மாசடையாத உலகத்தை உருவாக்குவதற்கான தேடல்
2017-12-11 13:26:39 | General

மாசடையாத உலகத்தை உருவாக்குவதற்காக ஐ.நா.வின் சுற்றாடல் பேரவை கட்டுப்படுத்தப்படாத 13 தீர்மானங்களையும் மூன்று முடிவுகளையும் கடந்த வியாழக்கிழமை எடுத்திருக்கிறது.

பேரவையின் மாநாட்டில் முதற்தடவையாக சுற்றாடல் துறை அமைச்சர்கள் வளி, நிலம், நீர், சமூத்திரங்கள் மாசடைவதை தடுக்கவும் குறைக்கவும் முகாமைத்துவப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை சுமார் 200 நாடுகள் கௌரவிக்கும் என்ற பிரகடனத்தை வெளியிட்டிருக்கின்றனர்.

கடற்கரைப் பகுதிகள் மற்றும் சமுத்திரங்களில் பிளாஸ்ரிக் பொருட்கள் வீசப்படுதல், வளிமாசடைவதை தடுத்தல் மற்றும் குறைத்தல், நீர் நிலைகள் சார்ந்த சூழல்  மாசடையாது தடுத்தல், மண்வளம் கெடாமல் பாதுகாத்தல், யுத்தம், பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாசடைதலை முகாமைத்துவப்படுத்துதல் என்பன தீர்வு காணப்படவேண்டிய தீர்மானங்களாக அறிவிக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

  "சர்வதேச மட்டத்திலான அரசியல் நிகழ்ச்சி நிரலில் மாசடைதலுக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் உள்ளீர்த்துக்கொண்டிருக்கிறோம்.  எம் முன்னால் நீண்ட போராட்டம் காணப்படுகிறது. ஆனால் குறிப்பிடத்தக்க, சாதகமான மாற்றம் ஏற்படவேண்டுமென்ற உணர்வை மாநாடு வெளிப்படுத்தியிருக்கிறது' என்று ஐ.நா.வின் சுற்றாடல் பேரவையின் தலைவரும் முன்னாள் நோர்வே அமைச்சருமான  எரிக்சொல்ஹேய்ம் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார். 

இந்த முயற்சியை முன்னெடுப்பது ஐ.நா.வும் அரசாங்கங்களும் மட்டுமல்லவெனவும் சிவில் சமூகம், வர்த்தகத்துறை மற்றும் தனிப்பட்டவர்களிடமிருந்து பாரிய ஆதரவு கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்திருப்பதையும் காணமுடிகிறது.

பூமி மாசடைவதை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக பல இலட்சம் உறுதிமொழிகள்  அளிக்கப்பட்டிருக்கின்றமை இந்தப் பிரச்சினை சர்வதேச ரீதியாக பாரிய சவாலாக உருவெடுத்திருக்கின்றதென்பதை காண்பிப்பதுடன், அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தப் போராட்டத்தில் வெற்றி  காணவேண்டுமென்ற விருப்பத்தையும் வெளிப்படுத்தியிருப்பதாக கருத முடியும். 2019 இல் சுற்றாடல் பேரவையின் அடுத்த மாநாடு இடம்பெறவுள்ள நிலையில், நிறைவேற்றுவதற்கான திட்டத்தை அதாவது நிலையான அபிவிருத்தி இலக்குகளுடன் தொடர்புபட்ட திட்டத்தை சமர்ப்பிக்குமாறு ஐ.நா. சுற்றாடல் பேரவையை 193 நாடுகள் ஏகமனதாக கோரியிருக்கின்றன. காற்று, நிலம், நீர் என்பனவற்றை தூய்மைப்படுத்துவதன் மூலம் பலகோடி மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான உறுதி

மொழிகளைக் கொண்ட தீர்மானங்களே தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த உச்சிமாநாட்டில் அளிக்கப்பட்ட ஒவ்வொரு உறுதிமொழியும் நிறைவேற்றப்படுமானால் மேலும் 149 கோடி மக்கள் சுத்தமான காற்றை சுவாசிப்பார்கள் என்றும் உலகின் கரையோரப் பகுதியில் சுமார் 30 சதவீதமான 480000 கி.மீ. தூரம் துப்புரவாக இருக்குமெனவும் மாசடைதலுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தேவையான ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுப்பிடிப்புகளுக்கு 18.6 பில்லியன் டொலர்கள் கிடைக்குமெனவும் ஐ.நா. சுற்றாடல்துறை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

