இராணுவத்தினரின் விளக்கமறியல் நீடிப்பு
2017-04-07 11:04:52 | General

சிறுப்பிட்டி பகுதியில் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருக்கும் இராணுவத்தினர் ஐவருக்கும் எதிராக நேற்று பொலிஸாரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1997ஆம் ஆண்டு புத்தூர் சிறுப்பிட்டி பகுதியில் சரஸ்வதி சவுந்தரராஜன் மற்றும் முத்துப்பிள்ளை ஜெயசீலன் ஆகியோர் காணாமல் போகச்செய்யப்பட்டிருந்தனர்.
 

பின்னர் அவர்களை கொலை செய்த குற்றச்சாட்டில் சிறுப்பிட்டி இராணுவ முகாமிலிருந்த 16 இராணுவத்தினர் அச்சுவேலி பொலிசாரால் கைது செய்யப்பட்டு யாழ் நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
 

 இவர்கள் 16 பேருக்கும் எதிராக சட்டமா அதிபரின் ஆலோசனைகள் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து யாழ் நீதிவான் நீதிமன்றினால் அழைப்புக் கட்டளை அனுப்பப்பட்டு அவர்களில் 14 இராணுவத்தினர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர். 
 

இருவர் மரணமடைந்து விட்டதாக இறப்பு சான்றிதழ்கள் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டன. 
ஏனைய பதினான்கு இராணுவத்தினரும் யாழ் நீதிவான் நீதிமன்றினால்  விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். எனினும் அவர்களால் யாழ் மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்யப்பட்டு அவர்களில் சிலருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது.

ஏனையோர் தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்தபோது சட்டமா அதிபரின் ஆலோசனையின்   அடிப்படையில் 10 இராணுவத்தினரை வழக்கு நடவடிக்கைகளிலிருந்து விடுவிக்குமாறும் ஏனைய ஐந்து இராணுவத்தினர் தொடர்பாக ஆலோசனை கிடைக்கும் வரை இராணுவத்தினரின் விளக்க மறியலை நீடிக்குமாறும் அறிவுறுத்தல் கிடைத்திருந்தது.
 

நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது அச்சுவேலி பொலிசார் குற்றப்பத்திரத்தை நீதிமன்றில் தாக்கல் செய்து இவ்வழக்கில் தற்போது விளக்கமறியலில் இருக்கும் 5 இராணுவத்தினருக்கும் எதிராக சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்தனர். 
இதனையடுத்து சந்தேகநபர்களுக்கு எதிராக சுருக்க முறையற்ற விசாரணையை யூலை மாதம் 14ஆம் திகதி ஆரம்பிக்குமாறு நீதிவான் பொலிசாருக்கு உத்தரவிட்டார். 

 

இதேவேளை இவ்வழக்கு நடவடிக்கை தொடர்பான கோவைகள் யாவும் பொலிசாரால் எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதால் வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சட்ட மா அதிபர் திணைக்களத்திடமிருந்து நடவடிக்கை பிரதிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர். 
அதனையடுத்து சந்தேகநபர்களை ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார்.

TOTAL VIEWS : 2883
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
1esqn
  PLEASE ENTER CAPTA VALUE.