வருடம் பூராகவும் வதைக்கும் டெங்கு
2017-11-29 09:17:31 | General

2000 ஆம் ஆண்டிற்குப் பின்னரான காலகட்டத்தில் முன்னொருபோதுமில்லாத விதத்தில் தொற்றுநோய்கள் உலக நாடுகளை பீடித்து வருவதையும் பலதரப்பட்ட புதிய வியாதிகள் காவிகளால் ஏற்படுவதையும் அவதானித்திருக்க முடியும்.

இந்த நோய்கள் யாவற்றிலும் மிகவும் மோசமான பாதிப்பைக் கொடுக்கும் நோயாக டெங்கு மேலெழுந்திருக்கிறது. வரள்வலய நாடுகளில் ஆண்டு பூராகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நோயாக டெங்கு உருவெடுத்திருப்பதை உலக சுகாதார அமையத்தின் அறிக்கை மூலம் அறிந்துகொள்ள முடியும்.

இலங்கையைப் பொறுத்தவரை இந்த வருடம் கடந்த 11 மாதங்களில் 171,453 பேர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருக்கின்றார்களென தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு தெரிவித்திருக்கிறது. இவர்களில் கிட்டத்தட்ட 42.11% மானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.

நடப்பு வருடத்தின் 29 ஆவது வாரத்திலேயே டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்ததாக பதிவாகியிருக்கிறது. தற்போதும் நாடளாவிய ரீதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாம் வாழும் சுற்றாடலில் டெங்கைப் பரப்பும் நுளம்புகள் பெருகுவதற்கான சாத்தியப்பாடு காணப்படுவதால் சுற்றுச் சூழலை கிரமமாக, தூய்மையாக வைத்திருப்பதில் அதிகளவுக்கு சகலருமே கவனத்தை செலுத்த வேண்டியது அவசியமான தேவையாகும்.

அதேவேளை மூன்று நாட்களாக காய்ச்சல் தொடர்ந்து நீடித்தால் உடனடியாக சிகிச்சை பெற்றுக் கொள்வது அவசியமெனத் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. உலகின் 125 நாடுகளைச் சேர்ந்த சுமார் 39 கோடி மக்கள் டெங்கினால் பீடிக்கப்படக்கூடிய பாதையில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க கண்டத்தைச் சார்ந்தவர்களில் 14% ஆனவர்கள் டெங்கு நோயின் தாக்கத்தில் சிக்கியுள்ளனர். ஆயினும் உலகிலேயே 70% ஆன டெங்கு நோயாளர்கள் ஆசிய நாடுகளிலேயே இனம்காணப்பட்டுள்ளனர். இதில் இந்தியா 34% ஆன பாதிப்பை கொண்டிருப்பதாக குறிப்பிடப்படுகிறது.

எதிர்வரும் ஆண்டுகளிலும் இந்த டெங்கு நோய் பொதுமக்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு பெரும் கேடாகவும் அரசாங்கங்களுக்கு பெரும் சுமையாகவும் அமையுமென்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது. காலநிலை மாற்றமே இதற்கு முக்கியமான காரணியாக அமையுமென்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.

கடந்த 20 ஆம் நூற்றாண்டில் பூமியின் மேற்பரப்பின் வெப்பநிலை 0.74 சதமபாகை சராசரியாக அதிகரித்திருப்பதாக உலக காலநிலை ஆராய்ச்சி மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அத்துடன் ஆர்க்டிக் கடல் பனிக் கட்டி 10 வருடங்களுக்கு 2.7 சதவீதம் என்ற ரீதியில் சுருங்கி வருவதாகவும் அதனால் 1960 களின் ஆரம்ப காலத்திலிருந்து கடல் மட்டம் வருடாந்தம் 1.8 மி.மீ. அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்பநிலை அதிகரித்துச் செல்வது டெங்கு நோய் தீவிரமடைவதற்கான அபாயத்தைக் காண்பிக்கிறது. சூழல் வெப்பமாதலினால் நுளம்புகளின் வாழ்க்கை வட்டத்தின் சகல கட்டங்களினதும் உயிர்வாழும் காலம் அதிகரிக்குமெனவும் அதனால் நுளம்புகளினால் கடிபடும் வீதமும்  அதிகரிக்குமெனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த 21ஆம் நூற்றாண்டில் வெப்பநிலை 1.5  5.8 சதம பாகையாக சராசரி அதிகரிக்குமென உலக காலநிலை மாற்றம் தொடர்பான குழு எதிர்வு கூறியுள்ளது.

