13இற்கு அப்பால் ஒருமித்த நாட்டுக்குள் தீர்வொன்றே எல்லோருக்கும் தேவை;சம்பந்தன் கூறுகிறார்
2016-12-05 12:06:27 | General

ந.ஜெயகாந்தன், லெப்ரின்ராஜ்


13ஆவது திருத்தத்திலிருந்து வெகு தூரம் சென்றுவிட்டதனால் பிரச்சினைக்கு ஒருமித்த நாட்டுக்குள் தீர்வொன்றைக் காண அனைவரும் முன்வரவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.


முன்னாள் கொழும்பு மாநாகர மேயர் க.கணேசலிங்கத்தின் 10 ஆவது வருட நினைவு தினத்தையொட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்து மாமன்றம் மற்றும் இந்து வித்தியா விருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு ''தமிழரின் எதிர்காலம்'' எனும் தலைப்பில் நிகழ்த்திய விசேட உரையின் போதே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் இந்த நிகழ்வில் உரையாற்றும்போது மேலும் தெரிவித்ததாவது;


13ஆவது அரசியலமைப்பு திருத்தம் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வாக அமையாது என கருதியிருந்த முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச , சந்திரிகா குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ஷ ஆகியோரும் 2001 காலப்பகுதியில் பிரதமராக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கவும் அதனை திருத்தியமைக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் அதனை செய்ய முடியவில்லை. 


2006 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷ சர்வகட்சி குழுவை கூட்டி நிபுணர் குழுவையும் நியமித்தார். இதையடுத்து அந்த நிபுணர் குழுவும் அறிக்கைகளைச் சமர்ப்பித்திருந்தது. ஆனால் இறுதியில் எதுவும் நடக்கவில்லை. ஐ.நா , இந்தியா , ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன உள்ளிட்ட சர்வதேசத்திற்கு பல்வேறு வாக்குறுதிகளை அவர் வழங்கியிருந்தபோதும் அது நடக்கவில்லை. 


இந்நிலையில் 2011ஆம் ஆண்டு நாம் அவருடன் பேச்சுவார்த்தையொன்றையும் நடத்தியிருந்தோம். ஆனால் அதன் பின்னரும் எதுவும் நடக்கவில்லை. பின்னர் எங்களை பேச்சுக்கு அவர் அழைத்தபோதும் தீர்வுகள் கிடைக்காத, இணக்கப்பாடுகள் இல்லாத பேச்சு வேண்டாம் என நாம் அதனை நிராகரித்தோம்.

இந்தச் சூழ்நிலையில் மீண்டும் ஜனாதிபதியாக வரும் எண்ணத்தில் அரசியலமைப்பை மாற்றியமைத்து இரண்டு வருடங்களுக்கு முன்னரே தேர்தலை அறிவித்தார். ஆனால் அவரின் கட்சியின் செயலாளரான மைத்திரிபால சிறிசேன பொது எதிரணியின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 


பொதுவேட்பாளர் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் மூலமே வெற்றிபெற்றார். இந்நிலையில் அதனைத் தொடர்ந்து நடந்த பொதுத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதியின் கட்சியும் , பிரதமரின் கட்சியும் இணைந்து ஆட்சியை அமைத்தன. இதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. 


சந்திரிகாவினால் நிறைவேற்ற முடியாதுபோன அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றக் கூடிய வகையிலான பெரும்பான்மை பலம் இந்த அரசாங்கத்திற்கு இப்போது இருக்கின்றது. இந்நிலையில் ஜனாதிபதியும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார் என்பதனை அவரின் கருத்துக்கள் மூலமே புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

ஒரு கருமத்தை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்ற அவரின் எண்ணத்தின்மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். நம்பிக்கை வைக்காது கருமம் நிறைவேற்றப்படுமென நம்பிக்கை கொள்ள முடியாது.  


இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நீண்டகால அரசியல் அனுபவம் கொண்டவர் நாட்டின் வருமானம், நாட்டின் கடனைச் செலுத்தக்கூடப் போதுமானது அல்ல. இந்த நாட்டில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். நியாயமான அபிவிருத்தி அடைய வேண்டும். வெளிநாட்டு முதலீடுகள் வரவேண்டும்.

பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும். இல்லாவிட்டால் நாட்டை விற்கும் நிலைமையே ஏற்படும். ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப கடும் முயற்சிகளை மேற்கொள்கின்றார். இதில் வெற்றிக்காண வேண்டுமென்றால் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டாலே அவர் எதிர்பார்க்கும் முதலீடு மற்றும் அபிவிருத்திகள் இந்த நாட்டில் ஏற்படும். 


தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு இல்லாவிட்டால் இது ஏற்படாது. இன்றைக்கு எப்போதும் இல்லாதவகையில் நமது பிரச்சினைகள் சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2012 முதல் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அமுலாக்கம் தொடர்பாக எதிர்வரும் 2017 பங்குனி இலங்கை அரசாங்கம் ஐ.நா.வில் பதிலளிக்க வேண்டும்.

இதன்படி, முன்னெப்போதும் இல்லாத வகையில் சர்வதேச கண்காணிப்பில் பல விடயங்கள் நடக்கின்றன. இது சர்வதேசத்தின் தலையீடு அல்ல. இலங்கை செய்துகொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் இலங்கை ஒப்புக்கொண்டுள்ள விடயங்களை நிறைவேற்றாமல் இருக்கும் காரணத்தினால் அதனை நிறைவேற்றச் செய்யும் வகையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களே இவை. 


ஆகவே ஒட்டுமொத்தமாக எமக்கொரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. மூன்றில் இரண்டு கிடைக்கும் வாய்ப்பில் நாம் இருக்கின்றோம். மீண்டும் தமிழர்கள் மீது வன்முறை ஏற்பட்டுவிடக் கூடாது. அவர்கள் பரிதாபகரமானவர்களாக ஆகிவிடக் கூடாது இதனால் தேசிய பிரச்சினைக்கு முடிவு கண்டு நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டுமென சர்வதேச சமூகம் நிற்கின்றது. இந்தக் கருத்தை அவர்கள் எமக்கும் அரசாங்கத்திற்கும் கூறிவருகின்றார்கள்.


நாட்டில் இன்று குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றபோதும்கூட 30 வருடகால யுத்தத்தின் பின்னர் நாட்டில் நிரந்தர சமாதானம் , நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் எனவும் சகல இனத்தவர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டுமெனவும் கருத்துகள் நிலவுகின்றன. இதனால் தமிழ் பேசும் தமிழ் மக்களும் , முஸ்லிம்களும் ஒற்றுமையாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம். 


பாராளுமன்றம் இப்போது அரசியல் சாசன சபையாக மாற்றப்பட்டுள்ளது. நடவடிக்கைக் குழு உள்ளது. சில உபகுழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பல நிபுணர்கள் அரசியல் சாசனத்தை உருவாக்க சேர்ந்து இயங்கி வருகின்றார்கள்.  உப குழுக்களின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் திகதியும் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரியில் இது தொடர்பாக விவாதமும் நடக்கவுள்ளது.
 எம்மைப் பொறுத்தவரை ஒருமித்த, பிளவுபடாத, பிரிக்கப்படாத ,பிரிக்க முடியாத  ஒரு நாட்டுக்குள், ஒரு இலங்கைக்குள் நியாயமான, நிரந்தரமான அரசியல் தீர்வையே விரும்புகின்றோம். நாம் ஒவ்வொரு தேர்தலிலும் நாட்டுக்குள் தீர்வு வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தே வருகின்றோம்.

இதன்படி மக்கள் எமக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். எமது நாட்டில் இறைமையை அடிப்படையாக கொண்ட தீர்வே கிடைக்க வேண்டும். இது மக்களுடன் தொடர்புடைய விடயம். இந்த இறைமை ஒரு இனத்திற்கு உரித்தானதாக இல்லை. சகலருக்கும் உரித்தானதாக இருக்க வேண்டும். மாகாணங்கள் , பிராந்தியங்களில் மக்கள் அந்த இறைமையை எந்தத் தடைகளும் இன்றிப் பயன்படுத்த வேண்டும். உள்ளுராட்சி சபை பகுதிக்குள்ளும் அப்படியே பயன்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறான தீர்வே வேண்டும். இதனை நாட்டில் சகல இனத்தவர்களும் அங்கீகரிக்க வேண்டும். தற்போது கருமங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இது தொடர்பாக நாம் மக்கள் மத்தியில் செல்வோம். பிரயோசனமான, நியாயமான தீர்வு கிடைத்தால் அதனை வரவேற்போம். 


