மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்
2017-07-14 09:49:25 | General

நாட்டில்  தீர்க்க  முடியாத பிரச்சினையாக விஸ்வரூபமெடுத்துவரும் குப்பை மற்றும் சுற்றாடல் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு ரெஜிபோம், பிளாஸ்டிக், பொலித்தீன் பைகள், , லஞ்ச்சீற்றுகளை பயன்படுத்தல், கொள்வனவு செய்தல் உற்பத்தி செய்தல் போன்ற அனைத்து செயற்பாடுகளையும் அரசாங்கம் தடைசெய்துள்ளது.

இத்தடை எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் அமுலாகவுள்ளது. பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனை குறித்த தேசிய கொள்கையொன்றை உருவாக்க கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்கமைய குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் செயற்படுத்த மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதையடுத்தே இத் தடை  எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம்  திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.


இன்றைய அவசரகதி வாழ்வில் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. எங்கும் எதிலும் பிளாஸ்டிக் பொருட்களின் ஆதிக்கம் அதிகரித்து எல்லை கடந்துவிட்டதால் அதற்குரிய விலையை  இயற்கை அனர்த்தங்களாகவும் டெங்கு போன்ற ஆட்கொல்லி நோய்களாகவும் சுற்றுச்சூழல் அழிவுகளாகவும் இலங்கை கொடுத்துவருகின்றது. கடந்த வருடத்தில் 7159.5 கிலோ கிராம்  பிளாஸ்டிக் கழிவுகளும், 44038.67 கிலோ கிராம் இலத்திரனியல் கழிவுகளும் இலங்கையில்  அகற்றப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.

இதன் மூலம் இலங்கையை பிளாஸ்டிக் பொருட்கள் எந்தளவுக்கு நாசப்படுத்தியிருக்கும் என்பதனை அறிந்து கொள்ள முடியும்.பிளாஸ்டிக் பொருட்கள் சில நிமிடம் பயனைத் தந்து விட்டு பல நூற்றாண்டுகளுக்கு எமது சந்ததிக்கும் எமது மண்ணுக்கும் கெடுதியை ஏற்படுத்துகின்றன.


இலங்கையில் நாளொன்றுக்கு உணவுகளை பரிமாறப் பயன்படுத்தப்படும் இரண்டு கோடி லஞ்ச் சீற்றுகள் சுற்றுச் சூழலில் கொட்டப்படுவதாக மத்திய சுகாதார அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் நபரொருவர் வருடமொன்றுக்கு பயன்படுத்திவிட்டு சுற்றுச் சூழலில் வீசுகின்ற பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கின்  நிறை 5.72 கிலோ கிராமாகவுள்ளது. கொழும்பு மாநகரினுள் நாளாந்தம் சுமார் ஆறு இலட்சம் பேர் வருகை தருகின்றனர்.

அவர்களினூடாக சுமார் 12 இலட்சம் லஞ்ச் சீற், சொப்பின் பைகள் மாநகரத்திற்குள் குப்பையாக வந்து சேர்வதாக கொழும்பு மாநகர ஆணையாளர் வி. கே. ஏ. அனுர குறிப்பிட்டுள்ளார். பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்  , ரெஜிபோம்,லஞ்ச் சீற் போன்றவற்றை மக்கள் அதிகளவில் பயன்படுத்துவதால் நாட்டில் சேரும் குப்பைகளில் 10 முதல் 15 வீதமான இடத்தை இவை பிடித்துள்ளன.


எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள அரசின் தடைக்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. பொலித்தீன், பிளாஸ்டிக், ரெஜிபோம், லஞ்ச் சீற் போன்றவை அன்றாட பாவனைக்கு இலகுவானதாகவும், பாவனையின் பின்னர் தூக்கி வீசப்படக்கூடியதாகவும் இருப்பதாலும் இவை பொருட்களைக் காவிக் கொண்டு செல்வதற்கு இலகுவாகவுள்ளதுடன் பொருட்களை பொதிசெய்வதற்கு இலகுவாகவும் மிகக் குறைந்த விலையில் வாங்கக் கூடியதாகவும் உள்ளதாலும்  நேர, பண விரயங்களை இவை குறைப்பதாலும் தடை செய்யக்கூடாதென எதிர்ப்புக் குரல்கள் குறிப்பாக வர்த்தகர்கள், உணவக உரிமையாளர்களிடமிருந்து எழுந்துள்ளன. எனினும் அதற்கு மாற்றுவழிகளையும் அரசு  அறிவித்துள்ளது.


ரெஜிபோம், பொலித்தீன் பைகள்,பிளாஸ்டிக் , லஞ்ச் சீற்களை பயன்படுத்தல், கொள்வனவு செய்தல், உற்பத்தி செய்தல் போன்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் அரசு விதித்துள்ள தடை வரவேற்கப்பட வேண்டியதொன்று. இலகுவானது, நேர, பண விரயங்களைக் குறைக்கக் கூடியது என்பதற்காக  நாம் நாட்டின் சுற்றுச் சூழலையும் மக்களின் ஆரோக்கிய வாழ்வையும் இவற்றுக்கு பணயம் வைக்க முடியாது.

எனவே அரசின் ரெஜிபோம், பிளாஸ்டிக், பொலித்தீன் பைகள், லஞ்ச் சீற்களை பயன்படுத்தலுக்கான தடையை மக்களேற்றுக்கொண்டேயாக வேண்டும். அரசின்
தடைக்கு மதிப்பளித்து ஒவ்வொருவரும் இப் பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும். அரசும் இத்தடையை கடுமையான முறையில் அமுல்படுத்தி நாட்டினதும் எமது எதிர்கால சந்ததியினதும் நலன்களை பாதுகாக்கவேண்டும்.

TOTAL VIEWS : 1632
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
rsh3n
  PLEASE ENTER CAPTA VALUE.