பாரிய சவாலாக வறுமை ஒழிப்பு
2017-10-24 09:23:26 | General

2030 இல் வறுமையை இல்லாதொழிப்பதற்கான செயற்றிட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வார இறுதியில் ஆரம்பித்து வைத்திருக்கிறார். கிராம சக்தி மக்கள் இயக்கம் என்ற இத் திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தாழ்ந்த மட்டத்தில் வருமானம் பெறும் குடும்பங்கள் அதிக  எண்ணிக்கையில் வாழும் மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து இத் திட்டத்தில் உள்ளீர்த்துக் கொள்ளப்படுமெனவும்  2020 இல் 1000 கிராமங்களும் பின்னர்  5000  கிராமங்களும் இத் திட்டத்தில் உள்வாங்கிக் கொள்ளப்படவுள்ளது.

நடப்பு வருடத்தை (2017) வறுமை ஒழிப்பு ஆண்டாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருக்கிறது. சமூக, பொருளாதார ரீதியில் நலிந்த நிலையிலுள்ள மக்களுக்கு வலுவூட்டி அவர்கள் உண்மையான சுதந்திரம் மற்றும் சமத்துவமான பிரஜைகளாக வாழச் செய்வதே இத் திட்டத்தின் பிரதான நோக்கமெனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 


 உண்மையில் நாட்டு மக்களை வறுமையிலிருந்தும் விடுவிப்பது எந்தவொரு அரசாங்கத்தினதும் கடப்பாடாகும். "வறுமையை வெற்றி கொள்தல் என்பது தன்னார்வ சேவை அல்ல', அது  நீதியான நடவடிக்கை, கௌரவம் மற்றும் கண்ணியமான வாழ்வு என்பனவற்றுக்கான உரிமையாகவும் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதாகவும் அமைந்திருக்கிறது' என்று தென்னாபிரிக்காவின் மறைந்த ஜனாதிபதி நெல்சன் மண்டேலா கூறியுள்ளார்.

கடந்த அக்டோபர் 17 இல் உலகம் சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை அனுட்டித்தது. வறுமையில் வாடும் மக்களின் போராட்டத்தையும் அவர்களின் துன்பத்தையும் அறிந்து கொள்வதற்கும் இவற்றிலிருந்தும் அவர்கள் விடுபடுவதற்கு முன்னெடுக்க வேண்டிய முயற்சிகளை அடையாளம் கண்டுகொள்வதற்குமான வாய்ப்பை இந்த "தினம்' வழங்கியிருந்தது.

உலக மக்கள் தொகையில் 40 சதவீதமானோர் தற்போது வறுமையில் வாடுகின்றனர். மனித உரிமைகளும் சர்வதேச பொருளாதாரமும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டவையாக இருப்பதுடன் இவற்றுக்கிடையிலான தொடர்பானது இணக்கப்பாட்டைக் கொண்டதாக இருப்பதில்லை. சில சந்தர்ப்பங்களில் பிரச்சினையானவையாகவும் போட்டித் தன்மையுடையவையாகவும் இருப்பதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


அதேவேளை, "வறுமையிலிருந்தும் விடுதலை' பெறுதல் அடிப்படை மனித உரிமையெனவும் அவர்கள் உறுதிபடக் கூறுகின்றனர். மனிதர்களுடன் தொடர்புபட்ட பல்வேறு உரிமைகள் உள்ளன. ஒருவருக்கு அவர் சாப்பிடுவதற்கு உணவு இல்லாவிடின், உறங்குவதற்கு இருப்பிடமொன்று இல்லாவிடின் அவர் பாடசாலைக்கு செல்வது பற்றியோ அல்லது சமூக ரீதியான நிகழ்வுகளில் பங்கேற்பது பற்றியோ நினைத்தும் பார்க்க முடியாது.

ஆனால், வறுமையானது பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விடயம் என்றும் மனித உரிமைகளுடன் அதனை தொடர்புபடுத்துவது ஒன்றுடன் ஒன்று பொருத்தப்பாடானது அல்ல என்றும் கல்விமான்கள் சிலர் வாதிட்டிருப்பதையும் அவதானிக்க முடியும். ஆனால், வறுமையை இல்லாதொழிக்காவிடின் அடிப்படை உரிமைகள், பிரச்சினைகள் சிலவற்றுக்கு தீர்வு காண்பதில் வெற்றிபெற முடியாது.

இலங்கையைப் பொறுத்தவரை யுத்தத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 8 ஆண்டுகள் கடந்த நிலையிலும் வறுமையும் கடன் சுமையும் தொடர்ந்து வாட்டுவதை தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பிந்திய குடும்ப வருமானம் மற்றும் செலவின மதிப்பீட்டு அறிக்கை வெளிப்படுத்தியிருக்கிறது. 


திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் வறுமை அதிக உயர்மட்டத்தில் காணப்படுகிறது. 2012/2013 இல் நாட்டின் குடும்ப வருமான செலவின மதிப்பீடு சராசரி 12.7% மாக இருக்கையில் கிளிநொச்சியில்  43% மாக காணப்பட்டது.

  "யுத்தம் முடிவுக்கு வந்த காலத்திலிருந்து மிக மோசமாக பின்னடைவு கண்டிருக்கும் மாவட்டங்களை தேசிய பொருளாதாரத்தில் ஒருங்கிணைப்பதற்கு அர்த்தபுஷ்டியான வழிமுறையொன்றை கொண்டிருப்பதாயின்  வரவு செலவுத் திட்டத்தில் கிராமப் புறப் பொருளாதாரத்தில் கணிசமான முதலீட்டை மேற்கொள்வதுடன், கடன் நிவாரணமும் தேவையானதாகவுள்ளது' என்று அரசியல் பொருளியலாளர் அகிலன் கதிர்காமர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

கடும் வரட்சி, மழை, வெள்ளம் , மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களும் விவசாய உற்பத்தி உட்பட தொழில் துறைகளுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இதனால் கிராமப்புற வறிய மக்களே அதிகளவுக்கு பாதிப்பை எதிர்கொள்கின்றனர். இதனால் அவர்களுக்கு வருமானத்தைப் பெருக்குவதற்கான மாற்றுவழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், வலுவான சமூக, நலன்புரி நடவடிக்கைகளும் அவசியம்.

"வறுமை, சமத்துவமின்மை, அநீதி உலகில் இருக்கும் வரை எவரும் உண்மையான அமைதியை எட்ட முடியாது' என்று மாமனிதர் மண்டேலா புகழ்பெற்ற  உரையை அரசாங்கங்களின் தலைவர்கள் எப்போதும் நினைவிலிருத்திக் கொள்வது இன்றியமையாததொன்றாக அமைய முடியும்.

TOTAL VIEWS : 980
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ejn1y
  PLEASE ENTER CAPTA VALUE.