பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறைகள்
2017-07-25 11:16:20 | General

பெண்கள், சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் கடந்த காலத்தை விட ஆக்கபூர்வமான வகையில் முன்னெடுக்கப்படுவதாக வெளிப்பார்வைக்கு தென்படுகின்ற போதிலும் வீட்டுவன்முறைகள் உட்பட பெண்கள், சிறார்களுக்கு எதிரான வன்செயல்கள் கொடூரமான முறையில் அதிகரித்திருப்பதை  தேசிய முகவரமைப்புகளின் புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றன.

கடந்த வருடம் சிறுவர்களுக்கு எதிரான 9 ஆயிரம் வன்முறைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் உட்பட பிள்ளைகள் மீதான துஷ்பிரயோகம் நாட்டில் அதிகரித்திருப்பது குறித்து ஐரோப்பிய பாராளுமன்றமும் சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மையில் திருகோணமலை மாவட்டத்தின் மூதூரில் பாடசாலை செல்லும் 3 சிறுமிகள் கடத்தப்பட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட துன்பியல் சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது. இந்தப் படுபாதக செயலில் குழுவொன்று ஈடுபட்டதாகவும் சம்பவத்தை மூடி மறைக்க சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய அதிகாரிகள் முயற்சிப்பதாகவும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.


இலங்கையில் 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் வல்லுறவில் ஈடுபடுத்தப்படும் அவலம் காணப்படுகின்றதென அண்மையில் அரசியல்வாதியொருவர் தெரிவித்திருந்தார். கணவன்மார் ஆண் பாதுகாவலர்களால் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருப்பது மாத்திரமன்றி வீட்டுக்கு வெளியே  அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள், பொலிஸ், இராணுவம் போன்ற அரச முகவரமைப்புகளினதும் தாக்குதல்களுக்கு பெண்கள் இலக்காவதாக மகளிர் விவகாரங்களை கையாளும் தன்னார்வ தொண்டர் அமைப்புகளைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

அதேவேளை வன்முறைகளில் ஈடுபடுவோர் சுதந்திரமாக நடமாடுவதாகவும்  அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பால் நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகளைத் தடுத்தல், பாலியல் மற்றும் குடும்ப நல மருத்துவம் போன்ற செயற்பாடுகளில் பணியாற்றும் மகளிருக்கான செயற்பாட்டாளர் சாந்தி ஜினதாச என்பவர், பாதிக்கப்படும் பெண்கள் முறைப்பாடுகளை தெரிவித்தால் பொலிஸார் அவை தொடர்பாக கவனத்திற்கு எடுக்காமல் பெண்களுக்கு எதிராகவே செயற்பட ஆரம்பிப்பதாகவும் அதனால் பெண்களே பாதிக்கப்படும் நிலைமை ஏற்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.


அதேவேளை "ஆண் பிள்ளையென்றால் ஆண் பிள்ளையென்ற மனப்பாங்கிலேயே இருப்பான்' என்ற வக்கிரமான எண்ணத்தை ஆண்கள் மட்டுமன்றி பெண்களில் கணிசமானவர்களும் கொண்டிருப்பதும் ஆண்பிள்ளைகள் குற்றமிழைப்பதற்கு தூண்டுதலாக அமைகின்றதென செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுவதுடன் பெண்களுக்கு மதிப்பளிக்க வேண்டுமென ஆண்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியிருப்பதாகவும் அவர்கள் கூறுவதை காண முடிகிறது.

வீடுகளில், வேலைத்தலங்களில் பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவது தொடர்பாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின்றன. வீடுகளில் பெண் பிள்ளைகளிலும் பார்க்க ஆண் பிள்ளைகளுக்கு முன்னுரிமையும் முக்கியத்தவமும் கொடுக்கும் மனப்பான்மை கடந்த காலத்தில் நிலவி வந்த போதிலும் இப்போது அந்தத் தன்மை வெகுவாக குறைந்து விட்டதென கூற முடியும். ஆயினும் கிராமப்புறங்களில் கல்வியறிவு தாழ்ந்த மட்டத்திலிருக்கும் குடும்பங்களில் இந்த மனப்பான்மை தற்போதும் தொடர்ந்திருப்பதை அவதானிக்க முடியும்.


உண்மையில் சிறுபிள்ளைப் பராயத்திலிருந்தே ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் சமமானவர்கள் என்ற எண்ணபாட்டை பிள்ளைகளின் மனதில் வளர்த்துக் கொள்ளச் செய்ய வேண்டும். அதேசமயம் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு உட்பட கொடூரமான செயற்பாடுகளுக்கு எதிராக கடுமையான சட்ட  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நீதி நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்பட வேண்டும்.

பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள்  இடம்பெற்றால் பெரும்பாலானவர்கள் அவை தொடர்பாக பொலிஸாரிடம் முறையிட்டு சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க முன்வருவதில்லை. பாதிக்கப்பட்டவர்கள் எந்தவொரு அச்சமுமின்றி பொலிஸாரிடம் முறையிடக்கூடிய சூழலை உறுதிப்படுத்துவது மிக அவசியத் தேவையாகத் தோன்றுகிறது.

பெண்கள், சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பல்வேறு யோசனைகளை முன்வைத்திருப்பதை அவதானிக்க முடிகிறது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் எந்தவொரு அச்சமுமின்றி முறையிடுவதற்காக தனிப் பொலிஸ் அலகொன்றை கொண்டிருப்பது அவசியமென அண்மையில் தேசிய சிறுவர் அதிகார சபையின் தலைவர் மலினி டி ரிவைரா கூறியிருந்தார். அத்துடன் வன்முறைகளை கட்டுப்படுத்தி இல்லாமல் செய்வதற்கு கனதியான கண்காணிப்புப் பொறிமுறையை ஏற்படுத்துவதன் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.


பெண்கள், சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக பலதரப்பட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்ட போதும் அவை நடைமுறைப்படுத்தப்படாமலிருப்பதையே அவதானிக்க முடிகிறது. இதனை மகளிருக்கான செயற்பாட்டாளரான பேராசிரியர் சாவித்திரி குணசேகர சுட்டிக்காட்டியிருக்கிறார். தண்டனை விலக்கீட்டு சிறப்புரிமையுடன் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.  

சட்ட அமுலாக்கல் குறைவாகவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் எவருமே இது தொடர்பாக கவனத்திற்கு எடுக்கவில்லை என்று அவர் கவலை தெரிவித்திருந்தார். மேற்கு நாடுகள் பலவற்றில் நள்ளிரவில் கூட பெண்கள் தனியாக நடமாடக்கூடிய சூழ்நிலை காணப்படுகிறது. ஆனால் இலங்கை, இந்தியா போன்ற கீழைத்தேசங்களில் பெண்கள், சிறுவர்களுக்கு போதிய பாதுகாப்பற்ற சூழ்நிலை தொடர்ந்து நீடித்துச் செல்கிறது.

ஆண்களும் பெண்களும் சமமானவர்கள், சமவுரிமையை கொண்டவர்களென வார்த்தையிலும் ஏட்டிலும் கூறினால் மட்டும் போதாது. அதனை நடைமுறைப்படுத்துவதிலேயே பெண்களுக்கான பாதுகாப்பு அதிகளவுக்கு உறுதிப்படுத்தப்படும். 

TOTAL VIEWS : 1252
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
n2ycx
  PLEASE ENTER CAPTA VALUE.