கலப்பு நீதிமன்ற ஏற்பாடு நீக்கப்படாது; கொழும்பு - ஜெனீவாவில் இராஜதந்திர முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை
2017-03-20 13:05:58 | General

இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 2015 தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்த மேலும் இரு வருட கால நீடிப்பை வழங்க வேண்டுமென்ற கொழும்பின் கோரிக்கைக்கு பேரவையின் உறுப்பு நாடுகளில் பெரும்பாலானவை இணக்கம் தெரிவித்திருக்கின்ற போதிலும் வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பான தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் குறிப்புகளை திருத்திக்கொள்வதற்கு அல்லது நீக்கிவிடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றிகரமாக அமையவில்லையென அறிய வருகிறது.


இந்த வாரம் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கணிசமான நாடுகள் தீர்மானத்தை தற்போது இடம்பெற்று வரும் பேரவையின் 34 ஆவது அமர்வில் முன்நகர்த்தவுள்ளன. 2015 அக்டோபர் 30/1 தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கைக்கு இரு வருட கால அவகாசத்தை வழங்குவதாக இத்தீர்மானம் அமைவதற்கு சாத்தியமான சகல வெளிப்பாடுகளும் காணப்படுவதாக ஆளும் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. 

இலங்கையின் தூதுக்குழுவிற்கு பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவை தலைமை தாங்குமாறு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கேட்டிருக்கிறார். இந்நிலையில் 2015 தீர்மானத்தில் உள்ளடங்கியுள்ள ஏற்பாடுகளில் மாற்றத்தை மேற்கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படவில்லையென அறியவருகிறது.

எவ்வாறாயினும் ஜெனீவாவிலும் கொழும்பிலும் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் கலப்பு நீதிமன்றம் தொடர்பான குறிப்புகளில் திருத்தம் மேற்கொள்வதற்கு அல்லது நீக்கிவிடுவதற்கு கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன. மார்ச் 7 இல் ஜெனீவாவில் இடம்பெற்ற உத்தியோகப் பற்றற்ற சந்திப்பின் போது பிரசன்னமாகியிருந்த நாடுகள் மத்தியில் இலங்கை தொடர்பான நல்லெண்ணம் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. 

இந்த விடயம் அரசாங்க தலைவர்கள் சிலர் மத்தியில் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்திருந்தது. இரு வருட கால நீடிப்பை பாதிக்கக்கூடியதாக அமையுமெனவும் எதிர்பார்ப்புகள் தற்போது அதிகரித்துள்ளன. அமெரிக்காவில் ட்ரம்பின் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை அணுகுமுறையானது தெளிவானதாகவும் அதேசமயம் விடயங்களில் மாற்றம் ஏற்படுமெனவும் எதிர்பார்ப்பு காணப்பட்ட நிலையில், அந்த நம்பிக்கை இப்போது அதிகரித்திருப்பதாக தோன்றுகிறது. 

எவ்வாறாயினும் இலங்கை விவகாரத்தை கையாள்வதற்கு தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதம பிரதி உதவி அமைச்சர் வில்லியம் ஈ ரொட்டிற்கு அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ரெக்ஸ் ரில்லர்ஷன் முழுமையான அதிகாரத்தை வழங்கியுள்ளார் என அறியப்பட்டிருக்கிறது. வாஷிங்டனில் ரொட்டை இலங்கைக்கான அமெரிக்காவிலுள்ள தூதுவர் பிரசாத் காõரியவசம் சந்தித்துள்ளார். பின்னர் வெளிவிவகார அமைச்சிற்கு இரகசியமான குறிப்பொன்றை அனுப்பியிருப்பதாகவும் அதில் கொள்கையில் எந்தவொரு குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் ட்ரம்பின் நிர்வாகம் எடுப்பதற்கு இன்னமும் ஆட்களும் இருக்கின்றனர் எனவும் அவர் கூறியிருந்ததாகவும் ஆங்கில ஊடகம் ஒன்று நேற்று குறிப்பிட்டிருந்தது.