வெப்பநிலை அதிகரிப்புடன் இணைந்து வெப்ப அலைகள் அதிகரிப்பும் நுளம்புகளின் பெருக்கத்திற்கு இசைவான சூழல் விரிவடைவதற்கு வழிவகுத்துக் கொடுக்குமெனவும் எச்சரிக்கப்படுகிறது. சீரற்ற காலநிலையால் இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகள் தொடர்ந்து பாரிய பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன.

மோசமான காலநிலையால் ஏற்படும் அழிவுகளுக்கு அடிக்கடி முகம் கொடுக்க வேண்டியிருப்பதும் அதிகரித்து வருகிறது. வழமையான வெள்ளம் மற்றும் வறட்சியான சுழற்சி முறையில் பாரிய மாற்றம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. இதனால் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கக்கூடும். ஏனெனில் வெள்ளப்பெருக்கு அதிகரிப்பு டெங்கு நுளம்பின் பெருக்கத்துக்கு வழிவகுக்கும். 

உலக காலநிலை தொடர்பான எதிர்வுகூறல்கள் டெங்கு உட்பட காவிகளினால் ஏற்படும் கொடிய தொற்று வியாதிகளுக்கு நாங்கள் இலக்காகும் ஆபத்து இருப்பதை எச்சரிப்பதாக காணப்படுகின்றன. காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் இந்த வியாதிகளினால் பாரிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.

அதேவேளை இந்த டெங்கு நோய் அதிகளவுக்கு நகரப் பகுதிகளிலேயே பரவுவதை அவதானிக்க முடியும். சனத்தொகைப் பெருக்கத்தினால் நகரமயமாதல் அதிகரித்து வருகிறது. அத்துடன் விவசாயத்துறை விரிவாக்கம், நீர்ப்பாசன நடவடிக்கைகள் அதிகரிப்பு, ஒழுங்கற்ற விதத்திலான கழிவகற்றல், வாகனங்கள் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் புகை, திட்டமிடப்படாத நிர்மாண நடவடிக்கைகள், குண்டும் குழிகளுமான வீதிகள், அசுத்தமான வடிகால்கள், அடிக்கடி துப்புரவு செய்யப்படாமலிருக்கும் சுற்றுச்சூழல் என்பன நுளம்புகள் பெருகுவதற்கு இடமளிக்குமென்பது பற்றி எப்போதுமே கவனத்தில் கொண்டிருப்பது அவசியம்.

அரசாங்கம் குறிப்பாக சுகாதார அமைச்சு நாடளாவிய ரீதியில் டெங்குக்கு எதிரான நடவடிக்கைகளை கிரமமாக முன்னெடுத்து வருகின்ற போதிலும் இந்த முயற்சிகளை எதிர்காலத்தில் மேலும் தீவிரப்படுத்த வேண்டிய தேவைப்பாடு அதிகரித்து செல்லுமெனத் தோன்றுகிறது. 

மேலும் இந்தக் கொடிய நோயின் பிடியிலிருந்து மீண்டெழுவதற்கும் 
சவாலை எதிர்கொள்வதற்கும் பொதுமக்களின் பங்களிப்பே  மிக அத்தியாவசியமானதென்பதை மனதிலிருத்திக் கொள்வது இன்றியமையாததொன்று. டெங்கு நோய் பரவாமல் தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் சில கடுமையான ஒழுங்கு விதிகள் கட்டுப்பாடுகளுக்கு அமைவாக செயற்படுவதும் தேவையானதொன்றாகும். 

 

TOTAL VIEWS : 2927
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
bb2bw
  PLEASE ENTER CAPTA VALUE.