ஐங்கரநேசன், குருகுலராஜா; இரு அமைச்சர்கள் பதவி விலகவேண்டும்; ​சத்தியலிங்கம், டெனீஸ்வரனுக்கு கட்டாய விடுமுறை; முதலமைச்சர் அறிவிப்பு
2017-06-15 09:21:37 | General

த.வினோயித்


வடமாகாண அமைச்சர்களுக்கு எதிரான ஊழல், நிதி மோசடி தொடர்பான  விசாரணை அறிக்கையின் பிரகாரம் அதிக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோரை பதவி விலகுமாறு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பணித்துள்ளார்.


இதேவேளை மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் மற்றும் மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் அந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்யப்படும் எனவும், அதுவரை குறித்த இரு அமைச்சர்களையும் தற்காலிக ஓய்வு எடுக்குமாறும் அமைச்சு பொறுப்புக்களை தன்னிடம் ஒப்படைக்கும்படியும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார். 


 வடமாகாண அமைச்சர்கள் மீது மாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட ஊழல், நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரிப்பதற்காக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது. மேற்படி விசாரணைக் குழு தனது இறுதி அறிக்கையை கடந்த மாதம் 19 ஆம் திகதி முதலமைச்சரிடம் கையளித்தது.

இந்த அறிக்கை கடந்த 6 ஆம் திகதி நடைபெற்ற மாகாண சபையின் 94 ஆம் அமர்வில் முதலமைச்சரினால் சபைக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து குறித்த அறிக்கை தொடர்பாக உறுப்பினர்களின் கருத்துகளை அறிந்து கொள்வதற்காகவும், குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்கள் தங்கள் தன்னிலை விளக்கங்களை சமர்ப்பிப்பதற்குமான விசேட அமர்வு நேற்று புதன்கிழமை மாகாண 
சபையின் பேரவை செயலகத்தில் நடைபெற்ற போதே தமது இறுதித் தீர்வை முதலமைச்சர் அறிவித்தார்.


நேற்றைய அமர்வில் அமைச்சர்களான த.குருகுலராஜா மற்றும் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் தங்கள் தன்னிலை விளக்கங்களை சமர்ப்பிப்பதாக இருந்தது. எனினும் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தனது தன்னிலை விளக்கத்தை எழுத்து மூலமாக முதலமைச்சரிடம் வழங்கியுள்ளதாகவும் மேலும் தன்மீதான குற்றச்சாட்டுகள் தனிப்பட்ட முறையிலான  குற்றச்சாட்டுகள் மட்டுமன்றி அமைச்சர் சபையின் மீதான குற்றச்சாட்டுகளாக உள்ளன எனக் கூறி சபையில் தன்னிலை விளக்கத்தை சமர்ப்பிக்க மறுத்தார். எனினும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் எழுத்து மூலமாக தன்னிலை விளக்கத்தை முதலமைச்சருக்கு வழங்கியதுடன், 
சபைக்கும் தெரிவித்தார். 


அமைச்சர் ஐங்கரநேசன் வெளிப்படையாக தனது தன்னிலை விளக்கத்தை சபைக்கு வழங்கிய நிலையில் தங்களுக்கும் கருத்துக் கூற சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டுமென எதிர்க்கட்சியினர் சபையில் வாதிட்டனர். 
எனினும் ஆளுங்கட்சியினால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதுடன், அமைச்சர்களை தெரிவு செய்வது முதலமைச்சரின் தனிச் சிறப்புரிமை எனவும், மேற்படி அமைச்சர்கள் மீதான  விசாரணைக் குழுவை நியமித்தது முதலமைச்சர்.

எனவே அவரே நடவடிக்கை எடுக்கவேண்டும், அவரே தீர்வை வெளிப்படுத்தவேண்டும், என ஆளுங்கட்சியினர் வலியுறுத்தினர். இதற்கமைய சபை நிறைவில் உரையாற்றிய முதலமைச்சர் தனது தீர்ப்பை வெளிப்படுத்தினார். 


(முதலமைச்சரின் முழுமையான உரை ) Click Here...

 

TOTAL VIEWS : 1416
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ys5hk
  PLEASE ENTER CAPTA VALUE.