இதேவேளை இலங்கைக்கு கால நீடிப்பை வழங்குவதற்கான உத்தேச தீர்மானம் (34/1) மற்றும் ஏனைய விடயங்களில் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்கும் அதேசமயம் 2015 அக்டோபர் 1  இன் தீர்மானம் 30/1 ஐ அமுல்படுத்துவது மற்றும் அதில் அடங்கியுள்ள விடயங்களை அங்கீகரிப்பது மேலதிகமான குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு தேவையானது‘ என்று உத்தேச தீர்மானம் கூறுகிறது.


“ ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த விரிவான அறிக்கையை மெச்சுவதுடன்   மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தில் கோரப்பட்டிருந்ததன் பிரகாரம் நிலுவையாக இருக்கும் பேரவையின் 30/1 தீர்மானத்தில் அடையாளம் காணப்பட்ட நடவடிக்கைகளை முழுமையாக அமுல்படுத்துவதற்கு  இலங்கை அரசாங்கத்திடம் கோரப்படுகின்றது என்றும் உத்தேச தீர்மானத்தில் உள்ளடக்கம் அமைந்திருப்பதாக அறியவருகின்றது. 


2015 அக்டோபர் 30/1 தீர்மானம் மற்றும் பிரகடனப்படுத்தப்பட்ட ஏனைய விடயங்களில் “சட்ட ஆட்சியை பேணவும்  இலங்கையின் சகல சமூகங்கள் மத்தியிலும் நம்பிக்கையை கட்டியெழுப்பவும் பதிலளிக்கும் கடப்பாடு அத்தியாவசியம் என்பதை இலங்கை அரசாங்கம் அங்கீகரித்திருந்தமை வரவேற்கப்படுகின்றது. 

பிரயோகிக்கத்தக்கதாக சர்வதேசம் மனிதாபிமான சட்ட மீறல்கள், மனித உரிமை துஷ்பிரயோகங்கள் மற்றும் மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு விசேட சட்டத்தரணியொருவருடன் நீதித்துறை பொறிமுறையை ஏற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தின் யோசனையை மெச்சுவதாகவும் அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

நம்பகரமான நீதித்துறை நடவடிக்கையில் சுதந்திரமான நீதித்துறை மற்றும் விசாரணைக்கான நிறுவனங்களை கௌரவம் மற்றும் பக்கச்சார்பற்றவர் என அறியப்பட்ட தனிப்பட்டவர்களினால் தலைமை தாங்கப்படவேண்டுமென்பது உள்ளடங்கலாக நம்பகரமான நீதித்துறை பொறிமுறை உறுதிப்படுத்தப்படுகின்றது. 

அத்துடன் ஏனைய வெளிநாட்டு நீதிபதிகள், பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள், பொதுநலவாயம் உள்ளடங்கலாக இலங்கையின் நீதித்துறையின் பொறிமுறையின் பங்கேற்பும் முக்கியமானது என்பதை உறுதிப்படுத்தப்படுகின்றது‘ எனவும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்து.


படையினர் மீதான போர்க்குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கமாட்டாரென ஜனாதிபதி சிறிசேன திரும்பத் திரும்ப உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்  மார்ச் 4 இல் விமானப்படையினர் மற்றும் பொலிஸார் மத்தியில் உரையாற்றிய போது ஆயுதப்படைகளின் சகல உறுப்பினர்களையும் பொலிஸாரையும் நான் பாதுகாப்பேன் என்று கூற விரும்புகின்றேன். ஜனாதிபதி மற்றும் ஆயுதப்படைகளின் தலைவர் என்ற முறையில் இதனைச் செய்வார் என அவர் பிரகடனப்படுத்தியிருந்தார். ஜனாதிபதியின் உரை ஜனாதிபதியின் இணையத்தளத்தில் ஆங்கில மொழி பெயர்ப்பில் வெளியிடப்பட்டிருந்தது.


“எத்தகைய குற்றச்சாட்டுகள் விடுக்கப்பட்டாலும் நாங்கள் அவற்றை நிராகரிப்போம். போர்க் கதாநாயகர்களுக்கெதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கை கொண்டிருப்பது அவசியமென கோரும் யோசனையும் விடுக்கப்பட்டிருந்தது. அதனை ஏற்றுக்கொள்வதற்கு தயாராகவில்லையென நான் தெளிவாக கூறியிருக்கிறேன். 

அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் ஊடாக பணியாற்றும் சில இலங்கையர்களும் உள்ளனர். பணத்திற்காக தவறான தீர்மானங்கள் எட்டப்படுகின்றன. ஆயுதப்படைகளுக்கெதிராக அவர்கள் தவறான பிரசாரங்களை அவர்கள் முன்னெடுக்கின்றனர். அவர்களின் விருப்பத்திற்கு அமைவாக நாட்டை ஆட்சி செய்ய நான் தயாராகவில்லை. 

அவர்களின் விருப்பத்தின் பிரகாரம் ஆயுதப்படைகளுக்கெதிரான குற்றச்சாட்டுக்களை கொண்டு வருவதற்கு நான் தயாராகவில்லை. அவர்களின் விருப்பத்திற்கு  அமைய வழக்குகளை கேட்க நான் விரும்பவில்லையென்று அவர் தெரிவித்திருந்ததாக இணையத்தளத்தில் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.


இதேவேளை ஜெனீவாவில் 2015 அக்டோபர் தீர்மானத்திற்கு இணையனுசரணை வழங்க வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு அங்கீகாரமளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இப்போது  ஜனாதிபதி சிறிசேனவின் நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றார். 

கலப்பு போர்க்குற்ற நீதிமன்றம் இலங்கையில் அரசியல் ரீதியாக சாத்தியமற்றது என அவர் கூறியுள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேசிய சட்ட வார நிகழ்வு கடந்த மார்ச் 4 இல் ஆரம்பமான போது அத்தகைய நீதிமன்றங்களை அமைப்பதாயின் சர்வஜன வாக்கெடுப்பு தேவையென்ற கருத்தை அவர் முன்வைத்திருந்தார்.


இது இவ்வாறிருக்க கடந்த வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்தியிருக்கவில்லையென அவர் கூறியிருந்தார். இலங்கையின் எதிர்கால திட்டம் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் அதில் எங்கும் வெளிநாட்டு நீதிபதிகள் போர்க்குற்ற தீர்ப்பாயத்தில் இருக்க வேண்டுமென கூறப்பட்டிருக்கவில்லையென அவர் குறிப்பிட்டிருந்தார். 


நாளை மறுதினம் புதன்கிழமை (மார்ச் 22) ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அல்ஹூசைன் தனது அறிக்கையை உத்தியோகபூர்வமாக பேரவைக்கு சமர்ப்பிப்பார். அங்கு உறுப்பு நாடுகள் மற்றும் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் பேராளர்களின் தலையீடும் இடம்பெறும். 2015 தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கான எதிர்கால திட்டமானது காலவரையறையைக் கொண்டிருக்க வேண்டுமென அவுஸ்திரேலியாவும் சுவிற்சர்லாந்தும் வலியுறுத்துமென ஜெனீவாவிலுள்ள இராஜதந்திரிகள் கூறுகின்றனர். இந்த இரு நாடுகளும் கலப்பு நீதிமன்றங்களின் தேவைப்பாட்டை வெளிப்படையாக தெரிவித்திருந்தன. அதேவேளை 2015 தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துமாறும் பிரிட்டனும் வலியுறுத்துமென இந்த இராஜதந்திரிகள் கூறுகின்றனர்.


இலங்கைக்கான 2 வருட காலக்கெடு முடிவடையும் போது தேர்தல்களுக்கு அரசாங்கம் ஆயத்தப்படுத்துவதற்கான காலமாக அமையும். முதலில் ஜனாதிபதித் தேர்தலும் பின்னர் பாராளுமன்றத் தேர்தலும் இடம்பெறும். இந்நிலையில் 2015 அக்டோபர் தீர்மானத்தை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்துவதற்கு அண்மித்த சாத்தியப்பாட்டைக் கொண்டதாக அந்த சூழ்நிலை அமையாது என கூறப்பட்டது. இரு வருடங்களில் மாற்றங்கள் வரலாம் எனவும் அழுத்தங்களும் கூடுமா குறையுமா என்பது முக்கியமான கேள்வியாக அமைந்திருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

TOTAL VIEWS : 964
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
xny7l
  PLEASE ENTER CAPTA VALUE.