நெடுந்தீவில் 12 வயதுச் சிறுமி கொலை தீர்ப்பு இன்று வழங்கப்படும்
2017-04-07 12:53:54 | General

 

க.ஹம்சனன்
 

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் 12 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த சம்பவத்தின் வழக்கு விசாரணையில் குறித்த வழக்கின் எதிரியின் பல்வரிசையும் கொல்லப்பட்ட சிறுமியின் உடலில் இருந்த பற்கடி காயமும் ஒன்றோடு ஒன்று துல்லியமாக பொருந்துவதாக இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்ட பல் சட்ட வைத்திய அதிகாரியும் பல்வைத்திய நிபுணருமான டாக்டர் ஜயனி பீ.வீரட்ண யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.
 

அதேபோன்று எதிரியின் சாரத்தில் இருந்த இரத்தக் கறையும் கொல்லப்பட்ட சிறுமியின் இரத்தமும் ஒன்றோடு ஒன்று பொருந்துவதாகவும் கொல்லப்பட்ட சிறுமியின் யோனிக்குள் ஆணொருவரின் விந்தணு காணப்பட்டது எனவும் விந்தணு தொடர்பான ஆய்வினை மேற்கொண்ட ஜீன்டெக் நிறுவனத்தின் விஞ்ஞானி என்.டி.எஸ் குணவர்த்தன யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.
 

கடந்த 2012.03.03ஆம் திகதி பாலியல் வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட ஜேசுதாஸ் லக்சினியின் வழக்கு விசாரணை சட்டமா அதிபரால் யாழ்.மேல் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டிருந்தது. இதன்படி குறித்த வழக்கு விசாரணையானது தொடர் வழக்கு விசாரணையாக யாழ்.மேல் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது. இவ்வாறான நிலையில் வியாழக்கிழமை குறித்த வழக்கின் இரண்டாம் நாள் சாட்சியப் பதிவிற்காக யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கானது விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது வழக்கினை அரச சட்டவாதியான நாகரட்ணம் நிஷாந் நெறிப்படுத்தியிருந்தார்.
 

இந்நிலையில் வியாழக்கிழமைய வழக்கு விசாரணையில் வழக்கின் ஏழாவது சாட்சியான பல் சட்ட வைத்திய அதிகாரியும் பல்வைத்திய நிபுணருமான டாக்டர் ஜயனி பீ.வீரட்ண சாட்சியமளிக்கையில்,
என்னிடம் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கொல்லப்பட்ட சிறுமியின் உடலில் காணப்பட்ட பற் கடி தோற் பகுதியை கொண்டு அதனை அச்சொட்டாக பிரதிபலிக்கக் கூடிய பொசிட்டிவ் றிப்லிக்காவை தயாரித்தோம். அதேபோன்று என் முன்னால் முற்படுத்தப்பட்ட குறித்த எதிரியின் பல் வரிசையின் அமைப்பையும் அச் சொட்டாக பிரபலிக்கக் கூடிய பொசிட்டிவ் றிப்லிக்காவை அவரது வாயில் அதற்குரிய பொருட்களை வைத்து அதன் அச்சை பெற்று தயாரித்தோம்.

 

அந்தவகையில் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த தோளானது சுருக்கம் அடைந்து காணப்பட்டதால் நான் இவ் ஆய்வினை பட்ரன் அனலைஸ் முறையிலேயே மேற்கொண்டிருந்தேன். அதன்படி எம்மால் தயாரிக்கப்பட்ட இரண்டு பொசிட்டிவ் றிப்லிக்காவையும் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தி ஆய்வு செய்த போது குறித்த இரண்டும் துல்லியமாக பொருந்தியிருந்தது.
எதிரியின் பல்வரிசையில் மேல் தாடைப் பகுதியில் உள்ள இரண்டு பற்களுமே இவ் கடி காயத்தை ஏற்படுத்தியிருந்ததை என்னால் ஆய்வினூடாக கண்டறிய முடிந்தது.

இதில் வேறெந்த பற்களும் தொடர்புபட்டிருக்கவில்லை. அத்துடன் குறிக்கப்பட்ட மேல் தாடையின் குறித்த காயத்தை ஏற்படுத்தியிருந்த பல்லில் ஒன்று உடைந்திருந்தது. அதுவும் இவ் தோலில் ஏற்படுத்தப்பட்டிருந்த காயத்துடன் நன்றாக பொருந்தியிருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு இக் காயத்தை மேற்குறித்த எதிரியாலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது என்ற ஆய்வு முடிவுக்கு வர முடிந்தது.
 

மேலும் உலகில் ஒருவருடைய பற்கட்டமைப்பு போன்று இன்னொருவருக்கு இருக்காது. அது ஒன்றாக பிறந்த இரட்டை சகோதரர்களாக இருந்தாலும் அவர்களுடைய பற்கட்டமைப்பானது ஒரே மாதிரியாக அமையாது என்பது விஞ்ஞான ரீதியிலான முடிவாகும். அத்துடன் நான் இவ் ஆய்வு முறையை அமெரிக்க தரத்தின் அடிப்படையிலேயே மேற்கொண்டிருந்தேன் என தனது நிபுணத்துவ சாட்சியத்தை குறிப்பிட்டு அவர் சாட்சியமளித்திருந்தார்.
 

