அஞ்சல் சேவை முற்றாக முடக்கம்
2017-06-14 09:18:17 | General

ந.ஜெயகாந்தன்


வரலாற்று முக்கியத்துவத்துடன் கூடிய தபாலக கட்டிடங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய அரசாங்கத்தினால் நடவடிக்கையெடுக்கப்படுவதாகத் தெரிவித்து தபால் சேவை ஊழியர்களினால் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை பிரதான தபாலக கட்டிடம், நுவரெலியாவிலுள்ள பிரதான தபால் அலுவலக கட்டிடம் ,  காலி கோட்டையில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தபாலக கட்டிடம் , கண்டி தபால் அப்பியாசக் கல்லூரி மற்றும் பிரதேச தபால் பிரிப்பு மத்திய நிலைய கட்டிடம் ஆகியவற்றையே அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனமொன்று விற்க திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 


இந்தியாவின் ஹவனர்ஸ் ஹோட்டல் கோப்ரேசன் என்ற தனியார் நிறுவனத்திற்கே இந்தக் கட்டிடங்களை விற்க திட்டமிடப்பட்டுள்ளதாக தபால் ஊழியர் சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. இதன்படி இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு பூராகவுமுள்ள சகல பிரதான மற்றும் உப தபால் அலுவலகங்களிலும் தபால் ஊழியர்கள் நேற்று அதிகாலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இதனால் சகல தபால் நிலையங்களின் பணிகளும் முற்றாக ஸ்தம்பிதமடைந்ததுடன் அந்த தபால் நிலையங்கள் காலை முதல் மூடப்பட்டிருந்தன.
இது மக்களின் சொத்து எனவும் இதனை விற்பதற்கு அரசாங்கத்திற்கு உரிமைகள் கிடையாது எனவும் இதன்படி அரசாங்கம் அந்தக் கட்டிடங்களை விற்கும் தீர்மானத்தை கைவிட வேண்டுமெனவும் இல்லையேல் தற்போது முன்னெடுக்கப்படும் 48 மணி நேர போரட்டத்தை எதிர்காலத்தில் தொடர் போராட்டமாக முன்னெடுக்க நேரிடுமெனவும் தபால் சேவை தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.


இந்நிலையில் 12 ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை தபால் சேவை ஊழியர்களின் சகல விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களத்தின் தபால் மா அதிபர் அறிவித்திருந்த போதும், ஒன்றிணைந்த தபால் சேவை ஊழியர்கள் எவரும் நேற்றைய தினம் பணிகளுக்குச் சென்றிருக்கவில்லை.


இவர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக முக்கிய கடிதங்கள் பரிமாற்றத்தில் சிக்கல் நிலைமை ஏற்படும் என்பதுடன், மத்திய தபால் பகிர்ந்தளிப்பு நிலையங்களில் கடும் நெருக்கடி நிலைகள் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. 


அத்துடன் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை அனுப்பும் திகதி நாளை 15 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளதால் இதுவரை விண்ணப்பங்களை அனுப்பாத மாணவர்களும் இந்த தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தினால் பாதிப்படையக் கூடுமென்பதும் குறிப்பிடத்தக்கது.

 

TOTAL VIEWS : 729
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
kf6qu
  PLEASE ENTER CAPTA VALUE.