசியலமைப்பினூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பௌத்த மதத்திற்குரிய முன்னுரிமை பாதுகாக்கப்படும். இல்லாத பிரச்சினைகளை உருவாக்கி அவற்றை பெரிதுபடுத்தி மக்களை பிளவுபடுத்த நாம் இடமளிக்க மாட்டோம். 


இந்த அறிக்கையில் எமது நாடு முகங்கொடுக்கும் பல பிரச்சினைகள் பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி மாகாண மட்டத்தில் அபிவிருத்திகளை முன்னெடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அரச நிர்வாகத்தில் இரண்டாவது மட்டமாக மாகாண சபைகளையும் மூன்றாவது மட்டமாக உள்ளூராட்சி சபைகளையும் உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.                                                                                                                                                                                                                                
ஜனாதிபதி மற்றும் நிறைவேற்று அதிகாரம் என்பவற்றின் பொறுப்பு பற்றி இன்னும் தெளிவு பெற வேண்டும். காலம் கடத்தாது இது தொடர்பில் பொது உடன்பாடு எட்டப்பட வேண்டும்.


இடைக்கால அறிக்கை கூட்டு முயற்சியாகவே முன்னெடுக்கப்பட்டது. 12 முக்கிய துறைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. உப குழுக்களின் அறிக்கைகள் 2016 நவம்பரில் சமர்ப்பிக்கப்பட்டது. நீண்டகாலமாக பிரிந்திருந்த நாட்டில்  பொது உடன்பாட்டிற்காக ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் இணைந்துள்ளன.

எதிர்கால சந்ததிக்கு  சுதந்திரமானதும் அமைதியுமான இலங்கையையே உரிமையாக்க வேண்டும். கடந்த காலத்தில் பரவிய பிரிவினைவாதம் மற்றும் அரசியல் வன்முறைகளினால் எமது வாழ்க்கை மாத்திரமன்றி எமது உணர்வுகளும் நாசமடைந்தன. அதனால் நாம் எம்மையே பலவீனப்படுத்திக் கொண்டோம்.


நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் சம உரிமை ஏற்படுத்தவும் ஜனநாயகத்தை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுத்தோம். புதிய அரசியலமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கையில் இது பற்றி பாராளுமன்றத்தில் மாத்திரமன்றி நாடுபூராவும் ஆராயப்பட்டது. சகலரையும் இணைத்து அனைவருக்கும் பயனுள்ள அரசியலமைப்பொன்றை உருவாக்க வேண்டும்.


எமது முன்னேற்றத்தில் புதிய அரசியலமைப்பு முக்கிய அம்சமாகும். தெளிவான அதிகாரப்பகிர்வு தொடர்பில் எமது அரசாங்கம் மக்களுக்கு வாக்களித்துள்ளது. இதனூடாக மக்களுக்கு தமது சமூகம் தொடர்பில் கூடுதலாக குரல் கொடுக்க சந்தர்ப்பம் ஏற்படும்.


அக்டோபர் மாதத்தில் பாராளுமன்றம் கூடாத நாட்களில் அரசியலமைப்பு சபையை கூட்டி இந்த அறிக்கை தொடர்பில் ஆராய முடியும். கட்சித் தலைவர் கூட்டத்தைக் கூட்டி இதற்காக இரண்டு அல்லது மூன்று நாட்களை ஒதுக்குமாறு சபாநாயகரை கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். 

 

TOTAL VIEWS : 875
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
tsid5
  PLEASE ENTER CAPTA VALUE.