தொடர்ந்து அச்சுறுத்தும் டெங்கு ஆட்கொல்லி
2017-03-21 12:10:58 | General

நாடளாவிய ரீதியில் ஆட்கொல்லியான "டெங்கு' அச்சுறுத்தல் அதிகரித்திருக்கின்றது. திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியாப் பகுதியில் 66 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. கடந்த ஜனவரியின் முதல் இரு வாரங்களுக்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த வருடம் நோயின் தாக்கம் அதிகரித்துச் செல்லும் என்ற அச்சம் பரவலாக காணப்படுகிறது.

நுளம்பினால் ஏற்படும் இந்த வியாதி தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு பிரசார நடவடிக்கைகளை அரசாங்கம்  குறிப்பாக  சுகாதார அமைச்சு முன்னெடுத்து வருகின்ற போதிலும்  அதனைக் கட்டுப்படுத்துவதென்பது பாரிய சவாலாக தோன்றுகிறது.

டெங்குடன் தொடர்புபட்ட சட்ட மூலத்தில் மாற்றத்தை ஏற்படுத்த  அரசாங்கம் ஏற்கனவே ஆராய்ந்து  வருவதுடன்  டெங்கு  காய்ச்சலை பரப்பும் நுளம்புகள் பெருகுவதற்கு களம் அமைத்துக் கொடுக்கும்  விதத்தில் சுற்றுச் சூழலை அசுத்தமாக வைத்திருப்போர்க்கான அபராதத்தை அதிகரிப்பதற்கான சாத்தியப்பாடு குறித்தும் கவனத்தில் கொள்ளப்பட்டிருப்பதாக  அதிகாரிகள் கூறுகின்றனர்.  

ஆனால் தற்போது இந்நோய் பரவும் வேகத்தை கவனத்திற்கு எடுத்துக்கொண்டால் இந்த நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விரிவான கொள்கை ஒன்றை வகுத்து துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கான தேவைமேலெழுந்திருப்பதாக தோன்றுகின்றது.  

டெங்குக்காய்ச்சல் அண்மைக்காலமாக ஏற்பட்ட வியாதி அல்ல. நீண்ட காலமாக நாட்டில் இருந்து வருகின்றது .நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்த நிலையில் 2010இல் டெங்கு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை செயற்பாட்டுத்திறனுடன் முன்னெடுப்பதற்காக 2010 இல் ஜனாதிபதி செயலணிப்பிரிவும் நியமிக்கப்பட்டிருந்தது .நாட்டின் பல பகுதிகளிலும் இந்நோயின் தாக்கம் காணப்பட்டாலும் மேல்மாகாணத்திலேயே டெங்குநோயாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்படுகின்றனர். 


துரிதமான நகர மயமாக்கல் டெங்கைப் பரப்பும் நுளம்புகள் பெருகுவதற்கான களமாக அமைந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. தற்போது நாடளாவிய ரீதியில் பாடசாலை செல்லும் பிள்ளைகளின் பெற்றோர் மத்தியில் இந்த டெங்கு நோயே அதிகளவிற்கு பீதியுடன் பேசப்படும் விடயமாகக் காணப்படுகின்றது. 
ஒழுங்கு விதிகளை உள்ளடக்கிய சட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தாலும் இந்த நோயைக் கட்டுப்படுத்த இயலாத  தன்மையே   நீடித்திருக்கின்றது. 


டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏற்புடையதாக சூழலை வைத்திருப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தேசிய டெங்கு தடுப்பு சட்டமூலமும் அறிமுகப்படுத்தப்பட்டது. அரசாங்க அதிகாரிகள் முதல் சாதாரண பிரஜைகள் வரை சகலருமே இந்த டெங்கு வியாதிக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கான கடப்பாடு கொண்டவர்களாக சட்ட மூலத்தின் பிரகாரம் இருக்கின்ற போதிலும் அதனைக் கட்டுப்படுத்த இயலவில்லை. 


கடந்த 2016இல் 40ஆயிரம் பேர் வரை இலங்கையில்  டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தனர். மேல் மாகாணத்திலேயே டெங்கு நோயாளர்களின் தொகை அதிகமாக காணப்பட்ட நிலையில் இப்போது நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவியுள்ளது. 


