ஐ.நா.நிபுணர் குழுவின் வலியுறுத்தல்
2017-12-19 11:54:33 | General

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு தசாப்த காலத்தை அண்மித்துக் கொண்டிருக்கின்ற போதிலும் போர்க் காலத்தில் இடம்பெற்ற தன்னிச்சையான கைதுகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் கடுமையான சட்டமூலத்தை சுயாதீன முறையில் கண்காணிப்பதை வலுப்படுத்துவதற்கும் தேவையான சீர்திருத்தங்களை அவசரமாக அமுல்படுத்துமாறு அரசாங்கத்திடம் கடந்த வார இறுதியில் இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐ.நா. நிபுணர் குழு வலியுறுத்தியிருப்பதை அவதானிக்க முடியும்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் 1979 இலிருந்து அமுல்படுத்தப்படுகிறது. குடும்பத்தினருக்கு அறிவிக்காமல் சந்தேக நபரொருவரை கைது செய்து தடுத்து வைக்கவும் வழக்கறிஞர்கள் சென்று பார்ப்பதை மட்டுப்படுத்துவதற்கும் 18 மாதங்கள் வரை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் தடுத்து வைப்பதற்கும் பொலிஸாருக்கு  பரந்தளவிலான அதிகாரங்களை இச்சட்டமூலம் கொடுக்கின்றது.

போர் முடிவுக்கு வந்ததையடுத்து தன்னிச்சையாக தடுத்து வைப்பதை முடிவுக்குக் கொண்டு வரப் போவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது. அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக புதிய சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்தப் போவதாகவும் தெரிவித்திருந்தது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலம் 2015 ஜனவரியில் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் அதிகாரத்திற்கு வந்த மைத்திரிபால 
சிறிசேன  ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமொன்றை அறிமுகப்படுத்தப் போவதாக உறுதியளித்திருந்தது. சர்வதேச ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் சட்டமூலத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய சட்டமூலம் அமுலுக்கு  கொண்டு வரப்படுமெனவும் உறுதியளிக்கப்பட்டது. 

இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் தமிழ் மக்களே அதிகளவுக்கு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதுடன், பலருக்கு இதுவரை குற்றப் பத்திரிகைகள் கூட தாக்கல் செய்யப்படவில்லை. இப்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலமொன்றை நடைமுறைப்படுத்துமாறு ஐ.நா. கேட்டிருக்கிறது.

தன்னிச்சையாக ஆட்களை தடுத்து வைக்கும் விவகாரத்தைக் கையாளும் ஐ.நா.வின் செயற்குழு 11 நாட்கள் நாட்டின் பல இடங்களுக்கு சென்றதுடன், பல சந்திப்புகளையும் நடத்தியிருந்தது. தாங்கள் பார்த்தவை, கேட்டவை, உணர்ந்து கொண்டவை தொடர்பாக விஜயத்தின் இறுதியில் கருத்துகளைத் தெரிவித்தபோதே தூதுக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான லெய்க் ரூமே; “தன்னிச்சையான கைதுகளுக்கு எதிரான செயற்பாட்டுத் திறன் வாய்ந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் தன்னிச்சையாக தடுத்து வைத்திருக்கும் செயற்பாடுகளால் தனிப்பட்ட சுதந்திரத்தை ஒருவர் கொண்டிருப்பதற்கான உரிமைக்கு குறிப்பிடத்தக்க பல சவால்கள் காணப்படுவதை தாங்கள் அடையாளம் கண்டு கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பிள்ளைகள், பெண்கள், முதியோர் உள ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளவர்கள், வறியவர்கள் போன்ற சமூக ரீதியாக நலிவான தன்மை கொண்டவர்கள் சுதந்திரம் இழக்கப்பட்ட நிலையில் இருப்பது குறித்து தாங்கள் கவனத்தை செலுத்தியிருப்பதாகவும்‘ அவர் குறிப்பிட்டிருந்தார்.

போருக்குப் பின்னரான நல்லிணக்கம் மற்றும் போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை நிறைவேற்றியிருந்த நிலையில், குறிப்பாக தற்போதைய அரசாங்கம் இலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியிருந்த நிலையில், அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில்  கொழும்பு தாமதம் காட்டுவதாக மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்களும் குழுக்களும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகின்றன.

ஜி.எஸ்.பி.+ சலுகைகளை மீண்டும் பெற்றுக் கொள்ளும் பொருட்டு மனித உரிமைகள் தொடர்பான சீர்திருத்தங்களை முன்னெடுக்கப் போவதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உறுதியளித்திருந்த நிலையில், இந்த விடயத்தில் அரசாங்கத்தின் மெத்தனப் போக்கால் தாங்கள் ஏமாற்றமடைந்திருப்பதாக கடந்த நவம்பரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கூறியிருந்தனர்.

தடுத்து வைக்கப்பட்டிருப்போர் மீது சித்திரவதை மற்றும் வன்புணர்வு இடம்பெற்றிருப்பதற்கான ஆவனப்படுத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்யுமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தி வருகிறது. அத்துடன் பொலிஸார் வசமுள்ள பரந்தளவிலான அதிகாரங்களையும் கட்டுப்படுத்துமாறு கூறுகிறது. 

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தப் போவதாக அரசாங்கம் கூறிவரும் நிலையில், எந்தவொரு சட்டமூலமும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சிறப்பான அமுலாக்கம் என்பவற்றுக்கு அமைவாகவே இருக்க வேண்டும் என்று ஐ.நா. நிபுணர் குழுவினர் வலியுறுத்தியிருப்பதை காண முடிகிறது.

2016 இல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்  அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை தயாரிக்க ஆரம்பித்த போதிலும் தன்னிச்சையான கைதுகள், தடுத்து வைப்புகளினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்கள்,  சட்டத்தரணிகள், மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள், பயங்கரவாதத் தடைச் சட்டத்திலுள்ள சித்திரவதை போன்றவற்றை கட்டுப்படுத்தாத பிரச்சினைக்குரிய விடயங்கள் உத்தேச சட்டமூலத்திலும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக கடும் ஆட்சேபனைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இயல்வு வாழ்வு ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறிவருகின்ற போதும் சாதாரண பொதுமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு, சுதந்திரத்திற்கு குந்தகமான ஏற்பாடுகளை நீக்கி விடுவதில் இனிமேலும் தாமதம் கூடாது. 

 

TOTAL VIEWS : 1950
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
xa7jq
  PLEASE ENTER CAPTA VALUE.