கல்வியின் இலக்கு
2017-03-27 11:29:36 | General

மாணவர்கள் மத்தியில் பரீட்சை என்றால் பதற்றமும் பதகளிப்பும் பரபரப்பும் ஏற்படுவது இப்போது அதிகரித்திருப்பதாக தென்படுகிறது. அவர்களை விட பெற்றோர் மத்தியில்  இந்தத் தன்மை அதிகளவுக்கு காணப்படுகிறது.

5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பதகளிப்பு பொதுவாக காணப்படுகின்ற அதேவேளை முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை பிரபல்யமான பாடசாலைகளில் சேர்க்க வேண்டுமென முயற்சிக்கும் பெற்றோரிடம் குறிப்பாக நகரப்புற வாசிகளிடம் பதற்றமும் பதகளிப்பும் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது. இதனால் குழந்தைப் பருவத்திலேயே பிரத்தியேக வகுப்புகளுக்கு மழலைச் செல்வங்களைக்கூட சில பெற்றோர் அனுப்புவதையும் காண முடிகிறது. 


சிறு பராயத்திலிருந்தே தமது பிள்ளைகளுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கின்றோமே என்ற "பிரக்ஞை'யும் அருகிக் காணப்படுகிறது.  அதிலும் பாடசாலை அனுமதிக்கான பரீட்சை, புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரண தர, உயர்தரப் பரீட்சைகள் இடம்பெறும் காலங்களில் அதிகளவான பெற்றோர்கள் தாங்களே பரீட்சைக்குத் தோற்றுவது போன்ற பதகளிப்புடன் காணப்படுவதையும் அவதானிக்க முடியும்.  


மாணவர்களில் சிலர் பாடசாலை மட்டத்தில் முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும் எனவும் வேறு சிலர் மாவட்ட மட்டத்தில் அல்லது மாகாண மட்டத்தில் அல்லது தேசிய ரீதியில் முதலிடங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆவலுடன் இருப்பார்கள். அதேவேளை சிலருக்கு பரீட்சை திகிலூட்டும் விடயமாகவும் அமைந்திருக்கும்.

அதிலும் இலங்கையைப் பொறுத்தவரை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மத்தியிலும் அவர்களின் பெற்றோரிடமும் பதகளிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. அதிகளவு வெட்டுப்புள்ளிகளைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகி விடவேண்டுமென்ற பதகளிப்பே பெரும்பாலான உயர்தர மாணவர்களிடத்தில் காணப்படுகிறது.  

இந்தப் பதகளிப்பு பொறியியல் துறை, மருத்துவம் போன்றவற்றில் உயர்கல்வியை கற்க விரும்பும் மாணவர்களிடத்து கூடுதலாக காணப்படுகிறது. இங்கு உண்மையில் மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரத்தில் இணைந்து கொள்ளும் போது தங்களுக்கு விருப்பமான துறைகளைச் சேர்ந்த பாடங்களைத் தெரிவு செய்து கற்க வேண்டும்.

ஆனால் அதிகளவுக்கு இந்த விடயத்தில் பெற்றோரே மாணவர்களிடமிருந்து இதற்கான "சிறப்புரிமையை' எடுத்துக் கொள்கின்றனர். 
இந்த விடயத்தில் மாணவர்களின் “தெரிவே‘ முக்கியமானதாகும்.  தமது எதிர்காலத் தொழில்வாய்ப்புக்கள்  அல்லது மேற்படிப்புக்கு தேவையான தகைமையை பெற்றுக்கொள்ளுதல் என்பது உயர்தரத்தில் கற்கும் மாணவர்களின் இலக்காக அமையுமானால் அவர்கள் சிறப்பான பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

அதேவேளை தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் கல்வித் துறையை மாணவர்கள் தேர்ந்தெடுப்பதும் முக்கியம். இதன் மூலமே எதிர்கால வாழ்வாதாரத்தை அவர்கள் பெற்றுக்கொள்ள இயலும். இந்த விடயத்தில் பெற்றோர் தமது பிள்ளைகள் எந்தத் துறையைத் தெரிவு செய்தால் எதிர்காலத்தில் நல்லதென்ற வழிகாட்டலை வழங்க முடியும். விஞ்ஞான, தொழில்நுட்பத்துறை தற்போது அபார வளர்ச்சி கண்டுள்ள நிலையில், தமது பிள்ளைகளுக்கு பொருத்தமான, அவர்களுக்கு ஆர்வமுள்ள துறைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு பெற்றோர் உதவ முடியும்.

சில தருணங்களில் மாணவர்கள் இந்த விடயத்தில் அதிகளவு அழுத்தத்துக்கு இலக்காகின்றனர். சமூகத்தில் அதிகளவுக்கு மதிக்கப்படும் துறைகளான பொறியியல் அல்லது மருத்துவத்தை தமது பிள்ளைகள் தெரிவு செய்ய வேண்டும் என்ற எண்ணப்பாடும் பெற்றோர்கள் மத்தியில் பொதுவாக காணப்படுகிறது. இத்தகையதொரு சூழ்நிலையில் ஆசிரியர்கள் மாணவர்களின் ஆற்றலை சரியாக அடையாளம் கண்டிராவிடில், அவர்களை உற்சாகப்படுத்தா விடில் அல்லது ஆலோசனை வழங்காவிடில் மாணவர்கள் தமது நண்பர்கள் எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அதே துறையை தாங்களும் தெரிவு செய்யும் நிலைமையும் ஏற்படுகிறது.

இந்நிலையில் உயர்தரத்தில் பிரவேசிக்கும் மாணவர்கள் தாங்கள் எந்தத் துறையை தெரிவு செய்ய வேண்டுமென்பது தொடர்பாக பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து செயற்பட வேண்டும். எமது நாட்டைப் பொறுத்தவரை கல்வியானது அடிப்படை உரிமை என அரசியலமைப்பு உத்தரவாதம் வழங்கியுள்ளது. இலங்கை மக்களில் 92.63 சதவீதமானவர்கள் எழுத்தறிவுடையவர்களாவர். தற்போது கல்வித்துறை மத்திய, மாகாண நிர்வாகங்களின்  கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

இலவசக் கல்வியானது சகலருக்கும் சிறந்த வாய்ப்பை பெற்றுத் தந்திருக்கிறது. தற்போது 10,012 அரசாங்க பாடசாலைகளும் கணிசமான தொகையில் சர்வதேச பாடசாலைகளும் உள்ளன. அரச பாடசாலைகளில் 40 37157 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர்.

இவர்களுக்கு எதிர்காலத்தை நற்பிரஜைகளாக விளங்குவதற்கு உதவியாக அமையும் அதேவேளை அதற்கு சமாந்தரமாக தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கு வழிசமைத்துக் கொடுக்கும் கல்வி முறைமையே அவசியம்.

TOTAL VIEWS : 1804
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
w4lcj
  PLEASE ENTER CAPTA VALUE.