இனிமேலும் தவறிழைக்க இடமில்லாத அளவுக்கு நாம் வாழும் பூமி மாசடைந்திருப்பது பற்றி மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுடன், எடுக்கப்பட்ட தீர்மானங்கள் விடுக்கப்படும் வலுவான செய்தியாக அமையுமென்ற எதிர்பார்ப்பையும் மாநாட்டில் பங்கேற்ற சுற்றாடல்துறை அமைச்சர்கள் பலர் வெளியிட்டிருக்கின்றனர்.


மூன்று தினங்களாக நைரோபியில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் நாடுகளின் தலைவர்கள், அமைச்சர்கள், வர்த்தகத் தலைவர்கள், ஐ.நா. அதிகாரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள், பிரபல்யமானவர்களென 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றிருந்ததை ஐ.நா.வின் தலைமையிலான மாசடைதலிலிருந்தும் சுற்றாடலைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு கிடைத்திருக்கும் ஆதரவாக கருத முடியும்.

அத்துடன் இந்நிகழ்வில் 25 இலட்சம் உறுதிமொழிகளும் செயற்படுவது தொடர்பாக 88 ஆயிரம் தனிப்பட்ட  வாக்குறுதிகளும் கிடைத்திருக்கின்றன. அத்துடன் இந்த நைரோபி மாநாட்டில் கடலை தூய்மையாக வைத்திருக்கும் போராட்டத்தில் இலங்கை, சிலி, ஓமான், தென்னாபிரிக்கா, உட்பட கரைதொடும் நாடுகள் பல இணைந்திருக்கின்றன. அதேவேளை 2018 ஜனவரி 1 இருந்து பிளாஸ்ரிக் உற்பத்தி பொருட்களுக்கான தடையை முழுமையாக அமுல்படுத்தப் போவதாக இலங்கை உறுதிமொழி அளித்திருக்கிறது.


எமது சுற்றாடல் மாசடைவதால் வருடாந்தம் உலகில் 1 கோடியே 26 இலட்சம் பேர் மரணமடைகின்றனர். அதாவது வருடாந்தம் இடம்பெறும் இறப்புகளில் நான்கில் ஒருவர் சூழல் மாசடைவதால் மரணமடைகிறார். அதிலும் வளி மாசடைதலே அதிக எண்ணிக்கையான மரணங்களைத் தோற்றுவிக்கிறது. வருடாந்தம் காற்று மாசுறுவதால் 65 இலட்சம் உயிரிழப்புகள் சம்பவிக்கின்றன.

கடல் பிராந்தியம் ஏற்கனவே 500 "மரண வலயங்களை' கொண்டிருப்பதாகவும் கடல்வாழ் உயிரினங்களுக்கு தேவையான ஒட்சிசன் சிறிதளவே உள்ளதாகவும் மேலும் 80% கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் சூழலை மாசடையச் செய்வதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. சூழல் மாசடைவதால் வருடாந்தம் உலகத்திற்கு 4.6 ட்ரில்லியன் டொலருக்கு மேற்பட்ட பொருளாதார இழப்பு ஏற்படுகிறது எனவும் இது சர்வதேச பொருளாதாரத்தின் 6.2 சதவீதத்துக்கு சமமானதெனவும் மாசடைதல் மற்றும் சுகாதாரம் தொடர்பான லான்செற் ஆணைக்குழுவின் பிந்திய அறிக்கை கூறுகிறது.

சூழல் மாசடைவதால் ஏற்படுகின்ற பாரதூரமான பாதிப்புகள் தொடர்பாக இப்போது அபாய மணி உரத்து ஒலித்திருக்கும் நிலையில், ஐ.நா. சுற்றாடல் பேரவை முன்னெடுத்திருக்கும் போராட்டம் முழுமையான வெற்றிபெற சகல நாடுகளும் குறிப்பாக பொருளாதார பலம் வாய்ந்த நாடுகள் பூரண ஒத்துழைப்பை வழங்குவதிலேயே இலக்கை எட்டமுடியும்.

 

 

TOTAL VIEWS : 1397
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
i7nqk
  PLEASE ENTER CAPTA VALUE.