தொழில்நுட்ப வளர்ச்சியும் வேலைவாய்ப்பும்
2017-08-10 10:10:48 | General

விஞ்ஞான, தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியால் எவ்வளவு தொகையினர் தற்போது தமது தொழில் வாய்ப்புகளை இழக்கின்றனர் என்பது பற்றியும் எதிர்காலத்தில் எத்தகைய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பது குறித்தும் பெரும்பாலும் நாம் சிந்திப்பதில்லை.

உற்பத்தித் துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம், வளர்ச்சி தொடர்பாக வர்த்தகத் துறை சார்ந்தோர் அதிகளவுக்கு வரவேற்பை வெளியிட்டு வருகின்றனர். அதேசமயம் தொழில் வாய்ப்புகள் மறுபுறத்தில் குறைந்து செல்வது தொடர்பாக அதிகளவுக்கு கவனம் செலுத்தாத போக்கே காணப்படுகிறது.  

தொழில்நுட்ப அறிவு மேம்பாடு கண்டு வருகின்றதெனினும் செல்வத்தை திரட்டிக் கொள்வதில் காண்பிக்கப்படும் கூடுதல் அக்கறை தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதில் வெளிப்படுத்தப்படுவதில்லை என்றே கூற முடியும். உலகமயமாக்கத்தின் விளைவாக அதிகரித்திருக்கும் நிறைபோட்டி, தனியுரிமை சிந்தனைகள் இதற்கு அடிப்படைக் காரணங்கள் என்பதை மறுக்க முடியாது.


எமது நாட்டைப் பொறுத்தவரை வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரித்துக் கொள்வதன் மூலம் தொழில்வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ளவும் அதேசமயம் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இயலுமென அரசாங்கம் கூறி வருவதுடன், தனியார் துறையின் பங்களிப்புக்கும் ஊக்குவிப்பு அளித்து வருகிறது.

ஆனால், தற்போது இடம்பெற்று வரும் வெளிநாட்டு நிதி உதவியுடனான பாரிய திட்டங்களில் உள்நாட்டவர்கள் ஈடுபடுத்தப்படுவதாக தென்படவில்லை. அதிலும் குறிப்பாக கட்டிட நிர்மாணத் தொழில் துறையில் வெளிநாட்டவர்களே ஈடுபட்டிருப்பதை காண முடிகிறது. உள்நாட்டவர்கள் மத்திய கிழக்கு நாடுகள் உட்பட வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்புத் தேடி செல்லும் நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும் நிலையில், இங்கு உருவாக்கப்படும் தொழில்வாய்ப்புகள் வெளிநாட்டவர்களுக்கு கிடைப்பதற்கு வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 


பூமியிலுள்ள மக்கள் தொகையின் அரைவாசித் தொகையினர் வைத்திருக்கும் செல்வத்திற்கு சம அளவான செல்வத்தை உலகின் 8 செல்வந்தர்கள் வைத்திருப்பதாக டாவோஸில் இடம்பெற்ற உலக பொருளாதார மாநாட்டில் ஒக்ஸ்பாம் அமைப்பு அறிக்கை சமர்ப்பித்திருந்தது. இந்த சமத்துவமின்மைக்கான இடைவெளி விரிவடைந்து செல்வதே தொழில்வாய்ப்பின்மை அதிகரிப்பது குறித்து துரிதமான தீர்வுகளை கண்டுகொள்வதற்கான சாத்தியப்பாட்டை இல்லாமல் செய்துவிடுகிறது.

வேலைவாய்ப்பை அதிகரித்துக் கொள்வது இப்போது இலங்கை போன்ற வளர்ந்துவரும் நாடுகளுக்கு மட்டுமன்றி வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் பாரிய சவாலாக உருவெடுத்திருப்பதாக தென்படுகிறது.கடந்த காலத்தில் அதிகளவு தொழிலாளர்கள் குறிப்பிட்டதொரு தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வந்த நிலையில் இப்போது தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்துவது அதிகளவுக்கு உள்வாங்கப்படுவதால் தொழில்வாய்ப்பை பலர் இழந்து விடும் நெருக்கடி காணப்படுகிறது.

