மீண்டும் மேலெழுந்திருக்கும் அனைத்துக் கட்சி மாநாட்டு யோசனை
2017-11-02 10:14:40 | General

உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பாக தவறான எண்ணப்பாட்டைத் தோற்றுவிக்கும் பிழையான தகவல்களைத் தடுத்து நிறுத்துவதற்காக அரசியலமைப்பு மறுசீரமைப்பு  நடவடிக்கைகள் தொடர்பாக அரசாங்கம் மூன்று முக்கியமான நடவடிக்கைகளை எடுக்குமென ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார்.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின்  பங்கேற்புடன் அனைத்துக்கட்சி மாநாடு,  சர்வமதத் தலைவர்களை உள்ளடக்கிய மற்றொரு மாநாடு, கல்விமான்கள், புத்திஜீவிகளை உள்ளடக்கிய மாநாடு என்பனவற்றின் மூலம் புதிய அரசியலமைப்பு தொடர்பாக கலந்தாராய்ந்து தேவையற்ற சரத்துகளை அகற்றிவிடவும்  அதேசமயம்  தேவை ஏற்படின் புதிய சரத்துகளை உள்ளீர்த்துக் கொள்ளவும் முடியுமென ஜனாதிபதி அறிவித்திருப்பதை அவதானிக்க முடிகிறது. 

நல்லிணக்கம் தொடர்பான தேசிய மாநாட்டின் போது ஜனாதிபதி  வெளியிட்டிருக்கும்  இந்த அறிவிப்பு தற்போதைய தருணத்தில் மிகவும் அவசியமானதொன்றாக தோன்றுகிறது. 


உத்தேச  அரசியலமைப்பில் பௌத்தத்துக்கு  பேராபத்து வந்திருக்கின்ற தொனியில்  பரப்புரைகள் பரவலாக இடம்பெறுவதையும் இதன் மூலம் அரசியல்  ஆதாயத்தை பெற்றுக் கொள்ள முனைப்புக் கொண்டிருப்பதையும்  காணமுடிகிறது.

உண்மையில் குறிப்பிட்டதொரு மதத்துக்கு அதி முன்னுரிமையான  இடத்தை  அரசியலமைப்பொன்று வழங்கியிருக்குமானால்  நாட்டிலுள்ள சகல  மக்களையும் சமமாக நடத்துவதாக அந்த அரசியலமைப்பு  இருக்க முடியாதென கடந்த திங்கட்கிழமை புதிய அரசியலமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கை குறித்து பாராளுமன்றத்தில்  ஆரம்பமான விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  சுட்டிக்காட்டியிருந்ததுடன், தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில்  உள்ள ஏற்பாட்டைப் போன்று புதிய அரசியலமைப்பிலும் பௌத்தத்திற்கு குறிப்பிட்ட அந்தஸ்து  வழங்கப்பட வேண்டுமென பௌத்த மக்கள் விரும்பினால் அதற்கு தாங்கள் முட்டுக்கட்டை போடப் போவதில்லையென தெளிவுபடுத்தியிருந்ததுடன் அதேவேளை முக்கியமானதும்  தார்மிக ரீதியில் நியாயமானதாகவும் உள்ள விடயமொன்றையும் அவர் சுட்டிக்காட்டத் தவறியிருக்கவில்லை. 


அதாவது  தங்களின் மதம் முன்னுரிமையான இடத்தை  கொண்டிருப்பது அவசியமென  பௌத்தர் ஒருவர் எவ்வாறு கூற முடியும்? ஏனையவர்கள் வேறு இடங்களை கொண்டிருக்க வேண்டுமென எவ்வாறு தெரிவிக்க முடியும்?  சமத்துவத்தை எப்போதும் நியாயப்படுத்தும் பௌத்தர் ஒருவரால் இதனை எவ்வாறு கூற முடியும்? ஆயினும் நாங்கள் அதனை வழங்க விரும்புகிறோமென கூறியுள்ளோம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

அதேவேளை  பாராளுமன்றத்தில் இந்த விவாதம்  ஆரம்பிப்பதற்கு முதல்நாள் மேற்கிந்திய  மாநிலமான மகாராஷ்டிராவில் இடம்பெற்ற சர்வதேச பௌத்த நிகழ்வொன்றில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ஷ, அரசியலமைப்பில் பௌத்தத்துக்கு அதி முன்னுரிமையான இடத்தை வழங்கும் ஏற்பாட்டை  உத்தேச  புதிய அரசியலமைப்பில் நீக்கிவிட குறிப்பிட்ட சில தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் சமூக கட்டமைப்பை அழித்துவிடுமென்பதால் அந்த ஏற்பாட்டை  அகற்றிவிடவோ அல்லது நீர்த்துப் போகவைக்கவோ முயற்சிப்பதை தான் முழுமையாக எதிர்ப்பதாக அவர் கூறியிருப்பதையும்  காணமுடிகிறது.


