வடக்கு, கிழக்கில் இன்று நினைவேந்தல்
2017-05-18 10:31:17 | General

வன்னியின் முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப் போரில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் மே 18 நினைவு தினம் இன்று வியாழக்கிழமை வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் தமிழர் வாழும் புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.


இந்த நினைவேந்தல் தினத்தில் பங்கேற்று அஞ்சலி செலுத்துமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். ஜனநாயக போராளிக் கட்சி மற்றும் பொது அமைப்புகள் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.


இன்று அனுஷ்டிக்கப்படவுள்ள மே 18 நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசினால் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளபோதும் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் பூரணப்படுத்தப்பட்டுள்ளன.


நிவைவேந்தல் நிகழ்வின் பிரதான நிகழ்வு வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலையின் பின்புறமாகவுள்ள இடத்தில் காலை 9 மணிக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளது.


இறுதி யுத்தத்தில் பலியானவர்களின் நினைவு வாரம் கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமாகியது. யாழ்ப்பாணத்தின் செம்மணி படுகொலை நினைவிடத்தில் ஆரம்பமாகி தொடர்ந்து வடக்கு, கிழக்கு பகுதிகளில் இடம்பெற்றன. இந்நிலையிலேயே பிரதான நிகழ்வு இன்று வியாழக்கிழமை முள்ளிவாய்க்காலில் நடைபெறவுள்ளது.


நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமாகி முதல் 3 நிமிடம் மௌன அஞ்சலி இடம்பெறவுள்ளது. இதையடுத்து தீப அஞ்சலி, மலர் அஞ்சலி நடைபெற்று அஞ்சலி உரைகள் இடம்பெறவுள்ளதாக நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.


அத்துடன் மக்கள் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு வசதியாக பல இடங்களிலுமிருந்து போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக காலை 7.30 மணிக்கும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் மற்றும் விசுவமடு வள்ளுவர்புரம் பாடசாலை முன்பாக காலை 8 மணிக்கும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு இலவச பஸ் சேவை இடம்பெறவுள்ளது.


அதுபோல் விசுவமடு  தொட்டியடிச் சந்தி, விசுவமடு சந்தி, முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், வவுனியா பஸ் நிலையம், கிளிநொச்சி டிப்போ சந்தி, மன்னார் பஸ் நிலையம், தொண்டமானாறு சந்தி, கைதடி சந்தி, காரைநகர் சந்தி, யாழ். பஸ் நிலையம் முன்பாக காலை 6.30 மணிக்கு பஸ் சேவை இடம்பெறவுள்ளதாகவும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.


இது இவ்வாறிருக்க, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நினைவேந்தல் நிகழ்வை முள்ளிவாய்க்கால் கிழக்கு கரையின் 46 ஆவது கிலோமீற்றர் கல்லிருந்து புனித சின்னப்பர் ஆலய வீதியில் செல்லும் கடற்கரையில் பிற்பகல் 2.30 மணிக்கு நடத்தவுள்ளது. இந்நிகழ்வு அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெறவுள்ளது.


இதேவேளை மே 18 தினத்தை கரிநாளாகவும் யுத்தத்தின்போது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதால் மக்கள் உணவு உண்ண முடியாமல் இருந்ததை நினைவு கூர்ந்து, அன்றைய தினத்தில் கஞ்சியைப் பருகுமாறும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.


இது இவ்வாறிருக்க, ஜனநாயகப் போராளிகள் கட்சி முள்ளிவாய்க்கால் இரட்டைப் புளியடிப் பகுதியில் நினைவேந்தலை நடத்தவுள்ளது. விடுதலைப் போராட்டத்தின் இறுதியில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இரட்டைப் புளியடி கடற்கரையில் மாலை 4 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வை நடத்தவுள்ளதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி தெரிவித்தார்.


இதேவேளை யாழ்ப்பாண சர்வமத குழுவினரால் முள்ளிவாய்க்கால் பராகப்பல் பழுதடைந்த கடற்கரையில் காலை 9 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படவுள்ளது. இதில் தெற்கிலிருந்து வரும் தேரர்களும் கலந்துகொள்ளவுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனின் ஏற்பாட்டில் வாகரை பிள்ளையார் ஆலய முன்றிலில் காலை 9 மணிக்கு நினைவேந்தல் நடைபெறவுள்ளது.


அம்பாறையில் கல்முனை காரைதீவில் மாகாண சபை உறுப்பினர் கலையரசனின் ஏற்பாட்டில் பிற்பகல் 2.30 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படவுள்ளது.
மன்னார் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு அடம்பனில் காலை 9.15  மணிக்கு இடம்பெறவுள்ளது.


இதேவேளை சிவில் அமைப்புக்கள் நினைவேந்தல் நிகழ்வை முள்ளிவாய்க்காலில் மாலை 3 மணிக்கு நடத்தவுள்ளன. இதன்போது கொல்லப்பட்ட உறவுகளின் நடுகற்கள் முள்ளிவாய்க்காலில் சிலை உள்ள இடத்தில் வைக்கப்படும்.


இதேவேளை பிரதான நிகழ்வு நடைபெறும் இடமான முள்ளிவாய்க்காலுக்குச் செல்ல முடியாதவர்கள், காலை 9.30 மணிக்கு தாம் இருக்குமிடங்களில் 3 நிமிடம் மௌன அஞ்சலியை செலுத்தி தீபமேற்றி அனுஷ்டிக்குமாறு வட மாகாண சபையும் தமிழ் மக்கள் பேரவையும் கேட்டுள்ளன.

TOTAL VIEWS : 1142
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
p5vkq
  PLEASE ENTER CAPTA VALUE.