எந்தவொரு நாடோ அல்லது எந்தவொரு தொழில் துறையோ இதனை எவ்வாறு மாற்றியமைத்து பாதுகாத்துக் கொள்வதென்பதிலிருந்தும் விதிவிலக்கைக் கொண்டிராத தன்மையே காணப்படுகிறது. முக்கியமாக பொதுமக்கள் குறித்து அவர்களின் நலன்கள் தொடர்பாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதில்லையென்று இதனைக் கூற முடியும். வரிவிலக்களித்தல், இறக்குமதிகளை கட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளப் போவதாக அரசியல் அதிகாரம் கொண்டவர்கள் அவ்வப்போது உறுதியளித்து வருகின்றனர்.

ஆயினும் ஊதியம் தொடர்பான ஏற்றத் தாழ்வுகள், காலாவதியானதும் சமத்துவமற்றதுமான வரிக் கட்டமைப்புகள் சமத்துவமின்மை அதிகரித்துச் செல்வதற்கு பங்களிப்பை செலுத்துவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
தொழில்நுட்பப் புரட்சியினாலும் அறிவியல் ரீதியான நவீன கண்டுபிடிப்புகளாலும் மனிதர்கள் செய்யும் வேலைகளை இப்போது இயந்திரங்களே அதிகளவுக்கு செய்கின்றன. வளர்ச்சியடைந்த மேலைத்தேசங்களில் சாரதியில்லாத வாகனங்களை போக்குவரத்தில் ஈடுபடுத்துவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது.

ஆடைத் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்துவதிலும் பார்க்க இயந்திரங்களைப் பயன்படுத்துவதும் அதிகரித்திருக்கிறது. சனத்தொகை கூடிய ஆசிய நாடுகளில் வேலைவாய்ப்பின்மை இளைஞர், யுவதிகள் மத்தியில் அதிகரித்து வருவதற்கு இதுவுமொரு காரணமாகும். ஆனால் கைத்தொழில் புரட்சி ஏற்பட்ட காலம் முதல் இந்த அச்சம் மேலெழுந்திருந்த போதிலும் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை தொழில் வாய்ப்பு தொடர்பாக ஏற்படுத்தியிருக்கவில்லை.

ஆயினும் தற்போது நவீன தொழில்நுட்ப மாற்றங்கள் தொழிலாளர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை மறுத்துவிட முடியாது. தொழிலாளர்களுக்கான ஊதியம் உட்பட  உற்பத்தி செலவு அதிகரித்து வரும் நிலையில் தொழில் வழங்குநர்கள் தொழிலாளர்களுக்கு பதிலாக ரோபோக்களை பயன்படுத்துவது அபிவிருத்தியடைந்த நாடுகளில் பரவலாக அதிகரித்திருக்கின்றது.

அதேசமயம் கைப்பேசிகளின் பாவனை அதிகரிப்பு, இணைய மூடாக பொருட்களை கொள்வனவு செய்தல் என்பன சில்லறை வர்த்தகத்துடன் தொடர்புபட்ட தொழில் வாய்ப்புகளை பாதிக்கச் செய்கின்றன. உலகளாவிய ரீதியில் தொழில்நுட்ப ரீதியான மாற்றமானது வருடாந்தம் 50 இலட்சம் முதல்1 கோடி வரையிலான தொழில் வாய்ப்புகளுக்கு "வேட்டு' வைப்பதாக கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

நவீன தொழில்நுட்ப முன்னேற்றம் மனித குலத்திற்கு ஒருபுறம் பேருதவியாகவும் மறுபுறம் ஜீவனோபாயத்துக்கு பாதிப்பாகவும் அமைவதை காண முடிகிறது. எவ்வாறெனினும் மனித இருப்புக்கு, ஜீவிதத்துக்கு பாதிப்பற்ற வகையில்  தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தவதே தேவையானதும் அவசியமானதுமாகும். 

TOTAL VIEWS : 2019
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
voi8j
  PLEASE ENTER CAPTA VALUE.