இதனைத் தொடர்ந்து இவ் வழக்கின் ஆறாவது சாட்சியாக இணைக்கப்பட்டிருந்த கொல்லப்பட்ட சிறுமியின் யோனிப் பகுதியில் எடுக்கப்பட்ட விந்தணு திரவம் மற்றும் ஏனைய சான்றுப் பொருட்கள் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்ட ஜீன்டெக் நிறுவனத்தின் விஞ்ஞானி என்.டி.எஸ் குணவர்த்தன சாட்சியமளிக்கையில், என்னிடம் 2012.03.19ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் சில சான்றுப் பொருட்கள் ஆய்வுக்காக ஒப்படைக்கப்பட்டிருந்தன. இதன்படி பளுப்பு நிறமான பஞ்சுருண்டையில் சேகரிக்கப்பட்ட இரத்த மாதிரி, மெல்லிய பஞ்சுருண்டையில் எடுக்கப்பட்ட இரத்த மாதிரி, கொல்லப்பட்ட சிறுமியின் உடலில் பாலுறுப்பின் அருகில் நிலத்தில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரி, இரத்த கறையுடனான நீல சொப்பின் பேக், கறுப்பு நிற காற்சட்டை, உள்ளாடை, யோனியின் மேற்பகுதியில் எடுக்கப்பட்ட மாதிரி, யோனியின் உள்ளே எடுக்கப்பட்ட மாதிரி, யோனியின் உள்ளே சிறிஞ்சு மூலம் எடுக்கப்பட்ட சுரக்கும் பதார்த்தம், இறந்தவரின் உடையில் எடுக்கப்பட்ட இரண்டு தலைமுடி, வேர் இல்லாத தலைமுடி, பளுப்பு நிறமான இரத்த உடை, இறந்த சிறுமியின் இரத்த மாதிரி, இறந்த சிறுமியின் தலைமுடி, நீல நிற சாரம், சந்தேகநபரது இரத்த மாதிரி ஆகிய என்னிடம் ஆய்வுக்காக ஒப்படைக்கப்பட்டிருந்தன.
 

என்னால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பாக அட்டவணைகள் ஊடாகவும் ஒவ்வொரு பொருளினதும் ஆய்வு முடிவுகளை அறிக்கைகளாகவும், இணைத்து அதனை மன்றுக்கு சமர்ப்பித்துள்ளேன்.  அந்தவகையில் என்னால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவாக சிறிஞ்சு மூலம் பெறப்பட்ட கொல்லப்பட்ட சிறுமியின் யோனிப் பகுதியின் உள்ளே இருந்து பெறப்பட்ட விந்தணு திரவத்தில் ஒரு ஆணின் விந்தணு இருப்பதை துல்லியமாக கண்டுபிடிக்க முடிந்தது. மேலும் குறித்த விந்தணு யாருடையது என கண்டறிவதற்கான வகையில் யோனியினுள் குறித்த விந்தணு போதியளவு கலந்திருக்கவில்லை.
 

மேலும் குறித்த எதிரியின் சாரத்தில் இருந்த இரத்தக் கறையும் கொல்லப்பட்ட சிறுமியின் உடலில் இருந்த இரத்தமும் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகின்றன. அத்துடன் என்னால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அனைத்தும் சர்வதேச நியமங்களுக்கும் விஞ்ஞான முறைகளுக்கும் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது என அவர் தனது சாட்சியத்தை பதிவு செய்திருந்தார். இதனை தொடர்ந்து குறித்த சாட்சியான விஞ்ஞானி தாம் ஆய்வு செய்த எதிரியின் சாறத்தை மன்றில் அடையாளம் காட்டியிருந்தார்.
இவற்றை தொடர்ந்து குறித்த வழக்கின் அரச தரப்பு சாட்சியமானது முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

அதனை தொடர்ந்து குறித்த வழக்கின் எதிரி சாட்சிக்கூண்டில் நின்று சத்தியம் செய்து தனது சாட்சியத்தை பதிவு செய்திருந்தார். இதன் போது இவரது சாட்சியத்தை அரச தரப்பு சட்டத்தரணி குறுக்கு விசாரணை செய்திருந்தார். இவற்றைத் தொடர்ந்து அரச தரப்பு மற்றும் எதிரி தரப்பு சட்டத்தரணிகள் தொகுப்புரையை ஆற்றியிருந்தனர்.

அரச தரப்பு தொகுப்புரையின் போது குறித்த எதிரிக்கு எதிரான சாட்சியங்கள் சான்றாதாரங்களுடாக நிருபிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே எதிரிக்கு மரண தண்டனையும், 20ஆண்டு கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்க வேண்டும் என அரச சட்டவாதியான நாகரட்ணம் நிஷாந் தனது தொகுப்புரையை நிறைவு செய்திருந்தார்.இறுதியாக நீதிபதி குறித்த வழக்கின் தீர்ப்பானது நாளைய தினம்(நேற்று) அறிவிக்கப்படும் என குறிப்பிட்டதுடன் அதுவரை குறித்த எதிரியை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

TOTAL VIEWS : 2975
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
kq0za
  PLEASE ENTER CAPTA VALUE.