தகவல் தொழில்நுட்ப மேம்பாடு நல்லிணக்கத்துக்கு உதவும்
2018-01-08 11:56:18 | General

தொடர்பாடலும் தொழில்நுட்பமும் எப்போதுமே மாற்றமடைந்து கொண்டிருக்கின்றன. சில வருடங்களுக்கு முன்னர் மின்னஞ்சல் தொடர்பாடல் துறையின் ஆச்சரியமளிக்கும் புதிய வடிவமாக காணப்பட்டது.

நாங்கள் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்குரிய வழிமுறையில் அதிகளவுக்கு கனதியான  தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இன்று சமூக ஊடகத்துடன் அதிக எண்ணிக்கையான நவீன தொடர்பாடல் சாதனங்களைப் பயன்படுத்துகின்றோம்.

இலங்கையைப் பொறுத்தவரை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் தசாப்த காலத்தில் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி ஏற்பட்டிருக்கின்ற போதிலும் ஸ்திரமான பொருளாதார வளர்ச்சிக்கும் சமூக வலுவூட்டலுக்கும் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிகளவுக்கு மேம்பாடு காண வேண்டியிருப்பதை தொகைமதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பிந்திய கணிப்பீடு வெளிப்படுத்துகிறது.

கடந்த வருடத்தில் முதல் 6 மாதங்களில் தகவல் தொழில்நுட்ப அறிவு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டில் சராசரியாக வளர்ந்து வரும் நாடொன்றின் வளர்ச்சி வீதத்திற்கு அமைவாக இலங்கையும் சுமார் 38% த்தைக் கொண்டிருக்கின்றதென்பது வெளிப்பட்டிருக்கிறது. 5 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் கணினி அறிவு 28.3% மென மதிப்பிடப்பட்டிருக்கிறது.

அதேசமயம் நகரப் புறங்களில் கணினி அறிவு 41.1% மாகவும் கிராமப்புறங்களில் 26.5% மாகவும் பெருந்தோட்டப் பகுதிகளில் 9.5% மாகவும் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அதிலும் ஆண்களில் 30.7% மானோர் கணினி அறிவைக் கொண்டுள்ளனர். பெண்களின் கணினி அறிவு வீதம் ஆண்களை விடக் குறைவானதாக 26.1% மாகவுள்ளது.

சகல வயதுக் குழுவினரையும் ஒப்பிடும் போது 15 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்டவர்களே உயர்மட்ட கணினி அறிவைக் (60.7%) கொண்டிருக்கின்றனர். தேசிய மட்டத்தில் எண்ம (டிஜிட்டல்)  அறிவு 38.7% மாகவுள்ளது. ஆண்கள் 42.5% மும் பெண்கள் 35.2% மும் கணினி அறிவைக் கொண்டுள்ளனர்.

நகரப் புறங்களில் 54.5% மானர்கள் டிஜிட்டல் அறிவைக் கொண்டுள்ள அதேவேளை கிராமப்  பகுதியில் 36.4 % மாகவும் தோட்டத் துறைகளில் 16.4% மாகவும் இருக்கின்றது. உண்மையில் நகரப் பகுதிக்கும் கிராமப் புறங்களுக்குமிடையில் கணினி அறிவு தொடர்பாக மிகப் பாரிய இடைவெளி காணப்படுவதை அவதானிக்க முடியும். அதேசமயம் 4ஜி தொழில்நுட்பத்தை வழங்குவதில் ஏனைய தெற்காசிய நாடுகளை விட இலங்கை முன்னணியில் நிற்பதாக கூறப்படுகிறது.

அதேவேளை வர்த்தகத் துறையைக் கட்டியெழுப்புவதற்கும் அறிவை வளர்த்துக் கொள்ளவும் சந்தைத் தொடர்பாடலை மேம்படுத்தவும் இணையத்தை  எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்பது தொடர்பான அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது.

வர்த்தகத்துறை சார்ந்தோர் தமது தொழிற்றுறையை  மேம்படுத்த தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிகளவுக்கு கவனத்தைச் செலுத்த ஆரம்பித்திருக்கின்றனர். தகவல் தொழில்நுட்பத் துறையில் எவ்வளவு தொகையினர்   போதிய அறிவைக் கொண்டுள்ளனர் என்பதிலிருந்தே இத்துறையிலான முன்னேற்றத்தைக் கணிப்பிட முடியும்.

அதேவேளை தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த கல்வியறிவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான வேறுபாடு முக்கியமான விடயமாகும். நிதியியல் அறிவு மற்றும் நிதி வளத்தைப் பெற்றுக் கொள்தல் என்பனவற்றிலும் தாழ்ந்த மட்டத்திலேயே இருப்பதையும் அவதானிக்க முடியும்.  உண்மையில் தகவல் தொழில்நுட்பம் சகல நாடுகளிலும் பல்வேறு விதமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. 

நவீன தகவல் தொழில்நுட்ப சாதனங்களை  வைத்திராமல் தொழில் புரிபவர்கள் இவற்றை வைத்திருப்போரிலும் பார்க்க குறைந்தளவு அனுகூலத்தையே பெற்றுக் கொள்கின்றனர். இளைய சமூகமும் அதிகளவுக்கு கல்வியறிவுடைய சமூகமும் தகவல் தொழில்நுட்பத்தில் உயர்ந்த மட்டத்திலான அறிவைக் கொண்டிருக்கின்றனர்.

அத்துடன் தகவல் தொழில்நுட்ப அறிவை உரிய முறையில் பயன்படுத்துவதன் மூலம் இளைய சமூகம் தமது அறிவையும் திறமையையும் மேம்படுத்திக் கொள்ள முடியும். பொருளாதார நலன்கள் முன்னேற்றத்திற்கு தகவல் தொழில்நுட்ப அறிவு உதவுவதற்கு  அப்பால் அரசியல், கலாசார விடயங்களை மேம்படுத்தவும் தகவல் தொழில்நுட்ப அறிவு அதிகளவுக்கு உதவுகிறது. 

தாங்கள் முன்னர் அறிந்திராத பலவிடயங்களை அறிந்து கொள்ளவும் அறிவைப் பெருக்கிக் கொள்ளவும் தகவல் தொழில்நுட்ப அறிவு உதவுவதுடன், உரிய முறையில் பயன்படுத்தினால் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சமாதான சகவாழ்வை கனதியாகக் கொண்ட சமூகமொன்றைக் கட்டியெழுப்பக் கூட இந்தத் தகவல் தொழில்நுட்ப அறிவு அதிகளவுக்கு உதவ முடியும்.

அதாவது பல்லின, பல்மத, பல் கலாசார மக்கள் குழுக்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் சமாதான, சகவாழ்வைக் கட்டியெழுப்ப தகவல் தொழில்நுட்ப அறிவு அதிகளவுக்கு உதவ முடியும். 

 

TOTAL VIEWS : 1687
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
md3cw
  PLEASE ENTER CAPTA VALUE.