வேற்றுமையை கொண்டாடுதல் 'சகிப்புணர்வின்' சாராம்சம்
2017-11-16 12:40:43 | General

அன்றாடம்  பலதரப்பட்ட முரண்பாடுகள்,  மோதல்களை  இன, மத, மொழி, கலாசார, பொருளாதார அரசியல் ரீதியாக  மனித குலம் எதிர்கொண்டுள்ள போதிலும் "சகிப்புணர்வு' என்ற உன்னதமான குணாம்சமே  வேறுபாடுகளைப் புறந்தள்ளிவிட்டு  மனிதர்கள்  ஒருமித்து வாழ்வதற்கான உயிர்நாடியாக  இருந்து வருகிறது.

தாராள ஜனநாயக  நாடொன்றில் ஒவ்வொருவரும்   வெவ்வேறு விதமான அபிப்பிராயங்களைக் கொண்டிருப்பார்கள். அதேவேளை  அந்தக் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு சமத்துவமான உரிமைகளை அவர்கள்  கொண்டிருக்க வேண்டும். அதுவே பன்முகத் தன்மையும் சகிப்புணர்வுமாக  அமைகிறது.  அதேவேளை  மனித உரிமைகளுக்கு அதிகளவுக்கு மதிப்பளிப்பதுவும் சகிப்புணர்வே. உலகம் ஒரு கிராமமாக சுருங்கிவிட்டதென நாம் கூறுகிறோம்.  அந்தளவு தூரத்துக்கு  இலத்திரனியல் ஊடகங்கள் உலகின் மூலை முடுக்கில் இருப்பவர்களையெல்லாம் நெருக்கமாக்கி வைத்திருக்கின்றன.
 ஆனால் பரஸ்பர நல்லுறவும் பரஸ்பர மரியாதையும் பரஸ்பர புரிந்துணர்வும் ஏற்படும் போது மட்டுமே உலக சமுதாயமானது சாதகமான  முறையில் நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். நல்லுணர்வுகளுக்குப் பதிலாக வெறுப்பு அல்லது குரோதம் மேலெழுமானால் அமைதிக்கு அது குந்தகமாக அமைந்துவிடும். எதிர்பாராத விளைவுகளையும் நாம் எதிர்கொள்ள நேரிடும். அதிகளவுக்கு உலகமயமாக்கப்பட்ட சம காலத்தில் வெவ்வேறு இன, மத, கலாசாரப் பின்னணிகளைக் கொண்ட மக்கள் ஒருமித்து வாழ வேண்டியுள்ளது. முற்றிலும்  வேற்றுமைத்தன்மையும் பல்கலாசாரமும் கொண்டதாக உலகம் உருவாகியிருக்கும் நிலையில் அதன் ஜீவிதத்துக்கு சகிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்வதும் பரஸ்பரம்  அன்பு, பரிவை தோற்றுவித்துக் கொள்வதும் மிகவும் முக்கியமானதாகும். சகிப்புணர்வும்   சௌஜன்யமும் இல்லாவிடில் சமூகங்கள் மத்தியில் நீடித்ததும் நிலையானதுமான சமாதானத்தை பேணிப் பாதுகாக்க இயலாது.
சகிப்புணர்வு குறைவாக  அல்லது இல்லாமலிருக்கும்போது அது மோதலுக்கு வழிவகுக்கிறது.  இறுதியில்  சமுதாயத்தில் அமைதியையும் அதன் பாதுகாப்பையும் அழித்துவிடுகிறது. மக்கள் தமது தரப்பு வாதங்களை முன்வைக்கும் போது சில சமயங்களில் தோல்வியேற்பட்டால் அவர்கள் சகிப்புணர்வற்றவர்களாக  உருவாகி விடுவதுமுண்டு.  சகிப்புணர்வின்மையால் அண்மைக் காலங்களில்  பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிறுபான்மை இன,மதக் குழுக்களுக்கு எதிராக தாக்குதல்கள் மட்டுமன்றிக் கலவரங்களும் இலங்கையில் இடம்பெற்றிருக்கின்றன. இவை இன, மத ரீதியான சகிப்புணர்வின்மையின்  வெளிப்பாடாகும். 
