வெப்பநிலை அதிகரிப்பு தெற்காசியாவுக்கு பெரும் பாதிப்பு
2017-08-08 11:14:00 | General

உலக வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்படும் தாக்கத்தை வெப்ப வலய நாடுகளில் வாழும் மக்கள் அதிகளவுக்கு உணரக்கூடியதாகவுள்ளது. அதேவேளை தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் வெப்பநிலை அதிகரிப்பால் மோசமான பாதிப்பை எதிர்கொள்ள நேரிடுமென அண்மைய ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

எமது நாட்டில் யாழ். குடாநாடு உட்பட வட பிராந்தியம் கடுமையான வரட்சியை எதிர்கொள்ளுமென எச்சரிக்கப்பட்டிருக்கிறது. அதன் தாக்கத்தை மக்கள் அதிகளவுக்கு இப்போது உணருகின்றனர். 2100 இல் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உட்பட தெற்காசிய பிராந்திய நாடுகளில் சராசரி வெப்பநிலை 35 சதம பாகையாக அதிகரிக்குமெனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையை பொறுத்தவரை மழை, மண்சரிவு, புயல், கடும் வரட்சியென இயற்கை அனர்த்தங்கள் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. அண்மையில் தென்னிலங்கையில் கடும் மழையால் பெரும் அவலத்தை மக்கள் எதிர்நோக்கியிருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து நிலவிவரும் கடும் வரட்சியான காலநிலை மக்களுக்கு கடும் துன்பத்தைக் கொடுத்திருக்கிறது.


வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வோரும் விவசாயிகளும் வரட்சியால் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். சுத்தமான குடிநீருக்கு யாழ். குடாநாட்டின் தீவுப்பகுதி மற்றும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்நிலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான வரியை நிதியமைச்சு கடந்தவாரம் குறைத்திருக்கின்றமை பொதுமக்களுக்கு சிறிது ஆறுதலளிக்கும் நடவடிக்கையாகும். இந்த நிவாரண நடவடிக்கைகள் அரசாங்கத்தின் வருவாய்க்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், நடப்பாண்டிற்கான பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

வரட்சியால் விவசாய உற்பத்தியில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி நிகர தேசிய உற்பத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். குடும்ப வருமானம் பாதிக்கப்படும். வரட்சியான காலநிலையால் அண்மைக்காலமாக நாடு பெரும் பின்னடைவை எதிர்நோக்கி வருகிறது.

தண்ணீருக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு தொடர்பாக தொடர்ந்து பாதிப்பை எதிர்கொண்டுள்ள போதும் வழமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவே தவிர, இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர அல்லது நீண்டகாலத் தீர்வாக அமையக்கூடிய செயற்பாடுகள் காணப்படவில்லை.


உரிய காலத்தில், ஒருங்கிணைக்கப்பட்டதும் நிலையானதுமான கொள்கைகளை தேசிய மட்டத்தில் உள்ளீர்த்துக் கொள்ளும் நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. காலநிலை தொடர்பாக கண்காணித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கும் முறைமையைக் கொண்டிருத்தல் அவசியமானதொன்றாகும்.

கணிப்பீட்டு நடைமுறைகள் செம்மையாக இருத்தல், நெருக்கடி ஏற்படும் போது முகாமைத்துவத்திற்கான ஏற்பாடுகளை கொண்டிருத்தல், அவசரமாக செயற்படுவதற்கு தயாராகும் திட்டத்தை கொண்டிருத்தல் என்பன வரட்சியினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்கு உதவும். வரட்சியால் கிராமங்களே அதிகளவுக்கு பாதிக்கப்படுகின்றன.

ஏனெனில் காலநிலை மாற்றம், அதன் தாக்கம் பற்றிய அறிவு கிராமப்புறங்களில் குறைவாகவே காணப்படுகிறது. இந்தப் பாதிப்புகளை அரசாங்கம் அதிகளவுக்கு கவனத்தில் கொள்ள வேண்டும். உலக வெப்பநிலை அதிகரித்துச் செல்வது நிரந்தரமானதொன்றாக தோன்றுகிறது.

அதனால் சூழல் பராமரிப்பு, ஆராய்ச்சி, தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் பிணைப்பைக் கொண்ட கொள்கை தயாரிப்பதை நிரந்தரமான தொன்றாக ஏற்படுத்துதல் அவசியமானதாக தோன்றுகிறது.


அதேவேளை சமூகங்கள், தனியார்துறை, ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கிடையில் தொடர்பாடல்களை கிரமமான முறையில் அரசாங்கம் ஏற்படுத்துதல் வேண்டும். உதாரணமாக விவசாயிகளுக்கு பயிர்காப்புறுதி வழங்குவதற்கு உதவ தனியார்துறையினரைப் பயன்படுத்த முடியும்.

வரட்சியானால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளத் தக்க விதத்தில் விவசாயத் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வரட்சியான காலநிலைக்கு தாக்குப்படிக்கக்கூடிய குறைந்த காலத்தில் விளைச்சலைத் தரக்கூடிய பயிரினங்களை செய்கை பண்ணுவதற்கு, தொழில்நுட்ப, விஞ்ஞான அறிவைப் பயன்படுத்த வேண்டும்.

நீண்ட காலமாக வரட்சியால் பாதிக்கப்பட்டு வரும் பிரதேசங்களை அடையாளம் கண்டிருப்பதால் அப்பகுதிகளின் நீர்த்தேவையை பூர்த்தி செய்து கொடுப்பதற்கான கொள்கைகளையும் அரசாங்கம் உள்ளீர்த்துக் கொள்ள வேண்டும்.


நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் கடும் வரட்சியால் நெல் உற்பத்தியில் 50% வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும் அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அத்தியாவசியப் பொருட்களுக்கான தீர்வைக் குறைப்பு, வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நிவாரண உதவி என்பன பொருளாதாரத்திற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமென அரசாங்கம் கூறியுள்ளது.

நாட்டில் 137 பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழும் 3, 41,000 குடும்பங்களைச் சேர்ந்த 11 இலட்சம் பேர் வரட்சியால் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிந்திய அறிக்கைகள் கூறுகின்றன.

25 மாவட்டங்களில் 15 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதுடன் 
2 மாவட்டங்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. இந்நிலையில் வரட்சியால் ஏற்பட்டிருக்கும் துன்பம் குறித்து அரசாங்கம் தீவிர கவனத்தை செலுத்த வேண்டும்.

TOTAL VIEWS : 1773
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
dys5r
  PLEASE ENTER CAPTA VALUE.