பாரிய சவாலாக சூழல் பாதுகாப்பு
2017-07-26 11:13:21 | General

பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் சுற்றாடலில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் என்பனவற்றால் எதிர்கொள்ளக்கூடிய இயற்கை அனர்த்தங்கள் குறித்து அண்மைக் காலமாக அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

அதேசமயம் இவற்றால் மனித ஆரோக்கியத்துக்கு ஏற்படக்கூடிய பாரிய அச்சுறுத்தல் தொடர்பாக அதிகளவுக்கு அலட்டிக் கொள்ளாத போக்கே காணப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் வறிய நாடுகள் அதிகளவுக்கு பாதிப்பை எதிர்கொண்டுள்ள போதிலும் உலக வல்லரசும் காபனீரொட்சைட்டை வெளியிடுவதில் உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளதுமான அமெரிக்கா இந்த விடயம் தொடர்பாக தனக்குரிய பொறுப்பை உதறித்தள்ளிவிட்டதாகவே தோன்றுகிறது.

சூழலில் மாற்றம் ஏற்படுவதற்கான மனித செயற்பாடுகளினால் சுகாதார ரீதியில் பிரச்சினை தோன்றுவது தொடர்பாக அதிகளவுக்கு அக்கறை காண்பிக்கப்படாத போக்கும் இருந்து வருகிறது. 


பொருளாதார அனுகூலங்களுக்காக எமது எதிர்காலத் தலைமுறையினரின் தரமான வாழ்க்கையை நாங்கள் அடைமானம் வைக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். ஆசியா, அமெரிக்கா, ஆபிரிக்கா, ஐரோப்பா கண்டங்களைச் சேர்ந்த நாடுகளில் மேலெழுந்து கொண்டிருக்கும் சந்தை நிலைவரத்தின் மூலம் இதனைக் கண்டுகொள்ள முடியும்.துரித வளர்ச்சி, வருமான அதிகரிப்பு என்பன போஷாக்கு, கல்வி, சமூக ஒருங்கிணைப்பு என்பனவற்றில் முன்னொரு போதுமில்லாத அளவுக்கு உயர்ந்த மட்டத்திற்குக் கொண்டு செல்லும்.

கடந்த பல ஆண்டுகளாக மனித வலுவான அபிவிருத்தியில் இந்தியா, சீனா போன்ற நாடுகள் அபார வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன. ஆனால் இயற்கை முறைமைகளின் ஸ்திரத்தன்மையை அதிகளவுக்கு பொருட்படுத்தாத விதத்திலேயே இந்த முன்னேற்றத்தை கொண்டு செல்லும் போக்கு காணப்படுகிறது. இதனால் தூய்மையான நீர் விநியோகத்துக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் காடுகளும் வெகுவாக சுருங்கி விடுகின்றன.

திண்மக் கழிவு முகாமைத்துவம், விசேட உயிரினங்கள் அழிவடைதல், குடியிருப்புகள் அழிவடைதல், இயற்கை வளங்கள் அழிவடைதல் போன்ற பலதரப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை காணப்படுகிறது.


சனத்தொகைப் பெருக்கத்தால் மிக வேகமாக இயற்கைச் சூழலை மாற்றியமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் புவி மாசடைவதும் துரிதமாக இடம்பெற்று வருகிறது. இதன் காரணமாக மனித ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. உலகில் நோய்களால் ஏற்படும் சுமையின் காற்பகுதி சுற்றாடலுக்கு மனிதர்களால் ஏற்படுத்தப்படும் தீங்கினால் உருவாகுபவையென ஆய்வொன்று கூறுகிறது.சூழல் மாசடைவதால் 5 வயதுக்கு குறைவான பிள்ளைகளே நோய்களினால் பீடிக்கப்படும்  அதிகளவு ஆபத்து காணப்படுகிறது.

இதனால் சுற்றாடல் பொருளாதார, சமூக ரீதியான கொள்கைகளில் தேவைப்படுகின்ற அடிப்படை மாற்றங்களை முன்னெடுப்பதனால் மட்டுமே பாதிப்பின் தாக்கத்தை குறைக்க முடியும். இன்று நவீன விஞ்ஞான தொழில்நுட்பம் அபார வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. பொருளாதார ரீதியான வளர்ச்சி காண்பதற்கான இலக்கை நோக்கிச் செல்லும் போது எமது சுற்றாடல் ரீதியாக ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து நன்கு அறிந்து கொண்டே வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியம்.

இலங்கையைப் பொறுத்தவரை திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத்தை சீராக மேற்கொள்ளாமையே தற்போது நாட்டில் வேகமாக பரவி வரும் டெங்கு நோய்க்கு காரணமென சுட்டிக்காட்டப்படுகிறது. 


இந்த வருடம் டெங்கினால் பீடிக்கப்பட்டோர் தொகை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ள நிலையில் 290 பேர் வரை உயிரிழந்திருப்பதாக பிந்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மேல் மாகாணத்திலேயே டெங்கினால் பாதிக்கப்பட்டோர் தொகை அதிகமாகும். சுற்றாடலில் குப்பை கூளங்கள் அதிகரித்திருப்பதும் அதாவது முறையான திண்மக் கழிவகற்றல் இடம்பெறாமையே பொதுமக்களின் சுகாதாரத்திற்கு பாரிய தீங்கை ஏற்படுத்தி வருகிறதென உணர்ந்துள்ள நிலையில் டெங்கு ஒழிப்பு போராட்டத்தை ஆரம்பித்திருக்கும் அரசாங்கம் முதற்கட்டமாக சுற்றாடலை துப்புரவாக வைத்திருப்பதை உறுதிப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தில் கூடுதல் அக்கறையை செலுத்தி வருவதை அவதானிக்க முடிகிறது.

உண்மையில் சுற்றாடல்  பாதுகாப்பு தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதன் விளைவாகவே சுகாதாரத் தேவைகளுக்காக அதிகளவுக்கு செலவிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றதென்பதை புரிந்து கொள்ள முடியும்.


உள்ளூர், தேசிய, பிராந்திய, சர்வதேச மட்டத்தில் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக ஒருங்கிணைந்த கொள்கையை வகுத்து செயற்படுவதன் மூலமே பொது மக்களின் ஆரோக்கியத்தையும் நலன்களையும் உறுதிப்படுத்த இயலும். இதற்கான இலக்கை நோக்கிப் பயணிப்பதற்கு ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகள் வழிகாட்டலை வழங்கி வருகின்றன. ஆயினும் உள்நாட்டு அரசியல் நிர்ப்பந்தம் உட்பட பல்வேறு காரணங்களினால் சுற்றாடல் பாதுகாப்பு என்பது தொடர்ந்தும் பாரிய சவாலாகவே இருந்து வருகிறது. 

TOTAL VIEWS : 1146
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
m1slk
  PLEASE ENTER CAPTA VALUE.