மாதாந்த வருமானம் 1 இலட்சம் ரூபாவை தாண்டினால் வரி
2017-09-08 09:56:29 | General

பா.கிருபாகரன், டிட்டோகுகன்


மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் ஈட்டும் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்று சபையில் நேற்று வியாழக்கிழமை தெரிவித்த நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் வரி கோப்பு இலக்கமொன்று அறிமுகம் செய்யப்படவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.


எவ்வாறிருப்பினும், வரி கோப்பு இலக்கமுடைய அனைவரும் வரி செலுத்த வேண்டியதில்லை என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். 
பாராளுமன்றத்தில் நேற்று உள்நாட்டு இறைவரி சட்டமூலத்தை விவாதத்துக்கென சமர்ப்பித்து உரையாற்றும் போதே நிதி அமைச்சர் சமரவீர இந்த விடயங்களை குறிப்பிட்டார்.


இந்த சட்டத்தினூடாக வருடாந்தம் 45 பில்லியன் ரூபா வருமானம் ஈட்ட அரசாங்கம் உத்தேசித்துள்ள போதிலும், மக்கள் மீது சுமையேற்றுவதற்காக இந்தப் புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டம் கொண்டுவரப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அமைச்சர் சமரவீர இதன்போது மேலும் பேசுகையில்; 

மக்கள் மீது சுமையேற்றுவதற்காக புதிய இறைவரிச் சட்டம் கொண்டுவரப்படவில்லை. மறைமுக வரியை குறைத்து நேரடி வரியை அதிகரிக்கும் வகையிலே இந்த சட்டம் அமுல்படுத்தப்படும். 


இதன் பிரகாரம், ஒரு இலட்சம் ரூபாவை விட அதிக மாத வருமானம் பெறும் அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் வரிக் கோப்பு இலக்கமொன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

எனினும், வரிக் கோப்பு இலக்கம் உள்ள அனைவரும் வரி செலுத்த வேண்டியதில்லை. புதிய சட்டத்தினூடாக வரி செலுத்தாமல் ஏமாற்றும் நபர்களுக்கு எதிராக துரித நடவடிக்கை எடுக்கப்படும்.  இந்த சட்டத்தினூடாக வருடாந்தம் 45 பில்லியன் வருமானம் ஈட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. நாட்டை நேசிக்கும் அனைவரும் வரி செலுத்தி பொருளாதாரத்தில் பங்காளியாக வேண்டும். 


தனியார் வகுப்பு (ரியூஷன்) நடத்தும் ஆசிரியர்கள் கோடிக் கணக்கில் உழைக்கிறார்கள். தனியார் மருத்துவ சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள், சட்டத்தரணிகள் போன்றோரும் அதிக வருமானம் பெறுகின்றனர்.

இவர்கள் வருமானவரி செலுத்துகிறார்களா என்ற கேள்வி இருக்கிறது. ஈட்டும் வருமானத்தில் தொகையொன்றை செலுத்த வேண்டும். இதன் காரணமாகவே மறைமுக வரியைக் குறைத்து நேரடி வரியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


நாட்டில் 5.1 மில்லியன் வீடுகள் இருக்கின்றன. அவற்றில் 1.02 மில்லியன் வீடுகள் செல்வந்தர்களின் வீடுகளாகும். நாட்டு மக்களில் 60 வீதமானவர்களே வரி செலுத்துகின்றனர். நாட்டின் மொத்த வருமானத்தில் 53 சதவீதத்தை  மொத்த சனத்தொகையில் 20 சதவீதமாக உள்ள செல்வந்தர்களே பெறுகின்றனர்.

அவர்கள் ஈட்டும் வருமானத்திற்கு திருப்தியாக வரி செலுத்துவதில்லை. வரி செலுத்துவதில் கிர்கிஸ்தானை விட எமது நாடு பின்னிலையிலேயே இருக்கிறது.
புதிய சட்டத்தினூடாக மறைமுக வரி குறைக்கப்பட்டு நேரடி வரி அதிகரிக்கப்படும்.

