வட, கிழக்கில் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க ஜனவரி முதல் நடவடிக்கை; பிரதியமைச்சர் ஹரீஸ்
2016-12-06 12:21:08 | General

பா.கிருபாகரன், டிட்டோகுகன்


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் இளைஞர்களை விளையாட்டுத்துறையில் ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி முதல் முன்னெடுக்கப்படும் என விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் அறிவித்தார். 


பாராளுமன்றத்தில்  திங்கட்கிழமை 2017ஆம் ஆண்டுக்கான வரவு  செலவுத் திட்டத்தின் விளையாட்டுத்துறை அமைச்சின் செலவுத் தலைப்புகளின் மீது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்;
 
விளையாட்டுத்துறையை ஊக்குவித்து அதனை எதிர்காலத்தில் மேலும் சக்திமிக்க ஒன்றாக மாற்றியமைக்க வேண்டிய தேவையும் பொறுப்பும் எமக்குள்ளது. இதற்கான வேலைத்திட்டங்களையும் நாம் செயற்படுத்தவுள்ளோம்.

சார்க் விளையாட்டுப் போட்டியில் எமது நாடு பல பதக்கங்களை வென்றது. பரா ஒலிம்பிக்கிலும் எமது நாடு சார்பாக பதக்கங்கள் வெல்லப்பட்டன. இதனை மேலும் ஊக்குவிப்பதற்கான செயற்பாட்டை நாம் பாடசாலை ரீதியாக மேற்கொள்ளவுள்ளோம்.

அந்தவகையில், அனைத்து மாணவர்களும் தமக்கு விருப்பமான விளையாட்டை தெரிவுசெய்யும் செயற்றிட்டத்தையும் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் கழகங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தையும் நாம் வெகு விரைவிலேயே செயற்படுத்தவுள்ளோம்.

அத்தோடு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு வாழ் இளைஞர்களை விளையாட்டுத்துறையில் அதிகமாக இணைத்துக் கொள்வதற்கான செயற்பாடும் அடுத்தாண்டு ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்மூலம் அம்மாகாணங்களில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் என்பதுமே எமது நோக்கமாகும்.

இந்த சபையில் பாராளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ், ஸ்ரீநேசன், துரைரெட்ணசிங்கம் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைவாக எதிர்வரும் காலத்தில் நாம் வடக்கு, கிழக்கில் உள்ள மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளோம் என்றார். 

TOTAL VIEWS : 13965
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
7ajpa
  PLEASE ENTER CAPTA VALUE.