இழுத்தடிப்புகள் தொடரக்கூடாது
2017-11-03 09:53:30 | General

தூர நோக்கற்ற எதிரணிக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தாலும் கூட,  நாட்டில் அரசியல் இணக்கப்பாடொன்றைக் காண்பது  தொடர்பான சர்வதேச சமூகத்தின் அபிலாஷை நனவாகுமென எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர்  துங்  லாய்மார்கியூ   தெரிவித்திருக்கிறார்.

தேசிய நல்லிணக்கத்தைத் தோற்றுவிக்கும் நடவடிக்கைகளிலும் அரசியல்  இணக்கப்பாடொன்றை கண்டு கொள்வதனூடாக யுத்தம் ஏற்பட்டதற்கு காரணங்களுக்கு தீர்வு காண்பதிலும் அரசாங்கம் உறுதிப்பாட்டுடன் இருக்கின்றதென்ற கருத்தை அவர் முன்வைத்திருப்பதை அவதானிக்க முடிகிறது. 

ஆனால் நீண்ட காலமாகப் புரையோடிப் போயிருக்கும் இன நெருக்கடிக்கு அதிகாரப் பகிர்வினூடாக  சகல தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய  அரசியல் தீர்வொன்றைக் கண்டு கொள்வதில் பாரிய  முட்டுக்கட்டைகளை அரசாங்கம் எதிர்நோக்கியுள்ளது.

அதிலும்  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும் கூட்டு எதிரணி உத்தேச  அரசியலமைப்புக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பதுடன், வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் விடயங்கள் நாட்டில்  9 தனியான தேசங்களை உருவாக்கி விடுமென எச்சரித்திருப்பதையும் காண முடிகிறது.


புதிய அரசியலமைப்பு தொடர்பாக அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக நான்கு நாட்களாக பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்ற நிலையில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்  இரு பிரதான கட்சிகளும் குறிப்பாக ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினதும் சிரேஷ்ட   உறுப்பினர்கள்  தேசிய பிரச்சினைக்கு இந்தத் தடவையாவது தீர்வைக் காண்பதற்கு கருத்தொருமைப்பாட்டைக் காண  வேண்டுமெனவும் சந்தர்ப்பத்தை தவற விடக்கூடாதெனவும்   அழைப்பு விடுத்திருக்கின்றனர்.

இந்த விவாதத்தில்  உரையாற்றிய தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன்  தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படுமென சர்வதேச சமூகத்துக்கு அரசாங்கம் உறுதிமொழி அளித்திருந்ததை  நினைவூட்டியதுடன் உலகம் தற்போதைய நிலைமையை அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் ஆதலால் அளித்த வாக்குறுதியை கௌரவிக்குமாறும்  வலியுறுத்தியிருக்கிறார்.

ஆனால் கூட்டு எதிரணி உறுப்பினர்கள் மாகாணங்களுக்கு  அதிக அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது பிரிவினைவாதத்திற்கு வழிவகுக்குமெனவும்  அதன் மூலம் ஏகாதிபத்திய வாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக அரசாங்கம் செயற்படுவதாகவும் குற்றம் சாட்டி கடும் எதிர்ப்பை முன் வைத்திருக்கின்றனர். 


 சுதந்திர இலங்கையின் கடந்த 7 தசாப்தகால  வரலாற்றில் வட, கிழக்கை வரலாற்றுபூர்வ வாழ்விடமாகக் கொண்டவர்களும் புவியியல் ரீதியாக தனித்துவமான மொழி, மதங்கள்,  கலாசாரங்களை கொண்டவர்களுமான தமிழ் பேசும் மக்களுக்கு நியாயபூர்வமான அரசியல் தீர்வை  ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அந்த மக்களின் அரசியல் தலைவர்களுக்கும் தென்னிலங்கைத் தலைவர்களுக்குமிடையில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு  ஏற்பட்ட "கதி' யையும்  ஆயினும் இந்தியாவின் தலையீட்டினால் 1987 இல் மேற்கொள்ளப்பட்ட இலங்கை  இந்திய உடன்படிக்கையின் பிரகாரம் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை  முறைமையானது அதிகாரப் பகிர்விற்கு ஆரம்பப் புள்ளியை  இட்டதையும் அதனை பூர்த்தி  செய்வதற்கான தமிழ் தலைமைகளின் ஜனநாயக ரீதியான பிரயத்தனங்களுக்கு தென்னிலங்கையிலிருந்து தொடர்ந்தும் கடும் எதிர்ப்பும் இடையூறுகளும் காணப்படுவதும்  "சக்கரச் சுழற்சி'
சாட்சிகளாகும்.  


அதாவது மாறி மாறி அதிகாரத்திலிருந்து வந்த இரு பிரதான கட்சிகளும் இன நெருக்கடிக்கு  அரசியல்  தீர்வொன்றை எட்டுவதற்கான விருப்பத்தை வெளியிட்டு இணக்கப்பாடொன்றை அண்மித்து செல்லும் போது எதிரணியிலிருக்கும் கட்சி கடுமையாக எதிர்த்து அந்த முயற்சியை  கிடப்பில் போட வைப்பதும் அல்லது முழுமையாக கைவிடச் செய்வதும் மாறி மாறி இடம்பெற்றுவந்த நிலையில் 2015 ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் இரு பிரதான கட்சிகளையும் பங்காளிகளாக கொண்ட தற்போதைய அரசாங்கத்தினால் தமது எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றாவிடினும் ஓரளவுக்கேனும் பூர்த்தி செய்யக்கூடிய தீர்வு எட்டப்படக்கூடுமென்ற எதிர்பார்ப்பு  உருவாகியிருந்தது.

ஆனால் வழிகாட்டல் குழுவின் இடைக்கால  அறிக்கையில் அடங்கியுள்ள விடயங்களும் அதன் உள்ளடக்கத்திற்கு தென்னிலங்கையில் தோன்றியிருக்கும் கடும் எதிர்ப்புகளும்  இன நெருக்கடிக்கு  அரசியல் தீர்வென்பது “கானல் நீராகவே“ தொடர்ந்து இருக்குமென்ற  கவலையையும் அதிருப்தியையுமே தொடர்ந்தும் கொண்டிருப்பதற்கான நிலைமையே காணப்படுகிறது. சகலதரப்பினர் மத்தியிலும் இதய சுத்தியுடனான கருத்தொருமைப்பாடும் மாற்றமும் ஏற்படாதவரை இழுபறி நிலை  மீண்டும் தொடருமென்பதே எதிர்பார்க்க முடியும். 

TOTAL VIEWS : 1226
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
dn4yb
  PLEASE ENTER CAPTA VALUE.