முழுமனதுடன் மாற்றத்தை சமூகம் விரும்புகிறதா?
2016-10-26 12:05:58 | General

மறுசீரமைப்பு அல்லது சீர்திருத்தம் தொடர்பாக தொடர்ச்சியாக அதிகளவுக்கு பேசப்படுவதை அவதானிக்கின்றோம். உண்மையில் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையொன்றை எந்தத் துறையில் முன்னெடுப்பதாயினும் அது தொடர்பான முழுமையான சிந்தனை தேவை.

அதாவது எத்தகைய மாற்றத்தை மேற்கொள்ளப்போகிறோமென்ற ஆழமான சிந்தனையும் தெளிவான பார்வையும் அவசியம். அரசியலமைப்புச் சட்ட சீர்திருத்தம், சமூகச் சீர்திருத்தம் போன்ற பொதுநலன் கருதிய சீர்திருத்தங்களுடன் தனிநபர் சார்ந்த சீர்திருத்தம் (இதனை மாற்றம் என்று குறிப்பிடமுடியும்) பற்றி அதிகளவுக்கு ஆராயப்படுகிறது.

இத்தகைய சீர்திருத்தங்கள் பற்றி அதிகளவுக்கு பேசுவோருக்கு அல்லது விரும்புவோருக்கு பரிவிரக்கம், நடுநிலையான பார்வை, பரந்த சிந்தனை தேவைப்படும்.

இத்தகைய உளப்பாங்கை கொண்ட ஒருவராலேயே தனது எதிராளியின் நலன்பற்றியும் சிந்திக்கமுடியும். பிறர் மீதான வெறுப்புணர்விலிருந்தும் ஒருவர் முழுமையாக விடுபட்டிருந்தால் மட்டுமே மறுசீரமைப்பு நடவடிக்கை ஆரம்பமாகும். 


நடைமுறை வாழ்க்கையில் பல்வேறு தீங்கான பழக்கவழக்கங்கள், நெறிமுறையற்ற செயற்பாடுகளுடன் நாங்கள் பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை மறுக்கமுடியாது.

வெவ்வேறான பிளவுபட்ட, அடிக்கடி மாற்றமடையும் மனநிலையுடன் மனிதர்கள் இருக்கின்றார்கள் என்பதையும் நேரத்துக்கு நேரம், காலத்துக்கு காலம், சூழ்நிலைகளுக்கு அமைவாக மனிதர்களின் எண்ணப்பாடும் மாற்றமடைந்து கொண்டிருக்கும் என்பதையும் எம்மால் மறுக்க முடியாது.

ஒருபுறம் நாங்கள் மாற்றத்திற்கான எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கை உணர்வுடன் முன்னொருபோதுமில்லாத விதத்தில் தியாகங்களை அல்லது விட்டுக் கொடுப்புக்களை மேற்கொள்ள முன்வருகின்றோம்.

அதேசமயம் மறுபுறத்தில் உலகியல் வாழ்வின் விருப்பங்களால் வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இதன்மூலம் நடைமுறையில் இதுகால வரை இருந்துவந்த "முறைமையை' வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

இது மிகவும் கவலையானதும் குழப்பத்தைத் தருவதுமான யதார்த்தம். இங்கு உண்மையில் மாற்றம் ஒன்றிற்கான விருப்பத்தை நாங்கள் இதயசுத்தியுடன் கொண்டிருக்கிறோமா? அல்லது நடைமுறையிலிருந்துவரும் "முறைமை'யை தொடர்ந்தும் பலப்படுத்தி வருகிறோமா? என்ற கேள்வி எழுகிறது. 


தற்போதைய நிலைவரத்தைப் பார்த்து விசனமடைகின்ற போதிலும் நாமே ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்தச் சிக்கல்களிலிருந்தும் வெளியே வருவது கடினமான விடயமாகும். விரக்தி, கவலையுணர்வுகள் ஏற்பட்டாலும் அவை "மாற்றத்தை' ஏற்படுத்துவதற்கு போதிய செயற்பாட்டுத்திறன் வாய்ந்த கருவியாக அமையாது. சீர்திருத்தம் தொடர்பாக சுலபமாக போதிக்க முடியும்.

ஆனால் செயற்படுத்துவது கடினமான இலக்காக அமையும். தவறான நெறிப்பிறழ்வான விடயங்களைக் கூட சமூக விழுமியமாக ஏற்றுக் கொள்ளும் தன்மை கொண்ட சமுதாயத்திலேயே நாங்கள் வாழ்ந்து வருவதால், மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகள் அநேகமாக சாத்தியமற்ற இலக்காகவே தோன்றுகின்றது. 


வைபவமொன்றை எடுத்துக்கொண்டால் அழைப்பு விடுக்கப்பட்ட விருந்தினர்கள் உரிய நேரத்திற்கு வரத் தவறி, விருந்தும் உரிய நேரத்தில் பரிமாறத் தவறும் போது காலவிரயம் ஏற்படுகிறது. அத்துடன் காலம் தாழ்த்தி உணவைப் பரிமாறும் போது உணவும் பழுதடைந்து விடுகின்றது. இங்கு நேரமும் பொருளும் விரயமாகின்றது. சிறிய சிறிய ஒழுங்கீனங்கள் மனித வாழ்வை விலங்குகளின் வாழ்க்கையாக மாற்றிவிடுகின்றன.

இங்கு நேரத்தின் பெறுமதி தொடர்பாக உணர்வற்ற தன்மையே காணப்படுகின்றது. தொழிலாளர்கள், அரச ஊழியர்கள், அரசியல்வாதிகள், நீதித்துறை, சட்டம், ஒழுங்கை அமுல்படுத்தும் தரப்பு என்று சமுதாயத்தின் சகல மட்டத்திலும் ஒழுங்கீனங்கள் விரவிக் காணப்படுகின்றன.

குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டதாக சட்டம், ஒழுங்கை அமுல்படுத்தும் தரப்பே இருக்கும் போது "சட்டம்' செயலற்றதாகி விடுகின்றது. மாற்றத்திற்கான முகவர்கள் ஊழல், மோசடி மிகுந்தவர்களாக உருவாகும் போது சகல துறைகளுமே மதிப்பையும் வலுவையும் இழந்துவிடுகின்றன. 


இத்தகைய பின்னணியில் எமது சமுதாயம் உண்மையில் மாற்றத்தை விரும்புகின்றதா என்ற கேள்வி நியாயபூர்வமாக சிந்திப்போர் மனங்களில் நிச்சயமாக மேலெழுமென கூறமுடியும். ஆனால் மாற்றத்திற்கான விருப்பத்தை கொண்டிருக்காவிடின் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான சாத்தியப்பாடு தோன்றாது.தவறான விடயங்கள் நீடித்து நிலைபெறுமானால் "சரியானவை' அவற்றின் பெறுமானத்தை இழந்துவிடும்.

இத்தகைய நிராதரவான நிலைமையிலேயே பெரும்பாலானவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் மாற்றத்திற்கான விருப்பம் மற்றும் அதுபற்றிய பிரக்ஞை பெரும்பாலானவர்கள் மத்தியில் ஏற்படும் போதே அதாவது உண்மையில் "மாற்றத்திற்கான' விழிப்புணர்வு தெளிவாக ஏற்படும்போதே தேவைப்படும் மாற்றத்தை தனிநபரிலிருந்து முழுச் சமூகமுமே உள்ளீர்த்துக் கொள்ளமுடியும் என்பது நம்பிக்கை.

TOTAL VIEWS : 2880
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
wp5rn
  PLEASE ENTER CAPTA VALUE.