 நாம்  வாழும் உலகம்  வேற்றுமைத் தன்மை கொண்டது. அந்த பன்முகத்தன்மையே பிரபஞ்சத்தின்  சிறப்பியல்பாக அமைந்திருக்கிறது.  இந்த வேற்றுமைத் தன்மை இல்லாவிடின் உலகில் போட்டித்தன்மை  இல்லாமல் சலிப்பு  நிறைந்ததாக வாழ்க்கை மாறிவிடும். அதேவேளை நாடொன்றில் சகிப்புணர்வற்ற எதேச்சாதிகார ஆட்சி நிலவுமானால் அங்கு அடக்குமுறையே கோலோச்சும். சகிப்புணர்வின் தேவைப்பாடு  சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. "சகிப்புணர்வைக் கடைப்பிடித்து சிறப்பான அயலவர்களாக ஒருவருடன் ஒருவர் சமாதானமாக  ஒன்று சேர்ந்து வாழ்வதற்கான' தேவையை  நாங்கள் வென்றெடுப்பதே சாசனத்தின் இலக்கென ஐ.நா.  சாசனத்தின் முன்னுரிமையில் குறிப்பிடப்பட்டிருப்பதை கவனத்தில் கொள்வது சிறப்பானதாக அமையும்.  அத்துடன் 1981 நவம்பர் 25 இல் மேற்கொள்ளப்பட்ட சகல வடிவத்திலுமான மதம் அல்லது  நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட சகிப்புணர்வின்மை மற்றும் பாரபட்சத்தை இல்லாதொழிப்பது தொடர்பாக ஐ.நா. பிரகடனம் அமைந்திருக்கிறது.  நாடுகள்  சகிப்புணர்வை மேம்படுத்துவது அத்தியாவசியமானதென்பதையும் அதேவேளை  சகிப்புணர்வின்மையை துரிதமாக இல்லாதொழிப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும்  அரசாங்கங்கள் உள்ளீர்த்துக் கொள்ள வேண்டுமெனவும் அப்பிரகடனத்தில் கோரப்பட்டிருக்கிறது.
  பல்லின, பல்மத, பல்கலாசார, பலமொழிபேசும் சமூகங்களைக் கொண்ட இலங்கை போன்ற நாடொன்றுக்கு "சகிப்புணர்வு' என்பது மிகவும் அத்தியாவசியமான தேவையாக காணப்படுகிறது. சகிப்புணர்வென்பதன் அர்த்தம்  எமது பன்முகத்தன்மைக்கு மதிப்பளிப்பதும் ஏற்றுக் கொள்வதும் மெச்சுவதுமாகும். உண்மையில்  மனிதர்கள் இயற்கையாகவே பலவழிகளில்  வேறுபட்டவர்களாவர். ஆனால் சகிப்புணர்வே அந்த வேற்றுமையில் ஒற்றுமையை ஏற்படுத்துகின்றதென்பதை நாம் புரிந்து கொள்வது அவசியம்.  அதேவேளை பிறரின் அபிப்பிராயங்கள் தொடர்பாக ஒருவர் 
சகிப்புணர்வைக் கொண்டிருப்பதும் அவற்றுக்கு மதிப்பளிப்பதும்  அவர்களின் கருத்துகளை  ஏற்றுக் கொள்வது அல்லது பின்பற்ற வேண்டுமென்பதாகவோ அல்லது உங்களின் நிலைப்பாட்டை விட்டுக் கொடுப்பதாகவோ அர்த்தப்படாது.  இது சாதாரணமான அடிப்படை மனித உரிமை விடயம்.  சகிப்புணர்வின்மையே வன்முறை வெடிப்பதற்கு முக்கியமான காரணியாக அமைந்திருக்கின்றதென்பது அடையாளம் காணப்பட்டதால் நவம்பர் 16 ஆம் திகதியை (இன்று ) சகிப்புணர்விற்கான சர்வதேச  தினமாக 1996 இல் ஐ.நா. பொதுச் சபை பிரகடனப்படுத்தியிருந்தமை இத்தினத்தின் பெறுமானத்தை உணர்த்துகின்றதென்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

 

TOTAL VIEWS : 2015
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
hz4pr
  PLEASE ENTER CAPTA VALUE.