'மதத்தை' முன் நிறுத்துதல்
2017-08-02 09:12:42 | General

நாட்டில் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் அனுஷ்டிக்கும் பௌத்த மதத்திற்கு தற்போதைய அரசியலமைப்பில் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருப்பதுடன் புதிதாக தயாரிக்கப்படும் யாப்பிலும் இந்த ஏற்பாடு தொடர்ந்திருக்குமெனவும் அதில் மாற்றம் கொண்டுவரப்படமாட்டாதென்றும் இதற்கு வட, கிழக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பெரும்பாலான கட்சிகள் இனங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படும் நிலையில் வடக்கு, கிழக்கில் பௌத்தத்தை திணிக்கவேண்டாமெனவும் அந்தப் பிராந்தியத்தில் சகல மதங்களுக்கும் சமனான உரிமையை வழங்குவதை புதிய யாப்பில் உத்தரவாதப்படுத்துமாறும் வட மாகாணத்தின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியிருப்பதை காணமுடிகிறது.


வேறுபட்ட இன, மத, மொழிக் குழுமங்கள் இங்கு வாழ்ந்துவரும் நிலையில் வேற்றுமையில் ஒற்றுமையை கொண்டாடும் கலாசாரத்தை மேம்படுத்துவதே நாட்டின் வளமான எதிர்காலத்துக்கு சிறந்ததென அறிவுரை கூறப்படுகின்ற போதிலும் எண்ணிக்கையில் பெரும்பான்மையோரின் அபிலாஷைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் தன்மையே அதிகளவில் காணப்படுகிறது.

அதேவேளை நாட்டு மக்களால் கடைப்பிடிக்கப்படும் சகல மதங்களும் ஒற்றுமையையே வலியுறுத்துகின்ற போதிலும் நடைமுறையில் அந்த மத ஒற்றுமை கனதியாக ஏற்பட்டிருக்கவில்லை. அதுவும் அண்மைக்கால சிறுபான்மைக் குழுக்களுக்கு எதிராக பெரும்பான்மைக் குழுமங்கள் அடக்கு முறையை பிரயோகிக்கும் நிலைமையும் ஏற்படுகின்றது.


சகல மதங்களும் அன்பு, கருணை, பரிவிரக்கம், ஐக்கியம் என்பனவற்றைப் போதிக்கின்றன. மனித குலம் ஒன்றேயென்று அழுத்தி உரைக்கின்றன. அதேவேளை இதே மதமே மனிதர்கள் மத்தியில் பிளவையும் பிரிவினையையும் ஏற்படுத்த காரணமாக அமைவதை இந்நாட்களில் அதிகளவில் எம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது. அனைத்து மதங்களினதும் அடிப்படைக் கருப்பொருள் பிற உயிர்களிடத்து அன்பு வைத்தலாகும்.

அதாவது தன்னுயிர் போன்று பிற உயிர்களை நேசித்தலாகும். ஆனால் யதார்த்தத்தில் மதத்தின் பெயரால் வெறுப்புணர்வு, குரோதம் கட்டியெழுப்பப்படுவதையும் இந்த நச்சுத்தன்மை பரப்பப்படுவதையும் அவதானிக்க முடியும். இதற்கு மதங்களை காரணமாக ஒருபோதும் கருதமுடியாது. மதங்களைப் பின்பற்றுவோரே  தனிப்பட்ட நன்மைக்களுக்காக அநீதிகளுக்கு துணைபோகின்றனர். வெளியே கதைக்க முடியாத கொடூரங்கள் கூட மதத்தின் பெயரால் அரங்கேற்றப்படுகின்றன.


எந்தவொரு மதத்துக்கும் "நம்பிக்கை', யென்பது மிகவும் முக்கியமானதாகும். ஆனால் அந்த "நம்பிக்கை' மதங்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வை தோற்றுவிக்கக்கூடாது. உள்நோக்கம் கொண்டவர்கள் மதத்தின் பெயரால் அதனைத் தங்களுக்கு சாதகமான முறையில் பயன்படுத்த முற்படுவதுடன் கண்மூடித்தனமான நம்பிக்கையை பிரசாரப்படுத்தவும் முயற்சிக்கின்றனர்.  உணர்வு பூர்வமான நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட மதப்பற்றை தத்தமது உள் நோக்கங்களுக்காக பயன்படுத்த அல்லது தமது சொந்த நன்மைகளுக்காக பயன்படுத்த முற்படுவோரே பெரும்பாலும் இன, மத மேலாதிக்கவாத சிந்தனைகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உசுப்பேத்தி விடுகின்றனர்.

உண்மையில் வெவ்வேறான மதங்களைப் பின்பற்றுவோர் தத்தமது மத நம்பிக்கைகளை கைக்கொள்ளவும் பேணிப் பாதுப்பதற்குமான அனுசரணையை அரசாங்கங்கள் பெரும்பாலும் வழங்கிவருகின்றன. அதேவேளை பல்மத, பல்லின மக்கள் வாழும் நாடுகளில் அனைத்து மதங்களுக்கும் அரசியலமைப்பு ரீதியாக சமவுரிமை, சம அந்தஸ்து வழங்கி மத நல்லிணக்கத்தை பேணி
வருவதையும் காணமுடியும்.

இலங்கையைப் பொறுத்தவரை வட, கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களிலும் பெரும்பான்மையினராக பௌத்த சிங்கள மக்கள் வாழும் நிலையில் பௌத்தத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் ஏற்பாட்டை அரசியலமைப்பில் கொண்டிருப்பதை தொடர்வது அந்த மாகாணங்களின் விருப்பத்தைப் பொறுத்ததெனவும் அதேசமயம் வட, கிழக்கு மாகாணங்கள் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களை அதிகளவுக்கு கொண்டிருப்பதால் அங்கு பௌத்தத்தை திணிக்காமல் சகல மதங்களும் சமவுரிமையுடன் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டுமென்ற வட மாகாண முதலமைச்சரின் வலியுறுத்தல் நியாயபூர்வமான தொன்றாகவே தோன்றுகிறது.

TOTAL VIEWS : 1852
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
wekt4
  PLEASE ENTER CAPTA VALUE.