மட்டக்களப்பு விமான நிலையம் 31ஆம் திகதி முதல் சிவில் விமான அதிகார சபையின் கட்டுப்பாட்டில்
2017-05-16 17:29:43 | General

களுவாஞ்சிக்குடி நிருபர் 


மட்டக்களப்பு விமானப்படை விமானத் தளம் மே 31 ஆம் திகதி முதல் சிவில் விமான அதிகார சபையின் கட்டுப்பாட்டில் வருகிறது. தனியார் வர்த்தக விமானங்கள் அன்றிலிருந்து தரையிறங்க அனுமதிக்கப்படும். 


இதுவரை காலமும் இராணுவக் கட்டுப்பாட்டு விமானங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த மட்டக்களப்பு விமான நிலையம், இம்மாத இறுதியிலிருந்து தனியார் மற்றும் வர்த்தக நோக்கிலான ஜெட் விமானங்கள் தரையிறங்குவதற்கு அனுமதிக்கப்படவுள்ளதாக சிவில் விமான அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.ஏ. நிமலசிறி தெரிவித்தார்.


சிவில் விமான அதிகார சபையினால் மட்டக்களப்பு விமான நிலையத்துக்கு இதற்கான அங்கீகாரம் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


தற்போது இலங்கை விமானப் படையின் கட்டுப்பாட்டிலுள்ள மட்டக்களப்பு விமான நிலையம் அமைச்சரவை அங்கீகாரத்தின்படி 2016 ஆம் ஆண்டு ஜூலை  முதலாம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இம்மாதம் 31 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சிவில் விமான அதிகார சபைக்கு கையளிக்கப்பட வேண்டும்.


இந்த அங்கீகாரம் வழங்கப்பட்ட இலங்கை விமான நிலைய விமான சேவை நிறுவனம் மட்டக்களப்பு விமான நிலையத்தின் பராமரிப்பைப் பொறுப்பேற்கவுள்ளது.
மட்டக்களப்பு விமான நிலையம் ஜெட் மற்றும் 50 ஆசனங்களைக் கொண்ட விமானங்களை உள்வாங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு விமான நிலையத்தின் ஓடுபாதை 1200 மீற்றர் நீளமானது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு மட்டக்களப்பு விமான நிலையத்தைப் புனரமைப்பதற்கு நிதி ஒதுக்கியிருந்தது.

அதனடிப்படையில் 317 கோடி ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு விமான நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வருடம் ஜுலை10 ஆம் திகதி ஆரம்பித்து வைத்தார்.


சிவில் விமானப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் விதமாக இரண்டு விமான சேவைகள் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கொழும்புக்கு இடையில் தினமும் நடைபெறவுள்ளதாக அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.


கிழக்கு மாகாணத்தில் உல்லாசப் பயணத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு உள்ளூர் விமான போக்குவரத்து இன்றியமையாது என தான் ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரியிடம் வலியுறுத்தி வந்ததற்கு அமைவாக இந்த விமானப் போக்குவரத்து சேவைகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டு வருவதாக கிழக்கு முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். 

TOTAL VIEWS : 1114
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
rxq7s
  PLEASE ENTER CAPTA VALUE.