'விக்கி'க்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
2017-06-15 09:52:04 | General

த.வினோயித்


வடமாகாண அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததன் எதிரொலியாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் நேற்று புதன்கிழமை இரவு கையளிக்கப்பட்டுள்ளது. 


மாகாண அமைச்சர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்
 வடமாகாண முதலமைச்சர் விசாரணைக் குழு ஒன்றை நியமித்து விசாரணைகளைப் மேற்கொண்டு அறிக்கை பெற்றிருந்தார்.

இந்த அறிக்கையின் பிரகாரம் 2 அமைச்சர்களை பதவி விலகுமாறும், மற்றைய இரு அமைச்சர்களை தற்காலிக விடுமுறை எடுக்குமாறும் நேற்று நடைபெற்ற வடமாகாண சபையின் விசேட அமர்வில் முதலமைச்சர் கேட்டிருந்தார். இதனையடுத்து நேற்று மாலை இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் அவசரமாகக் கூடிக் கலந்தாலோசித்திருந்தனர். 


இந்தக் கலந்தாலோசனையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதென தீர்மானிக்கப்பட்டது. 


இதனை தொடர்ந்து நேற்று இரவு 9 மணியளவில் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்குச் சென்ற வடமாகாண சபையின் 3 அமைச்சர்கள் உள்ளிட்ட 16 பேர் வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கை யொப்பமிட்டனர். மேலும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு 22 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக நம்பிக்கையில்லா பிரேரணையை நேற்று ஆளுநரிடம் வழங்கிய உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். 


இதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நேற்றைய தினம் மாகாண அமைச்சர்களான பா.சத்தியலிங்கம், பா.டெனீஸ்வரன் மற்றும் த.குருகுலராஜா மற்றும் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், பிரதி அவைத் தலைவர் வி.கமலேஸ்வரன் ஆகியோரும் உறுப்பினர்களான அயூப் அஸ்மின், இ.ஆர்னோல்ட், கே.சயந்தன், எஸ்.சுகிர்தன், சு.பசுபதிப்பிள்ளை, எஸ்.அரியரட்ணம், ரி.சிவயோகம், சிராய்வா, ஜவாகீர், அ.பரஞ்சோதி, ஜயதிலக, ஆகியோர் கையொப்பமிட்ட நிலையில், நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேயிடம் கையளித்துள்ளார். 


எனினும் இதுதொடர்பாக  இதில் கைச்சாத்திட்ட உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்துச் சொல்ல மறுத்துள்ளனர். இந்நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணையின் அடிப்படையில், ஆளுநர் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பார் என கூறப்படுகிறது.


இதேவேளை நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பின் இறுதியில் ஆளுநர் அலுவலகத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் சி.தவரசா வருகை தந்திருந்தார். இந்த வருகை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரிடம் கேட்டபோது, தான் இதில் கையொப்பமிடுவதற்காக வரவில்லை எனவும் ஆளுநர் அழைத்தமையினாலேயே வந்ததாகவும் கூறியதுடன், மேற்படி நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பதை அந்த நேரம் பார்த்துக்கொள்ளலாம் என்றும் கூறினார். 

 

TOTAL VIEWS : 1372
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ed1bo
  PLEASE ENTER CAPTA VALUE.