சிறப்பான  பெறுபேறு கிட்ட பொருத்தமான அணுகுமுறை அவசியம்
2016-08-17 12:02:01 | General

புகைத்தல் உடல் ஆரோக்கியத்துக்கு கேடானது என்றும் பணவிரயத்தை ஏற்படுத்துகின்றதெனவும் கூறுவது யதார்த்தமான உண்மை. இந்த விடயம் தொடர்பாக சிவில் சமூக அமைப்புகளும் அரசாங்கங்களும் பாரிய அளவில் விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதையும் அவதானிக்கமுடிகிறது.

மருத்துவ மனைகள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உட்பட பொது இடங்களில் புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்றவை பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளன. புகைப்பிடிப்பதிலிருந்து விடுபட்டவையாக நகரங்கள் இருக்கவேண்டுமென வலியுறுத்தல்களும் கனதியாக அதிகரித்து வருகின்றன.

பொதுமக்களின் ஆரோக்கியத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் உறுதிப்படுத்துவதை நோக்கியவையாக இந்த நடவடிக்கைகள் அமையும் போது சரியான திசையில் செல்வதாக நோக்கப்படுகின்றது.

புகைப்பிடிப்பவர்களுக்கு இந்தவிடயம் அசௌகரியமாக, கவலையை ஏற்படுத்துபவையாக இருந்தாலும் இந்த விடயம் சரியானதாக கருதப்படுகிறது. இதேபோன்று வீடுகள், கிராமங்கள், நகரங்களை வன்முறைகளிலிருந்தும் விடுபட்டவையாகவும் வீட்டு வன்முறைகளிலிருந்தும் விடுபட்டவையாகவும் இன, மத ரீதியான பாரபட்சங்கள், தாக்குதல்களிலிருந்தும் விடுபட்டவையாகவும் சகிப்புணர்வு, புரிந்துணர்வு கொண்டவையாகவும் மாற்றுவதற்குரிய சாத்தியப்பாட்டை சிவில் சமூகங்களும் அரசாங்கங்களும் கொண்டிருக்கின்றன என்பதை நிராகரித்துவிடமுடியாது.

அத்துடன் ஊழல், மோசடியிலிருந்தும் விடுபட்டவையாகவும் எதேச்சாதிகார நடவடிக்கை களிலிருந்தும் விடுபட்டவையாகவும் நாட்டையும் துணைநிர்வாக அலகுகளையும் கொண்டிருப்பதுவும் இன்றயமையாததாகும். 


உண்மையில் புகைப்பிடிப்பதால் ஏற்படும் கேடுபோன்று இந்த நடவடிக்கைகளும் எமது ஆரோக்கியத்திற்கும் பொருளாதாரத்திற்கும் முக்கியமானவையாகும். ஆனால் இந்த விடயங்கள் குறித்து சமூகங்கள் அதிகளவுக்கு மௌனத்தையே கடைப்பிடிக்கின்றன. வீதிகளில் குப்பைபோடுதல், எச்சில் துப்புதல், பொது இடங்களில் சிறுநீர் கழித்தல், வீதிகளில் அல்லது பொது இடங்களில் மின் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தால் அணைக்காமல் செல்தல், பொது இடங்களில் நீர்க்குழாய்கள் திறந்துவிடப்பட்டிருந்தால் மூடிவிடாமல் செல்தல், பொது இடங்களை தவறாக பயன்படுத்துதல், அரசகாணிகளை ஆக்கிரமித்தல்,  தனியார் காணிகளை பலவந்தமாக கையகப்படுத்தல், வரி ஏய்ப்புச் செய்தல் போன்ற செயற்பாடுகள் தொடர்பாக பலர் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. சில சமயங்களில் இச் செயற்பாடுகளில் ஈடுபட்டோர் தண்டிக்கப்படுவதுண்டு. அதேவேளை பாரிய குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படாத சந்தர்ப்பங்களும் உள்ளன. 

புகைப்பிடித்தல் உண்மையில் தீங்கானதுதான். அது தொடர்பாக மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் அதனைவிட தீங்கான பல செயற்பாடுகள் மனித உயிர்களுக்கும் சமூகங்களுக்கும், நாடுகளுக்கும் தீமையை ஏற்படுத்துகின்றன.

ஆனால் பொது இடங்களில் புகைத்தலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை சட்ட ரீதியாக உடனடியாக மேற்கொள்ளும்போது இச் செயற்பாட்டை கட்டுப்படுத்துவது இலகுவாகிறது. ஆனால் ஊழல் மோசடி, வல்லுறவுகள், வீட்டு வன்முறைகள், இன, மத, ரீதியான தாக்குதல்கள் தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் இக்குற்றச்செயல்களை உடனடியாக முழுமையாக முடிவுக்கு கொண்டுவர இயலாத நிலைமையே காணப்படுகிறது.


உண்மையில் குற்றச் செயல்கள் அல்லது சமூக விரோதச் செயற்பாடுகள், சிறியவையோ அல்லது பாரியவையோ, நாடொன்றின் சட்டங்களுக்கு அமைவாக அவற்றுக்கு எதிராக சரியான நடவடிக்கைகளை எடுக்கும் போது குற்றச் செயல்கள் குறையும். அத்துடன் சகல சட்டவிரோத நடவடிக்கைகளையும் முழுமையாக சட்டரீதியாக கையாளாமல் தார்மீக ரீதியில் அவற்றைக் கையாளும்போது சாதகமான பெறுபேறை எட்டமுடியும்.

TOTAL VIEWS : 2599
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
xtvv8
  PLEASE ENTER CAPTA VALUE.