பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு
2017-12-05 11:21:19 | General

பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் நாடளாவிய ரீதியில் மோசமாக அதிகரித்திருப்பதாக தோன்றுகிறது. "வவுனியா, கணேசபுரம் பகுதியில் சிறுமி துஷ்பிரயோகம்',  ஹாலிஎலப் பகுதியில் 14 வயது மாணவி கடத்தப்பட்டு வல்லுறவு', காதலர்கள், நண்பர்களால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட இரட்டைச் சகோதரிகள்' போன்ற பெண்களுக்கு குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் கடந்த ஒரு வார காலத்திற்குள் இடம்பெற்றிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருப்பதை அவதானிக்கமுடிகிறது.

அதேவேளை சட்டம், ஒழுங்கை அமுல்படுத்தும் தரப்பினரிடமிருந்து அதாவது "வேலியே பயிரை மேய்வது போன்று' பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன.

நீண்ட கால யுத்தத்தால் மிக மோசமான உயிர், உடைமை இழப்புகளையும் அவலங்களையும் எதிர்கொண்டிருந்த வட மாகாணத்தில் சிவில் பாதுகாப்புப் பிரிவினரால் நடத்தப்படும் பண்ணைகளில் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக பாராளுமன்றத்தில் தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. சாந்தி ஸ்ரீரிஸ்கந்தராஜா குற்றம் சாட்டியிருக்கிறார்.

பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான உரிமை மீறல்கள், வன்செயல்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஆட்சியிலிருந்து வரும் அரசாங்கங்கள் கடுமையான சட்டங்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகின்ற போதிலும் வன்செயல்கள் கட்டுக்கடங்காமல் தொடர்வதை அவதானிக்கமுடிகிறது.

1995 இல் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் இடம்பெற்ற மாநாட்டைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய விழிப்புணர்வு உலகளாவிய ரீதியில்  குறிப்பிடத்தக்க அளவுக்கு ஏற்பட்டிருந்தது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கான அடிப்படைக் காரணமாக அமைவது பால் சமத்துவமின்மையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை பற்றிய விதிமுறைகளுமே என்று உலக சுகாதார அமையம் தெரிவித்திருக்கிறது.

குடும்ப கௌரவம்,  பாலியல் ரீதியான தூய்மை என்பன பற்றிய சமூக மட்டத்திலான நம்பிக்கைகள், ஆண் மேலாதிக்க சமூகப் பின்னணி, பாலியல் வன்முறை தொடர்பான பலவீனமான சட்ட ஏற்பாடுகள் என்பன பெண்களுக்கு எதிரான உடல் மற்றும் பாலியல் வன்முறைகளைப் பயன்படுத்துவதை அதிகரிக்க வைத்திருக்கிறது. 
இலங்கை, இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் மேலைத்தேசங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் அதிகமாகும்.

ஆயினும், 1981 லேயே பெண்களுக்கு எதிரான  பாரபட்சத்தை இல்லாதொழிக்கும் சர்வதேச சாசனத்தை இலங்கை அங்கீகரித்திருந்தது என்பது மிகவும் முக்கியமான விடயமாகும். அச்சாசனத்தை 1993 இல் உள்ளீர்த்துக்கொண்ட இலங்கை 1996 இல் பெண்களுக்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதுடன், பாலியல் தொந்தரவு உட்பட பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உட்பட கொடுமைகளுக்கான குற்றவியல் கோப்பில் திருத்தங்களை அறிமுகப்படுத்தியிருந்தது.

வன்புணர்வு, வீட்டு வன்முறைகள் தொடர்பான முற்போக்கான சட்ட விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆயினும் யுத்தம் இடம்பெற்ற வருடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருந்ததுடன், "தண்டனை விலக்கீடடு சிறப்புரிமை' பரந்தளவில் காணப்படுவதாக உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமைக் குழுக்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

அதேவேளை  2008 இலிருந்து பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டுடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனையுடன் விடுவிக்கப்பட்டதான மனித உரிமைகள் அபிவிருத்திக்கான சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்திருந்தது. 2016 இல் வுமென் இன் நீட் (வின்) அமைப்பானது சுமார் 20 ஆயிரம் பெண்கள், சிறுமிகளுக்கு உளநல ஆலோசனை கூறியிருந்ததாக குறிப்பிட்டிருக்கிறது.

சுமார்  7500 பேர் புதிதாக சட்ட ஆலோசனை பெறுவதற்கு நாடியிருந்ததாகவும் 6 ஆயிரம் நீதிமன்றத்தை நாடிய சம்பவங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் 1638 சம்பவங்கள் உடல் ரீதியான மற்றும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களாகும். 147 சிறுவர் துஷ்பிரயோகங்களும் 15 வன்புணர்வு சம்பவங்களும் இதில் உள்ளடங்கியுள்ளன.

“வன்முறையின் தன்மை 15 ஆண்டுகளுக்கு முன்னர் கூறியதிலும் பார்க்க இப்போது அதிகளவுக்கு கொடூரமாக இருப்பதாக தோன்றுகின்றது. அந்த நாட்களில் அடிப்பது போன்றவையே காணப்பட்டது. இப்போது பாதிக்கப்படுபவர்கள் அவயவங்களை அல்லது உயிரை இழக்கின்றனர்' என்று "வின்' அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சாவித்திரி குணசேகர தெரிவித்திருக்கிறார். 

கலாசார ரீதியாக பிள்ளைகளை வளர்க்கும் போது பெண் பிள்ளையாயின் சொல்வதை கேட்குமாறும் பொறுமையுடன் இருக்குமாறும் அடக்கத்துடன் நடந்துகொள்ளுமாறும் பெற்றோர் குறிப்பாக தாய்மார் அறிவுரை கூறுவார்கள். ஆனால், ஆண் பிள்ளைகளிடம் இவற்றை எதிர்பார்ப்பது இல்லை என்பதும் இதுவும் குடும்ப வன்முறைகள் ஏற்படுவதற்கு காரணமாகின்றதெனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

எவ்வாறாயினும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க ஊடகங்கள் பாரிய பங்களிப்பை வழங்கமுடியும். வன்முறைகள் இடம்பெறும்போது அவை தொடர்பாக சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுசென்று பாதிக்கப்பட்டோருக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கும் ஊடகங்கள் உதவமுடியும்.

அத்துடன்  பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான சட்டங்களில் குறைபாடுகள் காணப்பட்டால் அந்த வெற்றிடத்தை நிரப்புமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுசென்று அவர்களை செயற்பட செய்வதற்கும் இங்கு ஊடகங்களின் வகிபாகம் மிகவும் முக்கியமானதாக தோன்றுகிறது.

TOTAL VIEWS : 2278
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
c8xli
  PLEASE ENTER CAPTA VALUE.