தமிழ்க் கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும்; உதயகம்மன்பில
2016-12-06 11:49:37 | General

உலகில் ஏதாவது  ஒரு ஆயுதப் பிரிவை தோற்கடித்த பின்னர் அதன் அரசியல் பிரிவை தடை செய்வது உலக நடைமுறை என்பதால் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்ய வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.


1945 ஆம் ஆண்டு ஹிட்லர் தோற்கடிக்கப்பட்ட பின்னர் நட்பு நாடுகள் ஜேர்மனியின் நாசி  கட்சியை தடை செய்தன. 2003 ஆம் ஆண்டு  நேட்டோ படையினர் ஈராக்கின் சதாம் ஹுசைனை தோற்கடித்த பின்னர் அவரது அரசியல் கட்சியான பாத் கட்சி தடை செய்யப்பட்டது.


இதேவிதமாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவாகவே செயற்பட்டது. இதனால் அந்தக் கூட்டமைப்பை தடை  செய்ய வேண்டும்.


பாராளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை வரலாற்றில் உருவாகிய சிறந்த எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் எனக் கூறினார்.


சிறந்த அறிவுடன் எதிர்க்கட்சியை வழிநடத்தி கலாநிதி என்.எம். பெரேரா அனுபவங்களுடன் எதிர்க்கட்சியை வழிநடத்திய ஜே.ஆர். ஜெயவர்தன அரசாங்க அடக்குமுறைகளுக்கு  எதிராக எதிர்க்கட்சியை வழிநடத்திய அனுர பண்டாரநாயக்க ஆகிய எதிர்க்கட்சித் தலைவர்களை விட ஜனாதிபதி  சிறிசேனவுக்கு சம்பந்தன் எப்படி சிறந்தவரானார்?


அரசாங்கத்தின் வரவு  செலவுத் திட்டத்திற்கு எவ்வித திருத்த யோசனைகளையும் முன்வைக்காது  அதற்கு ஆதரவாக வாக்களித்த உலக வரலாற்றில் ஒரே எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்.


இதனை ஒரு முறையல்ல இரண்டு முறை செய்துள்ளார். அரசாங்கம் கஷ்டத்தில் விழும் நேரங்களில் எதிர்க்கட்சித் தலைவரே அரசாங்கத்தை காப்பாற்றி வருகிறார்.


இப்படியான எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்தின் பக்கம் சார்ந்தவர் என்றால் அவர் சிறந்த எதிர்க்கட்சித் தலைவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


தடை செய்ய வேண்டிய  கட்சி ஒன்றின் தலைவர் எதிர்க்கட்சித்  தலைவராக இருப்பது நாட்டின் துரதிர்ஷ்டம்.


அன்று கிளிநொச்சியில் புலிகளின் தலைமையகத்திற்கு சென்று தமிழ்ச் செல்வனை சந்தித்து சம்பந்தன் ஆலோசனை பெற்றது எமக்கு நினைவிருக்கின்றது.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளுக்கு உதவியது மாத்திரமல்லாது வெற்றி பெற்ற பின்னர் புலிகளுக்காக  குரல் கொடுத்தது. 


எம்.கே. ஈழவநாதன் என்பவரை நாடு கடத்த கனடா அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  செயற்பாட்டு உறுப்பினர்  எனவும் புலிகளின் உறுப்பினர் அல்ல எனவும் கூறியிருந்தார்.


எனினும் கனேடிய சமஷ்டி நீதிமன்றம் புலிகள் அமைப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்று  என தீர்மானித்தது.


இது புதிய விடயமல்ல. 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு  அறிக்கையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் அரசியல் பிரிவு என உறுதிப்படுத்தியுள்ளது.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்வது ஜனநாயகத்திற்கு அவசியமான விடயம்.  அனைவரும் வாய்ப்பை வழங்குவதே ஜனநாயகத்தின்  மூலதர்மம்.


விடுதலைப் புலிகள்  அமைப்பு வடக்கில் பலமாக இருந்த போது  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தவிர ஈ.பி.டி.பி., ஐக்கிய தேசியக் கட்சி உட்பட ஏனைய கட்சிகளின் சகல செயற்பாட்டாளர்களை கொன்றனர்.


இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏகபோகம் உருவானது. புலிகள் உருவாக்கி  கொடுத்த ஏகபோக அதிகாரத்தின் புண்ணியமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் தேர்தல்களில் வெற்றி பெற்று வருகிறது.


இதனால் வடக்கிற்கு உண்மையான ஜனநாயகம் கிடைக்க வேண்டுமாயின் ஹிட்லரின் நாசி மற்றும் சதாமின் பாத் கட்சிகளுக்கு ஏற்பட்ட நிலைமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஏற்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.

TOTAL VIEWS : 13749
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
xq5nc
  PLEASE ENTER CAPTA VALUE.