முன்னொருபோதும் இல்லாத அச்சுறுத்தல்
2016-07-28 13:45:48 | General

கடந்தவாரம் ஜேர்மனி நான்கிற்கும் மேற்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொண்டிருந்தது. பிரான்ஸில் நேற்று முன்தினம் பாதிரியார் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  

வளர்ச்சியடைந்த நாடுகளில் அமைதியாக வாழும் சமூகங்கள் மத்தியில் பயங்கரமான படுகொலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அண்மைக் காலமாக இச் சம்பவங்கள் கிரமமாக இடம்பெற்றுவருவதையும் அதிகரித்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

பாரிஸ், பிரசெல்ஸ், இஸ்தான்புல், ஒர்லான்டோ, நீஸ் என்று பட்டியல் நீண்டு கொண்டிருக்கிறது. சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இரத்த ஆறு ஓடிக் கொண்டிருப்பதற்கு அப்பால் வளர்ந்த நாடுகளில் பயங்கரமான தாக்குதல்களும் படுகொலைகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

ஜேர்மனியில் கடந்த ஜூலை 18 இல் வேர்ஸ்பேர்க்கில் ரயில் பயணிகளை ஆப்கானிஸ்தான் அகதியொருவர் கோடரி, கத்தியால் தாக்கியுள்ளார். 5 பேரை காயப்படுத்திய அவர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். 


ஜூலை 22 இல் ஈரானிய புகலிடம் கோரும் பெற்றோருக்கு ஜேர்மனியில் பிறந்த மற்றொரு வாலிபர் அங்காடியொன்றில் 9 பேரை சுட்டுக்கொன்றிருந்தார். பின்னர் அவர் தன்னைத் தானே சுட்டு  இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஜூலை  24 இல் 21  வயதுடைய சிரிய அகதியொருவர் போலந்துப் பெண் ஒருவரை மோசமாக தாக்கியிருந்தார்.

ரீலிங்கன் பகுதியில்  இடம்பெற்ற இச் சம்பவத்தில்  மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். அவர் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே தினத்தில் அன்ஸ்பாக் நகரில் 27 வயதுடைய சிரிய அகதியொருவரின் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து மதுபான சாலைக்கு வெளிப்புறத்தில் அவர் தன்னையே வெடிக்க வைத்திருந்தார். இதில்  15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்திருக்கும் ஜேர்மனி போன்ற நாடுகளில் இந்த மாதிரியான தாக்குதல்கள் மேலெழுந்து கொண்டிருக்கின்றன. குடியேற்ற வாசிகளே இவற்றில் சம்பந்தப்பட்டிருப்பதாக தென்படுகிறது. ஜேர்மனியில் இடம்பெற்றிருக்கும் தாக்குதல் சம்பவங்கள் நான்கில் மூன்று தாக்குதல்களை நடத்தியவர்கள் புகலிடம் கோரியவர்களாவர். 


ஆனால், இந்தத் தாக்குதல் சம்பவங்களில் இரண்டை மத ரீதியான பயங்கரவாதமென ஜேர்மனியின் பொலிஸார் முத்திரை குத்தவில்லை. மன நலம் பாதிக்கப்பட்ட அல்லது ஆத்திரத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களாகவே இவை கருதப்படுகின்றன.

ஏனைய இரு தாக்குதல்களும் ஜிஹாத்துடன் தொடர்புபட்டவையென கூறப்படுகின்றது. வூர்ஸ்பேர்க் தாக்குதலுக்கு ஐ.எஸ். உரிமை கோரியிருந்தது. சிரியா, ஈராக் போன்ற நாடுகளிலிருந்து பெருந்தொகையான அகதிகள் வருகை பிரச்சினையை கையாள்வது தொடர்பாக ஜேர்மனி உட்பட ஐரோப்பிய நாடுகள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

அகதிகளை அதிகளவுக்கு உள்ளீர்த்துக் கொள்ளும் ஜேர்மனியின் சான்சிலர் அஞ்சலா மேர்கலின் கொள்கையை அந்நாட்டின் தீவிர வலதுசாரி கட்சிகள் சாடி வருகின்றன. ஏனைய ஐரோப்பிய நாடுகளும் சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு  எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த நெருக்கடியுடன் இப்போது ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகளின் கொடூரத் தாக்குதல்கள் இந் நாடுகளில் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. 


உலக நாடுகள் பலவற்றிலும் இந்தப் பயங்கரவாத அமைப்புகள் ஊடுருவிவருவதுடன் ஆட்சேர்ப்பும் செய்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அப்பாவி உயிர்களை பலியெடுக்கும் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்துவோருக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டிய தேவை முன்னொரு போதுமில்லாத அளவுக்கு மேலெழுந்திருப்பதாக தோன்றுகிறது.

வெறுமனே இதற்கு எதிராக ஒன்றுபடுமாறு அழைப்பு விடுவதிலும் பார்க்க இந்தத் தாக்குதல்கள் எங்கும் எப்போதும் இடம்பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதால் தேசிய மட்டத்தில் அரசாங்கங்கள் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் சர்வதேச ரீதியாக இதனை கட்டுப்படுத்துவதற்கும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் விரைந்து செயற்பட வேண்டும்.

இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் பாதிப்புகளிலும் பார்க்க மோசமான அச்சுறுத்தலை உலக நாடுகள் எதிர்நோக்கும் நிலையில் மனித குலத்தை கருவறுக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக உலகம் ஒன்றுபடும் வேளை வந்துவிட்டதாகத் தோன்றுகிறது.

TOTAL VIEWS : 1992
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
9jpre
  PLEASE ENTER CAPTA VALUE.