யாழ்ப்பாணத்தில் வானில் வந்து பாடசாலை மாணவி கடத்தல்; 1-1/2 மணி நேரத்தின் பின் விடுவிப்பு
2017-07-12 10:08:16 | General

பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த மாணவியை வழிமறித்து ஹயஸ் வாகனத்தில் வந்தவர்கள் பலவந்தமாக கடத்திச் சென்றுள்ளனர். இச்சம்பவம் நேற்றுக் காலை மல்லாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.


மல்லாகத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கின்ற 18 வயதுடைய மாணவி ஒருவரே கடத்தப்பட்டார்.  மல்லாகம் நீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் வசிக்கின்ற குறித்த மாணவி வழமை போல் நேற்றுக்காலை 7.30 மணியளவில் பாடசாலைக்கு நடந்து சென்றுள்ளார்.

வீதியோரமாக நடந்து சென்றுகொண்டிருந்த பகுதியில்  ஆட்கள் நடமாட்டம் அற்ற வேளை திடீரென ஹயஸ் வாகனமொன்று மாணவிக்கு அருகில் நிறுத்தப்பட, அதிலிருந்து இறங்கிய இரண்டு பேர் பலாத்காரமாக மாணவியை வாகனத்துக்குள் ஏற்றியுள்ளனர். இதன்போது வாகனத்துக்குள் சாரதி உட்பட 6 பேர் இருந்துள்ளனர்.

அவர்கள் மாணவிக்கு  பானமொன்றை வலுக்கட்டாயமாகப் பருக்க முற்பட்டுள்ளனர். ஆனால், குறித்த மாணவி அதை தன்னுடைய எதிர்ப்பினால் தட்டி வீழ்த்தியுள்ளார். இதனால் மாணவி மயக்கமடையவில்லை. 


பிரதான வீதியால் வாகனத்தைச் செலுத்தாமல் உள்வீதிகளால் சென்று சுமார் ஒன்றரை மணித்தியாலங்களின் பின் 9 மணியளவில் கொடிகாமம்  பருத்தித்துறை வீதியில் வறணிப் பகுதியில் ஆட்களற்ற பகுதியில் குறித்த மாணவியை வாகனத்தில் இருந்து தள்ளி விழுத்தி விட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.  

சுதாகரித்துக்கொண்டு எழுந்த மாணவி வீதியால் சென்றவர்களிடம் தண்ணீர் கேட்டு விவரத்தைக் கூறியுள்ளார். இதையடுத்து முச்சக்கர வண்டிச்சாரதி ஒருவரும் இரண்டு பெண்களுமாக இணைந்து மாணவியை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


 மாணவியை பரிசோதித்த வைத்தியர்கள் உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும் வாகனத்தில் இருந்து முகம்குப்புற தள்ளி விடப்பட்டமையால் முழங்காலில் மட்டும் காயமடைந்திருப்பதாகவும் தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் குறித்த மாணவியை கடத்தல்காரர்கள் பலாத்காரம்செய்ய முயற்சித்தபோதும் அவர்  அவர்களிடமிருந்து  தப்பிப்பதற்காக கடுமையாக தைரியத்தோடு போராடியிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 


கடத்தல்காரர்கள் எவரும் முகத்தை மறைத்திருக்கவில்லை எனவும் அவர்களை இதற்குமுன் தான் கண்டதில்லையெனவும் அவர்களனைவரையும் தன்னால் நன்றாக அடையாளம் காட்ட முடியும் எனவும்  விடுவிக்கப்பட்ட மாணவி தெரிவித்துள்ளார். எனினும் இதனால் அவருக்கு மேலும் ஆபத்துக்கள் வருமோ என தெரிவிக்கப்படுகிறது.


 கடத்தல்காரர்கள் கொச்சைத் தமிழிலேயே உரையாடியதாகவும் அவர்களுக்கு தொலைபேசியில் குறுந்தகவல் ஒன்று வந்ததையடுத்தே வறணிப் பகுதியில்  மாணவியை தள்ளி வீழ்த்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். குறித்த மாணவியின் பெற்றோரை வைத்தியசாலைக்கு அழைத்த சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை  அத்தியட்சகர் அவர்களோடு இணைந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக பரிசோதனைகளுக்காக மாணவியை அழைத்துச்சென்றுள்ளார்.

இக்கடத்தல் தொடர்பாக வைத்தியசாலைப் பொலிஸ் பிரிவினர் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ள அதேநேரம் கொடிகாமம் மற்றும் மல்லாகம் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

TOTAL VIEWS : 1687
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
pdpu6
  PLEASE ENTER CAPTA VALUE.