தமிழ் மக்களின் புனித நாள் மே 18
2017-05-17 10:21:43 | General

கொத்துக்கொத்தாக  தமிழ் மக்கள் கொடூரமாக கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 8 ஆவது நினைவு தினம் நாளை வியாழக்கிழமை இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் தமிழர் வாழும் புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.

யுத்த விதிமுறைகளுக்கு முரண்பட்ட விதத்தில் இரசாயன மற்றும் தடைசெய்யப்பட்ட போராயுதங்கள் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் தாராளமாக பயன்படுத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் குடும்பம் குடும்பமாக கொன்றொழிக்கப்பட்டதை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் வடக்கு ,கிழக்கு மாகாணங்களில் நிறைவு செய்யப்பட்டு இந்த அஞ்சலி நிகழ்வுகளில் பங்கேற்குமாறு தமிழ் மக்களுக்கு அழைப்பும்  விடுக்கப்பட்டுள்ளது.


மே18 ஆம் திகதி அன்று வடக்கு கிழக்கு உள்ளிட்ட புலம்பெயர் தேசமெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் ஒருமித்து காலை 9.30 மணி தொடக்கம் 3 நிமிட மௌன அஞ்சலியை செலுத்த வேண்டும் என  வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். மே மாதம் 18 ஆம் திகதி  ஏற்பட்ட எம் இனிய உறவுகளின் அநியாயமான உயிரிழப்புகளுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தும் புனித நாளே மே18 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.  

வட, கிழக்கு மாகாண மக்களின் சரித்திரத்தில் மாறா இடம்பெற்றுவிட்ட சோக வரலாற்றுப்பதிவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம். அன்றைய தினம் என்றென்றும் எம் மக்களின் வரலாற்றில் ஒரு துக்க தினமாக அனுஷ்டிக்கப்பட வேண்டிய தினமாகும் என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர்  சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.


ஆனால் வழக்கம் போலவே இனவாத சக்திகளும் இனவாதத்தை மூலதனமாகக் கொண்ட சில சிங்கள, ஆங்கில ஊடகங்களும் இந்த பொதுமக்களுக்கான மே 18 அஞ்சலி நிகழ்வை முள்ளிவாய்க்கால் போரில் உயிர் நீத்த விடுதலைப்புலிப் போராளிகளை நினைவுகூரும் தினமென திரிவு படுத்தி  பிரசாரங்களை முன்னெடுத்தும் செய்திகள், கட்டுரைகளை வெளியிட்டும் வருவதனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டுமின்றி தென்பகுதியிலும் தேவையற்றதொரு, பதற்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாகவே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினரின் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புலனாய்வுப் பிரிவினரும் கண்கொத்திப்பாம்புகளாக களத்தில் இறங்கியுள்ளனர்.


நினைவேந்தல் நிகழ்வுகள் என்ற பெயரில் புலம்பெயர் அமைப்புகளை தூண்டிவிடும் வகையில் வடக்கில் அரங்கேற்றும் நாடகத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும். இராணுவத்தை குற்றம் சுமத்தி மக்களை தூண்டிவிடும் நாடகத்தை இனியும் நடத்தினால் தக்க பாடம் கற்பித்துக்கொடுக்க வேண்டி வரும்.  

வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் மற்றும் சிவாஜிலிங்கம் போன்றவர்கள்  நினைவேந்தல் தினமென தீபம் ஏந்திக்கொண்டு எமது இராணுவத்தை குற்றம் சுமத்திக்கொண்டும் தமது அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர்.புலம்பெயர் அமைப்புகளிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொள்ள இவர்கள் இவ்வாறான நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இராணுவத்தை குற்றம் சுமத்தி புலம்பெயர் அமைப்புகளை தூண்டிவிட்டு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் நாடகத்தை இதுவரை நடித்தது போதும். இனியும் இந்த நாடகத்தை நடத்தினால் தக்க பாடம் கற்பித்துக்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும். இராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி அவர்களை தண்டிக்க வேண்டும் என தொடர்ச்சியாக இவர்கள் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்த கருத்துகளினால் நாட்டில் குழப்பங்களும் இனவாத செயற்பாடுகளும் மாத்திரமே உருவாக்கப்படும். மாறாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எமது முப்படைகளை தண்டிக்க எந்த வாய்ப்புகளையும் நாம் ஏற்படுத்திக் கொடுக்கப்போவதும் இல்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன கூட ஒருவித மிரட்டல் தொனியில் எச்சரித்துள்ளார்.


முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நடத்திட வேண்டுமென்பதில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்டோரும் தீவிரம் காட்டுவதாலேயே அவர்களை தமிழ் இனவாதிகள் என நல்லாட்சி அரசும்  தென்னிலங்கை இனவாதிகளும் இனவாத ஊடகங்களும் முத்திரை குத்துகின்றன.நல்லாட்சி அரசு என்று இந்த அரசு தன்னை வெளியே காட்டிக்கொண்டாலும் சுயத்தில் தாங்களும் மகிந்த ராஜபக்ஷவுக்கு குறைந்தவர்கள் அல்ல என்பதை நிரூபிப்பதாகவே நடந்து வருகின்றது.

மகிந்த தமிழ் மக்களை தடவாமல் அடித்தார். ஆனால் மைத்திரி ரணில் தலைமையிலான இந்த நல்லாட்சி அரசு தமிழ் மக்களை நன்றாக ஆரத்தழுவி தடவி விட்டு உச்சந்தலையில் அடிக்கின்றது.தனித்துவம் மிக்க ஒரு இனம் போரில் உயிரிழந்த தமது உறவுகளை குறிப்பிட்ட ஒரு நாளில் நினைவு கூருவதை இனவாத ரீதியாக பார்க்கும் ஒரு அரசும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இருக்கும் வரை இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் என்பது பகற்கனவே.தாம் இழந்த உறவுகளையே நினைவு கூர விடாதவர்கள் தாம் இழந்த உரிமைகளை மட்டும் தந்து விடுவார்கள் என்று நம்புமளவுக்கு தமிழ் மக்கள் முட்டாள்கள் அல்ல.

TOTAL VIEWS : 1749
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
h1fqn
  PLEASE ENTER CAPTA VALUE.