அதேசமயம்  கடந்த  செவ்வாய்க்கிழமை ஆங்கிலப் பத்திரிகையொன்றின் விருந்தினர் பத்தியில் சரத் டி  அல்விஸ் என்பவர்  "அரசியலமைப்பு உருவாக்கமும் புலமைசார்  மத வெறியும்' என்ற தலைப்பில் எழுதியிருந்த கூட்டுரையொன்றில்  தப்பான அபிப்பிராயங்கள் பாராபட்சத்துக்கு கொண்டு செல்லுமென  அழுத்தி உரைத்திருப்பதுடன் "சிறுபான்மையினர் வேறுபட்டவர்கள், பெரும்பான்மை மேலாதிக்கத்தை அவர்கள் ஏற்றுக் கொள்வது அவசியம், பெரும்பான்மையினரிலும் பார்க்க அவர்கள் குறைந்தளவு உரிமையினைக் கொண்டவர்கள்“ என்ற கருத்தைக் கொண்டிருந்தால், ஏற்றுக் கொள்ள முடியாத பிறரை நடத்தும் முறை "தேசப்பற்றாக' உருவாகிறதென்று குறிப்பிட்டிருப்பது எண்ணிக்கையில்  பெரும்பான்மையாக இருப்பதனால் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டை கொண்டிருப்போருக்கு குறிப்பாக அரசியல்  இலாபத்துக்காக "இன, மத மேலாதிக்க சிந்தனை' களை முன்னிறுத்துவோருக்கு அவர்களின் எண்ணங்களும் நிலைப்பாடும் தவறானவையென இடித்துரைப்பதாக தென்படுகிறது.


உண்மையில் புரிந்துணர்வுடன் கலந்தாலோசனைகளை நடத்தி கருத்தொருமைப்பாட்டுடன்  இணக்கபூர்வமான தீர்வொன்றை எட்டுவதற்கு சகலரும் முன்வருவது அவசியமாகும். அதுவே தற்போது தேவைப்படுவதாக  ஜனாதிபதி  சிறிசேன  அழைப்பு விடுத்திருக்கிறார். பன்முகத்தன்மையை  புரிந்துணர்வுடன் ஏற்றுக் கொண்டு வேற்றுமையில் ஒற்றுமையை உள்வாங்கிக் கொள்ளும் பக்குவநிலை  ஏற்பட்டால் மாத்திரமே சகலதரப்பும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வொன்றை எட்ட முடியும்.

அதேவேளை புதிய அரசியலமைப்பு முன்னெடுப்பு தொடர்பாக அனைத்துக் கட்சி சர்வ மதத் தலைவர்கள், கல்விமான்கள்  புத்திஜீவிகளுடனான மாநாடுகள் நடத்தப் போவதாக ஜனாதிபதி  சிறிசேன தெரிவித்திருப்பது காலத்தை இழுத்தடிக்கும் செயலென தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. மாவை சேனாதிராசா சந்தேகம் தெரிவித்திருக்கிறார். 

இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பாக கடந்த காலங்களிலும் இத்தகைய  மாநாடுகள் இடம்பெற்றிருந்த போதும்   ஆக்கபூர்வமான பெறுபேறுகள்  எதுவும் எட்டப்படவில்லை அல்லது எட்டுவதற்கான அரசியல்விருப்பம் தலைமைத்துவங்களால் வெளிப்படுத்தப்படவில்லை. அந்த அனுபவங்களை  கவனத்தில் கொண்டதாக மாவை சேனாதிராசா சந்தேகம் தெரிவித்திருக்கக் கூடும். ஆயினும் இந்தத் தடவை அத்தகையதொரு நிலைமை ஏற்படக்கூடாதென்பதே எதிர்பார்ப்பு.

 

TOTAL VIEWS : 956
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
4fxqh
  PLEASE ENTER CAPTA VALUE.