மனிதத்துவ நெருக்கடி
2017-10-06 10:12:59 | General

எமது அன்றாட தேவைகளுக்கு கடைகளில் பணத்தைக் கொடுத்து உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்வதைப் போன்று அமெரிக்காவில் மிக இலகுவாக துப்பாக்கிகளை கொள்வனவு செய்யக்கூடியதாக இருப்பதே வன்முறைக் கலாசாரம்  அங்கு உக்கிரமடைந்து வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக நீண்டகாலமாக கடும் விமர்சனங்கள் மேலெழுந்து கொண்டிருக்கின்றன.

அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப் பத்திரத்தைக் காண்பித்துவிட்டு மிக நவீனரக ஆயுதத்தை அங்கு கொள்வனவு செய்ய முடியுமென கூறப்படுகிறது. எந்தவொரு அமெரிக்கப் பிரஜைக்கும் இது சிரமமான காரியமல்ல. விளையாட்டு மற்றும் யுத்த ஆயுதங்களுக்கு உலகிலேயே மிகப் பாரிய களஞ்சியமாக அமெரிக்கா திகழ்கிறது.

கடந்த திங்கட்கிழமை (அக்டோபர் 2 இல்) லாஸ்வேகாஸில் இடம்பெற்ற பயங்கரமான சூட்டுச் சம்பவத்தில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டதுடன், 500 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இதனால் பல இலட்சக் கணக்கான அமெரிக்கர்கள் துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இசை விழாவில் இந்தக் கொடூரமான சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. அந்நாட்டில் 1735 நாட்களில் 1516 பொதுமக்கள் சுடப்பட்டு இறந்துள்ளனர். 


அமெரிக்காவைப் போன்று வேறு எந்தவொரு வளர்ச்சியடைந்த நாட்டிலும் இதனைப் போன்ற பாரிய சம்பவங்கள் இடம்பெற்றிருக்கவில்லை. அமெரிக்காவே அதிகளவில் பாதிக்கப்பட்டோருக்கு  புகலிடம் வழங்கும் நாடாகவும் இருந்து வருகிறது. 265 மில்லியன்  துப்பாக்கிகள் அமெரிக்காவில் இருப்பதாக கணிப்பிடப்பட்டிருக்கிறது.

தொடர்ச்சியாக பெருந்தொகையில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதையடுத்து இதனைத் தொடர விடாது தடுத்து நிறுத்துவதற்காக எதனையாவது செய்ய வேண்டுமென்ற சிந்தனை அதிக எண்ணிக்கையானோர் மத்தியில் வலுவடைந்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

துப்பாக்கிக் கலாசாரத்தால் வருடாந்தம் சுமார்  1 இலட்சம் பேர் காயமடைந்தும் இறந்தும் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.  இந்த வருடம் மட்டும் அமெரிக்காவில் 346 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அக்டோபர் 2 வரை 60 பேர் பலியாகியுள்ளனர். துவக்குகளை விநியோகிப்பதிலும் பொதுமக்களை கொல்வதிலும் இரு சக்திகள் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 


தேசிய ரைபிள் சங்கம் மிகவும் சக்திவாய்ந்ததும் நிதிவசதி படைத்ததுமான குழுவாகும். இதற்கு செனட்டர்கள் அல்லது அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் நிதி வழங்குகின்றனர். மற்றைய தரப்பினர் துப்பாக்கிகளை விற்பனை செய்வோராவர். விசேடமாக நவீன இராணுவத் தானியங்கி ரைபிள்கள், இயந்திரத் துப்பாக்கிகள் ஆகிய  துவக்குகள் மீது கட்டுப்பாடுகளை கொண்டிருப்பதற்கு இவர்கள் ஆதரவளிக்கின்றனர்.

கடந்த காலத்தில் துப்பாக்கி விற்பனையை கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டின் தலைவர்களாக விளங்கிய ஜனாதிபதிகள் விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்த  போதும் துப்பாக்கி பாவனையை வயது வந்த சகலரும்  கொண்டிருப்பதை ஆதரிக்கும் தரப்பினருக்கான ஆதரவு மேலோங்கி காணப்படுவதாக தென்படுகிறது.

இந்த வன்முறைகளில் ஈடுபடுவோர் சிறிய தொகையினரே எனவும் அவர்களுக்கு துவக்குகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்துத் துப்பாக்கிகளை கையாள்வதற்கான பொறுப்புணர்வை கொண்டிருப்பது குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது போதுமானதென்ற வாதத்தை முன்வைத்து வருவதையும் அவதானிக்க முடிகிறது.  


தற்பாதுகாப்புக்கும் குடும்பத்தின் பாதுகாப்புக்கும் துப்பாக்கிகளை சொந்தமாக வைத்திருப்பதற்கான உரிமையும் அரசியலமைப்பு ரீதியாக (இரண்டாவது திருத்தம்) அமெரிக்க மக்கள் கொண்டிருக்கின்றனர். அத்துடன் துவக்கை கொள்வனவு செய்வதை கட்டுப்படுத்தும் அல்லது தடை செய்யும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும் போது அதற்கு எதிர்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.

துப்பாக்கியால் கொல்லப்படுவதும் தற்கொலை மரணமும் ஆயிரக்கணக்கில் வருடாந்தம் இடம்பெற்று வரும் நிலையில், அதனை சட்டரீதியாக தடை செய்வதை எதிர்ப்பவர்கள் கூறக்கூடிய காரணம் "உயிரை' விடப் பெறுமதியானதாக இருக்க முடியாது. சட்டம், ஒழுங்கை அமுல்படுத்தும் தரப்பினர் முறையாக செயற்படும் போது துப்பாக்கி கலாசாரத்தை இல்லாதொழிக்க முடியும்.

அத்துடன், துவக்கு போன்ற ஆயுதங்களை விற்பனை செய்யும் விவகாரத்தில் தீவிர கண்காணிப்பு அவசியமென்ற தீர்மானத்திற்கு அமெரிக்க நிர்வாகம் வரவேண்டிய தேவைப்பாட்டையே தொடர்ந்து இடம்பெற்றுவரும் உயிரிழப்புகள் உணர்த்தி நிற்கின்றன. 

TOTAL VIEWS : 1369
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
2ezrg
  PLEASE ENTER CAPTA VALUE.