மாற்றுத்திறனாளிகள் குறித்து விசேட கரிசனை தேவை
2016-12-06 12:23:18 | General

யுத்தம் முடிவுக்கு வந்து ஏழரை ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட போதிலும் போர் காரணமாக அவயவங்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்குரிய மேம்பாட்டுத் திட்டங்கள் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லையென வவுனியா மாவட்ட வலுவிழந்தோருக்கான புனர்வாழ்வு நிலையத்தின் தலைவர் வி. சுப்பிரமணியம் தெரிவித்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

யுத்தத்தின் பின்னர் விசேட தேவையுடையவர்கள், விதவைகள், நிராதரவான குழந்தைகள், முதியவர்கள், வாழ்வாதாரமின்றித் தவிப்பவர்கள் தொடர்பாக அரசாங்கமும் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களும் ( உள்நாடு, வெளிநாடு உட்பட ) பல்வேறு வெளிநாட்டு அரசாங்கங்களும் சர்வதேச நிதி அமைப்புகளும் பல்வேறு உதவித் திட்டங்களை அறிவித்திருந்தவுடன் நிதி, பொருள் உதவி உட்பட வேறுபட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றன. 


ஆனால், விசேட தேவையுடையவர்களுக்கு மேம்பாட்டுத் திட்டங்கள் முறையான விதத்தில் மேற்கொள்ளப்படவில்லை யெனவும் சில வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் மாற்றுத்திறனாளிகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இன்னும் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாகவும் சுப்பிரமணியம் கூறியிருக்கிறார்.

குறிப்பாக கால்களை இழந்தவர்கள், கழுத்து அல்லது இடுப்புக்குக் கீழ் அவயவங்கள் செயலிழந்தவர்கள் அவர்களுடைய இருப்பிடங்களில் முறையான மலசலகூட வசதிகள் இல்லாமல்  பெருங் கஷ்டப்படுவதாகவும் குறிப்பாக பெண்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்குரிய விசேட வேலைத் திட்டத்தின் கீழ்  வட மாகாண சுகாதார அமைச்சு மலசலகூடங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 


மாற்று வலுவுடையவர்களில் பெண்களே அதிகளவுக்கு பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். அவர்களில் பலர் குடும்பச் சுமைகளை சுமக்க  வேண்டியிருக்கின்ற போதிலும் ஜீவனோபாயத்திற்கான உதவிகளின்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

அரசாங்கமும் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களும் வீட்டுத் திட்டங்களை முன்னெடுக்கின்ற போதிலும் இத் திட்டங்களில் உள்வாங்கப்பட்ட குடும்பங்களிலுள்ள விசேட தேவையுடையவர்கள் குறிப்பாக சக்கர நாற்காலிகளில் நடமாடுபவர்களுக்கான அணுகு முறை வசதிகள் தொடர்பாக அதிகாரிகள் போதிய கவனம் செலுத்தாமலிருப்பது பெருங்குறைபாடாக இருப்பதாக வவுனியா மாவட்ட வலுவிழந்தோருக்கான புனர்வாழ்வு நிலையத்தின் தலைவர் கவலை தெரிவித்திருப்பதையும் காண முடிகிறது. 


உள, உடல் ரீதியாக எந்தவொரு விசேட தேவைப்பாடும் இல்லாதவர்கள் பற்றி அதாவது அவர்களின் நிதி, உள, உணர்வு ரீதியான வெளிப்பாடுகள் குறித்து அதிகளவுக்கு அக்கறை செலுத்த வேண்டியதில்லை. ஆனால், எமது சமூகங்களிலுள்ள மாற்றுத்திறனாளிகள் குறித்து அல்லது விசேட தேவையுடையவர்கள் பற்றி நாங்கள் அதிகளவுக்கு அக்கறை செலுத்துதல் வேண்டும்.

சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்க வேண்டிய நிலைமை ஒருவருக்கு ஏற்பட்டால் பல்வேறுபட்ட தேவைகளை நிறைவேற்ற அவர் மற்றவருடைய உதவியை, ஆதரவையே நாட வேண்டியிருக்கும். இந்நிலையில் அவர்கள் அசௌகரியங்கள், சங்கடங்களை எதிர்கொள்வதுடன், தாங்கள் சக்தியற்றவர்கள் என்ற கவலையும் விரக்தியுமடைவதற்கும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

நரம்புத் தளர்ச்சியினால் ஏற்பட்ட விபத்துக்கள், பாரிசவாதம், நரம்புகளுடன் தொடர்புபட்ட வியாதிகள், பிறப்பிலிருந்தே விசேட தேவையுடையவர்களாக இருத்தல் போன்றவற்றால் மாற்றுத் திறனாளிகளாக வாழ வேண்டிய நிலைமை ஏற்படுவது ஒருபுறமிருக்க, இலங்கையை பொறுத்தவரை மூன்று தசாப்தகாலமாக நீடித்திருந்த யுத்தம் ஆயிரக்கணக்கானோரை விசேட தேவையுடையவர்களாக மாற்றியுள்ளது. 


உண்மையில் அவர்கள் சுயமாக வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்குரிய உதவிகளை வழங்குவதன் மூலம் சமூகத்திற்குள் அவர்களை உள்ளீர்த்துக் கொள்ள முடியும். உலகில் வாழும் சிறுபான்மைக் குழுக்களில் பாரியதாக மாற்றுத்திறனாளிகள் குழுவே இருப்பதை ஐ.நா. புள்ளி விபரங்கள் வெளிப்படுத்துகின்றன.

உலக சனத்தொகையில் இவர்களின் தொகை சுமார்  10 சதவீதமாகும். இவர்களுக்கு நேரடியாகவோ அல்லது தன்னார்வ தொண்டர் நிறுவனங்களூடாகவோ உதவுவதன் மூலம் அவர்களை வலுப்படுத்தி தாங்களும் சமூகத்தில் சம  அந்தஸ்துள்ள பிரஜைகளென்பதை உணரச் செய்ய முடியும்.

TOTAL VIEWS : 2343
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
tk5ll
  PLEASE ENTER CAPTA VALUE.