நேரடி வரி 20 வீதமாகவும் மறைமுக வரி 80 வீதமாகவும் தற்போது காணப்படுகிறது. இதனை 40 இற்கு 60 என்ற அடிப்படையில் மாற்றியமைப்பதே எமது நோக்கமாகும். 
ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 300 பேர் மட்டுமே வரி செலுத்துவதற்காக பதிவு செய்திருந்தார்கள்.

தொழிற் படையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைந்த அளவாகும். வருமான வரி செலுத்துவதற்காக பதிவு செய்துள்ள கம்பனிகளில் 35 சதவீதம் மட்டுமே உரிய காலத்திற்குள் வரி செலுத்துகின்றன. 46 சதவீதமானவை ஒரு மாதத்தின் பின்னர் செலுத்துகின்றன. வரி செலுத்துவது தாமதமாவதால் நாட்டின் செலவினங்களை முகாமைத்துவம் செய்வதில் பாதிப்பு ஏற்படுகிறது.


18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் வரிக்கோப்பு  இலக்கமொன்றை வழங்க முடிவுசெய்துள்ளோம். வேறு நாடுகளில் இந்த நடைமுறை காணப்படுகிறது. வரிக் கோப்பு  இருக்கும் அனைவரும் வரி செலுத்த தேவையில்லை. வருமானம் பெறாதவர்கள் வரி செலுத்த தேவையில்லை.

இவ்வாறு வரி இலக்கம் இருப்பவர்கள் சேவைகளை பெறுகையில் சில சலுகைகளை வழங்கவும் உத்தேசித்துள்ளோம். 2020 ஆம் ஆண்டாகும் போது மறைமுக வரி குறைக்கப்பட்டு நேரடி வரி அதிகரிக்கப்படுவதோடு வற் வரி வீதத்தை இதன்மூலம் குறைக்க முடியும்.


இந்த சட்டத்தின் பின்னர் சட்டவிரோதமாக வருமானம் ஈட்டும் தொகை குறைவடையும். தற்போதுள்ள வருமான வரி முறை சிக்கலானது. இடைக்கிடையே மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களும் இதனை மேலும் சிக்கலாக்கின. அரச வருமானத்தை பலப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த உள்நாட்டு இறைவரிச் சட்டத்தினூடாக மக்கள் மீது சுமையேற்றப்படாது.


ரூபா ஒரு இலட்சத்திற்கு குறைவான மாத வருமானம் பெறும் எவரும் வருமான வரி செலுத்தத் தேவையில்லை. குறைந்த மற்றும் மத்திய வருமானம் பெறுவோர் வருமான வரி செலுத்துவது இந்த சட்டத்தினூடாக மட்டுப்படுத்தப்படும். சிரேஷ்ட பிரஜைகளின் வட்டி வருமானம் ஒரு இலட்சத்து 25 ஆயிரத்திற்கு குறைவாக இருந்தால் வரியில் இருந்து விலக்களிக்கப்படும்.

ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வட்டி வருமானம் பெற்றால் வரி செலுத்த வேண்டும். வியாபார நிறுவனங்களிடம் அறவிட உத்தேசிக்கப்பட்ட 28 சதவீத வரியை 14 சதவீதமாக குறைக்க முடிவு செய்துள்ளோம். தகவல் தொழில்நுட்பம், கல்வி, சுற்றுலா, விவசாயம் போன்ற துறைகளுக்கு இந்த சலுகை வழங்கப்படும்.


கூடுதல் வருமானம் பெறுவோரின் வரி எல்லைகள் விஸ்தரிக்கப்படும். வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நீண்ட காலம் பிடிக்கிறது. இதனை மாற்றி துரிதமாக சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.


பொருளாதார சவால்களை சமாளிப்பதற்கு இந்த சட்டம் உதவியாக அமையும். இந்த சட்டத்தினூடாக வருடத்திற்கு 45 பில்லியன் ரூபா வருமானம் ஈட்ட எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சட்டத்தை இரு கட்டங்களாக அமுல் படுத்த உத்தேசித்துள்ளோம்.

முதலாவது கட்டத்தின் கீழ் வருமான வரி தொடர்பான விடயங்கள் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும். முழுமையான சட்டம் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். 

 

TOTAL VIEWS : 1228
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
njt6i
  PLEASE ENTER CAPTA VALUE.