விக்னேஸ்வரனுக்காக வடக்கில் இளைஞர் புரட்சி ஆரம்பம்
2017-06-16 09:17:38 | General

த. வினோயித்


வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக  யாழ்நகரில் நேற்று இளைஞர் புரட்சி வெடித்தது. விக்னேஸ்வரனுக்கு  ஆதரவு தெரிவித்து அவரின்  இல்லத்திற்கு முன்பாக திரண்ட இளைஞர் கூட்டத்தின்  உணர்வுகளை பார்த்து  விக்னேஸ்வரனே கண்கலங்கிய சம்பவமும் இடம்பெற்றது.


வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக  இலங்கை தமிழரசுக் கட்சியினால் நம்பிக்கையில்லாப் பிரேரணை  வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் புதன்கிழமை இரவு கையளிக்கப்பட்ட நிலையில், வட மாகாணத்தில் தமிழரசுக் கட்சிக்கு எதிரான  ஒரு கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

பல கட்சிகள், சிவில் அமைப்புகள், பொதுமக்கள்  விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில்,  ஜல்லிக்கட்டுக்கு  ஆதரவாக சென்னை மெரீனா கடற்கரையில் திரண்ட இளைஞர் கூட்டம் போல்  நேற்று வியாழக்கிழமை வடக்கு மாகாண சபை பேரவை செயலகம் முன்பாகவும்  முதலமைச்சரின் இல்லத்திற்கு முன்பாகவும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்டு தமது ஆதரவை மிகவும் உணர்வுபூர்வமான நிலையில் முதலமைச்சருக்கு வெளிப்படுத்தினர்.


 முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் தமிழரசுக் கட்சியால் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டதையடுத்து  முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அனைத்து இளைஞர், யுவதிகளையும், அணிதிரளுமாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக அழைப்புகள் விடுக்கப்பட்டதை அடுத்தே  ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் நேற்று முதலமைச்சருக்கு ஆதரவாக ஒன்றுகூடினர்.

நேற்று மாலை 3 மணியளவில் வட மாகாண சபை பேரவை செயலகம் முன்பாக முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்த இளைஞர் அணி,  சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னர் அங்கிருந்து முதலமைச்சரின் இல்லத்தை நோக்கி நகர்ந்து  அங்கும் ஆதரவுப் போராட்டத்தில்  ஈடுபட்டது. 


"மீட்பராக வந்த முதல்வரைத் துரோகத்தால் அழிப்பதா?', "விக்னேஸ்வரனே எங்கள் முதல்வர்', "மக்களின் தெரிவை மறுக்க நீங்கள் யார்?', "துரோகம் செய்துவிட்டு மக்கள் முன்வர துணிவுண்டா?', "விக்னேஸ்வரனுடன் எழுவோம்', "நீதியரசரை நீக்க நீ யார்?',"தமிழரின் நீதிக்குரலை  நசுக்க இடமளியோம்“ என்ற கோஷங்களை எழுப்பியவாறும் பதாகைகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இளைஞர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து முதலமைச்சர் அவர்களைச் சந்திக்க வருகை தந்த போது  உணர்ச்சிப்பெருக்கால் இளைஞர், யுவதிகள் பெரும் கோஷங்களை எழுப்பியதையும் அவதானிக்க முடிந்தது.  இளைஞர்களின் இந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையைப் பார்த்து முதலமைச்சரும் கண்கலங்கியதையும் காண முடிந்தது.

போராட்டத்தில் இளைஞர்கள் சிலர் உரையாற்றி, தமது ஆதரவு என்றென்றும் முதலமைச்சருக்கே உண்டெனக் கூறியதுடன் , முதலமைச்சருக்காக தாம் எதனையும் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தனர்.  அத்துடன் தொடர்ந்தும் அவரே முதலமைச்சராக இருப்பார் என தமக்கு உறுதிமொழி வழங்குமாறும் முதலமைச்சரை வலியுறுத்தினர். 


இதற்கு முதலமைச்சர் பதில் கூறுகையில், உங்களுக்கு என்னால் ஒரே ஒரு உறுதி மொழி மட்டுமே வழங்க முடியும். நான் என்றென்றும்  மக்களாகிய உங்களுடன் தான் இருப்பேன் என்று கண்கலங்கியவாறு கூறினார். 


இதேவேளை, “முதலமைச்சருக்கு எதிராக திரும்பியுள்ள கறுப்பு ஆடுகளே, நீங்களாகத்  திருந்துங்கள், இல்லையேல் திருத்தப்படுவீர்கள்“ என  இளைஞர்கள் தொடர்ந்தும் கோஷமிட்டுக்கொண்டிருந்தனர். 

 

TOTAL VIEWS : 2362
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
rg9oh
  PLEASE ENTER CAPTA VALUE.