இதேவேளை வடக்குகிழக்கு இணைப்பை பொறுத்தவரையில் அது பிரச்சினைக்குரிய விடயமாகவே இருக்கின்றது. எம்மைப் பொறுத்தவரை தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒருமித்து பேசி அதற்கு நியாயமான தீர்வை காண வேண்டும். முஸ்லிம்களை ஏமாற்றி தமிழ் மக்கள் வட  கிழக்கில் எதனையும் அடைய முடியாது.

அதேபோல் தமிழ் மக்களை ஏமாற்றி முஸ்லிம் மக்களும் வட, கிழக்கில் எதனையும் அடைய முடியாது. ஆகவே நாம் ஒருமித்து பேசி பிணக்கு இன்றி தீர்த்து, சிங்கள மக்களுக்கும் சம உரிமை கொடுத்து அவர்களுக்கும் எவ்விதமான பாதிப்பும் இன்றி இதில் தீர்வை காண வேண்டும். 


பலர் தற்போதைய செயற்பாடுகளை குழப்ப முயற்சிக்கின்ற போதும் மக்கள் இறுதியான தீர்வை சர்வஜன வாக்களிப்பின் மூலம் அங்கீகரிக்க வேண்டும். இதனை எதிர்கொள்ள நாம் தயாராகவே உள்ளோம். இந்நிலையில் தலைவர்கள் மக்களிடம் சென்று அவர்களுக்கு உண்மையை கூற வேண்டும்.

பெரும்பான்மை மக்களின் அங்கீகாரமில்லாத தீர்வு பிரயோசனமற்றது. இதனால் அவர்களின் அங்கீகாரத்துடன் தீர்வு வேண்டும். இதேவேளை தீவிரவாதம் தொடர்ந்தும் பேச முடியாது என்பதுடன் ஒருமித்த நாட்டில் எமது  மக்கள் சுயமரியாதையுடன் வாழக் கூடிய தீர்வு கிடைக்க வேண்டும். 


13 ஆவது அரசியல் சாசனத் திருத்தம் துரதிர்ஷ்டவசமாக  முதல்முறை அரசியல் சாசனத்தில்   ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய  திருத்தமாக வந்தபோதிலும்கூட முதல்முறை இந்த நாட்டில்  மாகாண சபை ஏற்பட்டிருக்கின்றபோதிலும்கூட தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு ஒரு தீர்வாக  அது அமையவில்லை.

அது அமையவும் முடியாது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. அதில் எவ்விதமான கருத்து வேற்றுமைக்கும்  இடமில்லை.13 ஆவது அரசியல் சாசன திருத்தம் தமிழ் மக்களுடைய உரிமை பிரச்சனைக்குத் தீர்வாக அமையவுமில்லை,அமையவும் முடியாது.


அந்தக் காரணத்தினால்தான் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் ,சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில்,பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில்.ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் 13 ஆவது அரசியல் சாசனத்துக்கு அப்பால் சென்று பல்வேறு பிரச்சனைகள்பல விடயங்கள்  சம்பந்தமாக, ஆட்சி முறை ,அதிகாரங்கள் ,நிதி ஒழுங்குகள்,ஆளுநருடைய கடமைகள் ,காணி ,சட்டம், ஒழுங்கு எனப் பல விடயங்கள் சம்பந்தமாக பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.


நாங்கள் 13 ஆவது திருத்தத்தில் இருந்து வெகுதூரம் சென்றுவிட்டோம். ஆனால் அது ஒரு முடிவுக்கு  வரவேண்டும்அது நிறைவேற்றப்பட வேண்டும்  அமுல்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

 

TOTAL VIEWS : 678
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
szjj5
  PLEASE ENTER CAPTA VALUE.