இந்த நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்திருக்கின்றது.ஏடிஸ் ஏஜிபிற்றி  நுளம்பே  டெங்கை பரப்புகின்றது. அதிகளவிற்கு நகர குடியிருப்புகளிலேயே காணப்படும் இந்த நுளம்பு  வெற்றுக்கொள்கலன்கள், தேங்காய் சிரட்டைகள், சிறிய வெற்றுப் பாத்திரங்கள், பூச்சாடிகளில் காணப்படுவதாகவும் பகல்வேளைகளிலேயே கடிப்பதாகவும் அதிலும் அதிகாலை மற்றும் மாலை கருக்கலில் அதிகளவிற்கு குத்துவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். 


தலைவலி, கண்களுக்கு பின்னால் வலி, தசை, மூட்டுவலி, குமட்டல், வாந்தி, தோல் தடித்தல், சிவப்பு நிறம், இரத்தக்கசிவு போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்களை நாடுமாறு  சுகாதார அமைச்சு அறிவித்திருக்கின்றது.  
இந்த வைரஸ் தொற்றினால் 4  5 நாட்களுக்குள் ஆகக் கூடியதாக 12 நாட்களுக்குள் தொற்று ஏற்படக் கூடுமென எச்சரிக்கப்பட்டிருக்கின்றது. 


ஆசியா, ஆபிரிக்கா, மேற்கு பசுபிக் பிராந்தியம் , அமெரிக்காவென 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்நோய் பரவியிருக்கின்றது. வருடாந்தம் சுமார் 10 கோடி மக்கள் இந் நோய்த் தொற்றுக்கு இலக்காவதாக கூறப்படுகின்றது. 


மலேரியா நோயின் அச்சுறுத்தலில் இருந்தும் இலங்கை முற்றாக விடுபட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் ஆறுதலடைந்திருக்கும் நிலையில் இப்போது நுளம்பினால் பரவும் மற்றொரு ஆட்கொல்லியான டெங்கு தலை தூக்கியிருக்கின்றது. 
உலக சனத்தொகைப் பெருக்கம், கிராமப்புறங்களில் இருந்து 
நகரப்பகுதிகளுக்கான புலம்பெயர்வு அதிகரிப்பு , நகரமயமாதல் அதிகரிப்பு, நகரங்களின் சுகாதார வசதியின்மை அதிகரிப்பு, முறையான சுகாதார வசதியின்மை,   இந்த  காவியைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரிகள் பற்றாக்குறை, மக்கள் மத்தியில் காணப்படும் அலட்சிய சுபாவம்  என்பனவே இந்நோய் பரவுவதற்கு அடிப்படைக் காரணமாகும்.

விழிப்புணர்வுத் திட்டங்களை துரிதமாக முன்னெடுத்தல், தடுப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கிய சுகாதாரக் கல்வி, துரிதமாக பரிசோதனை செய்தல், பரிசோதனைக்கான வசதிகளை  பரந்தளவில் ஏற்படுத்திக் கொடுத்தல் என்பன இந்நோயைக் கட்டுப்படுத்த துரிதமாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளாகும். நுளம்பு பெருகும் இடங்களை அழித்தல், துப்புரவாக சுற்றுச் சூழலை வைத்திருத்தல், குப்பை கூழங்களை அகற்றுவதை கிரமமாக மேற்கொள்ளுதல், நுளம்பு வலைகளை, நுளம்புக் கொல்லிகளை பயன்படுத்துதல், வீடுகளுக்குள் நுளம்புகள் வராமல் தடுப்பு  நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்  போன்ற நடவடிக்கைகளையும் அக்கறையுடன் மேற்கொள்ளுதல். இந்நோய் தொற்றாமல் அல்லது பீடிக்காமல் தடுத்து நிறுத்துவதற்கான வழிமுறைகளாகும். இதற்கு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வே இந்த தருணத்தில் அதிகளவிற்கு தேவைப்படுவதாக தோன்றுகின்றது.

TOTAL VIEWS : 2013
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
gvq9w
  PLEASE ENTER CAPTA VALUE.