காணாமல் போனோர் அலுவலகம் வடக்கு கிழக்கிலும்  நிறுவப்பட வேண்டும்
2017-10-21 18:48:39 | Leftinraj

இலங்கை வந்துள்ள ஐ.நாவின் உண்மை, நீதிஇ நஷ்டஈடு, மற்றும் மீள் நிகழாமையை உறுதி செய்வதற்கான விசேட நிபுணர் பப்லோ டிக்ரீப் அவர்களுக்கும் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் அவர்களுக்கும் இடையில் இன்று கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

காணி விடுவிப்பு, காணாமல்ஆக்கப்பட்டோர்,மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் போன்ற விடயங்கள் தொடர்பில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விசேட நிபுணரின் கவனத்திற்கு இரா. சம்பந்தன் கொண்டுவந்தார். 

இக்கலந்துரையாடலில் காணிவிடுவிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன்,

எமது மக்கள் தமது காணிகள் தொடர்பில் வெறும் உணர்ச்சிக்கும் அப்பாலான இணைப்பினை கொண்டுள்ளார்கள், இந்த மக்கள் சில பிரதேசங்களில் கடந்த 300 நாட்களுக்கும் அதிகமாக தமது காணிகளை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என தெரிவித்தார். 

மேலும் இவர்கள் மழையிலும் வெயிலிலுமாக பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தமது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என இந்த போராட்டங்களில் மிகவும் தீர்மானமாக உள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.

மேலும், இந்த விடயமானது மக்களின் உணர்வுகளோடும் அவர்களது உரிமைகளோடும் சம்பந்தப்பட்ட விடயம் என்பதனை அரசாங்கம் உணர்ந்து கொள்ளவேண்டும் எனவலியுறுத்திய இரா. சம்பந்தன், உண்மையான புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டுமெனில் இந்த யதார்த்தம் புரிந்து கொள்ளப்பட வேண்டும் எனவும் எனவே இந்த விடயங்கள் மேலும் தாமதமின்றி முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். 

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்,

´ஒருதாய் தனது மகனை படையினரிடமோ அல்லது பொலிஸாரிடமோ கையளித்திருந்தால் அவருக்கு என்ன நடந்தது என்பதனை அறிந்து கொள்ளும் உரிமை உள்ளது. அந்த உரிமையை மறுக்க முடியாது எனவும் வலியுறுத்தினார்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் செயலாக்கம் தொடர்பில் காணப்படும் தாமதம் குறித்து தமது கரிசனையை வெளிப்படுத்திய இரா. சம்பந்தன், இந்த அலுவலகம் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் நிறுவப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். 

அரசியல் கைதிகள் தொடர்பில் பேசிய எதிர்க்கட்சி தலைவர், ´இவர்கள் களவு செய்த காரணத்தினாலோ அல்லது தமது நன்மைக்காக சூறையாடிய காரணத்தினாலோ காவலில் இருக்கவில்லை. இந்த ஒவ்வொருவரினதும் வழக்குகள் அரசியல் பரிணாமத்தினை கொண்டுள்ளது. ஆகவே இவை அந்த அடிப்படையில் நோக்கப்பட்டு முடிவிற்கு கொண்டு வரப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். 

மேலும் பயங்கரவாத தடைச்சட்டமானது மிக கேடானதும் இந்நாட்டு சட்ட புத்தகங்களில் இருந்து நீக்கப்பட வேண்டிய ஒன்றும் எனஅரசாங்கமானது ஒப்புக்கொண்டுள்ள போது, எந்த அடிப்படையில் அதே சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவர்களை தொடர்ந்தும் சிறையில் வைத்திருக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார். 

இந்த விடயங்களில் தவறிழைக்க முடியாது என தெரிவித்த இரா. சம்பந்தன்,அவ்வாறு தவறிழைக்கின்ற பட்சத்தில் அது நல்லிணக்க படிமுறைகளிலே பாரிய தாக்கத்தினைஏற்படுத்தும் எனவும் வலியுறுத்தினார். 

மேலும் ஒரு சிலர் நல்லிணக்க மற்றும் அரசியல் தீர்வு முயற்சிகளை குழப்புவதற்கு தயாராக உள்ள நிலையில் இந்த விடயங்கள் அவர்களுக்கு சாதகமாக இருப்பதனை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தார். 

இலங்கை மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றுவதனை ஐ.நா. உறுதி செய்ய வேண்டும் என விசேட நிபுணரை வலியுறுத்திய இரா. சம்பந்தன்இ இந்த வாக்குறுதிகள் இலங்கை நாட்டினதும் அதன் மக்களின் நன்மையினையும் கருத்திற் கொண்டு இலங்கை அரசாங்கத்தினால் தன்னார்வமாக கொடுக்கப்பட்டவை என்பதனை சுட்டிக்காட்டிய அதேவேளை அவற்றினை இலங்கை அரசு மதித்து நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் இவை வெறுமனே எழுத்துருவில் மாத்திரம் இருக்க கூடாது எனவும் தெரிவித்தார். 

மேலும் தனது விஜயத்தின் முடிவில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் தனது கருத்தினை தெரிவிக்கவுள்ளதாக கூறியவிசேட நிபுணர் இலங்கையில் நிலையான சமாதானத்தினை ஏற்படுத்தும் நோக்கிலும் அரசியல் தீர்வினை அடையும் வகையிலும் தனதும் ஐ.நாவினதும் தொடர்ச்சியான பங்களிப்பு இருக்கும் என்பதனையும் இச்சந்திப்பில் வலியுறுத்தினார்.

TOTAL VIEWS : 506
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ces3w
  PLEASE ENTER CAPTA VALUE.