எதிர்பார்த்த மாற்றத்திற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை
2017-07-20 10:45:07 | General

2015 ஆகஸ்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் எந்தவொரு கட்சியும் ஆட்சியமைக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தை அமைத்திருந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து ஆட்சியமைக்காமலிருப்பதை தடுத்து நிறுத்துவதற்காகவே இரு பிரதான கட்சிகளும் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் நிலைமை ஏற்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்திருக்கிறார்.

சுதந்திரக் கட்சியும் ஐ.தே.க.வும் கூட்டுச்சேர்ந்து ஆட்சியமைத்திருக்காவிடின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு நிபந்தனைகளை முன்வைத்து தமது தேவைகளை நிறைவேற்றியிருக்குமெனவும் அதனால் நாட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்குமெனவும் அத்தகைய நிலைமையொன்று தோன்றக் கூடாதென்பதற்காக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படக்கூடாதென்ற நிலைப்பாட்டில் தாம் இருப்பதாக அமைச்சர் சமரசிங்க கூறியிருப்பதை அவதானிக்க முடிகிறது.


பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் கருத்தொருமைப்பாட்டுடன் இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் முயற்சியில் இறுதிக்கட்டத்தை அண்மித்து விட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில் வட, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய அரசியல் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆட்சியில் பங்கேற்கச் செய்திருந்தால் பாதிப்பு ஏற்படுமெனவும் அதனால் அதனைத் தடுத்து நிறுத்துவதற்காகவே இரு பிரதான கட்சிகளும் கூட்டணி அரசை அமைத்ததாகவும் அமைச்சர் சமரசிங்க கூறியிருப்பதிலிருந்து தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள், பிரச்சினைகள், அரசியல் அபிலாஷைகள் தொடர்பாக தென்னிலங்கையிலுள்ள சிரேஷ்ட தலைவர்கள் எத்தகையதொரு நிலைப்பாட்டை கொண்டிருப்பார்களென்பதை தெளிவாக ஊகித்துக் கொள்ளமுடியும்.

அதிலும் பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வொன்றை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதாக உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் தமிழ்த் தலைவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துவரும் நிலைமையிலும் ஆட்சியில் தமிழ் மக்களின் பிரநிதித்துவம் பங்கேற்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்ற சிந்தனை தென்னிலங்கையில் தொடர்ந்து காணப்படுவது இனங்கள் மத்தியில் கருத்தொருமைப்பாட்டையும் நல்லுறவையும் கட்டியெழுப்புவதற்கு ஒருபோதும் உதவமாட்டாது. 


தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து அந்நாட்டின் பெரும்பான்மைக் கறுப்பின மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட மறைந்த மாமனிதர் நெல்சன்மண்டேலா, நாட்டின் சிறுபான்மை வெள்ளையர்களை ஓரம்கட்டி ஒதுக்கிவைக்கவில்லை. மாறாக சகல தரப்பையும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கும் ஏற்பாடுகளையே முன்னெடுத்திருந்தார்.

அரச இயந்திரம் தொடர்ந்து எண்ணிக்கையில் பெரும்பான்மையாக உள்ள சமூகத்தின் கரங்களிலேயே இருக்கவேண்டுமென்ற "மேலாதிக்கவாத' சிந்தனைக்குப் பதிலாக சகல தரப்பையும் ஆட்சியதிகாரத்தில் பங்கேற்கச் செய்வதன் மூலம் அதாவது இறைமையை சகல இன, மத சமூகங்களும் பகிர்ந்துகொள்ளும் வகையிலான கொள்கையும் அதனை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடுகளை மேற்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலமே நாடொன்றில் இன, மத ரீதியான அமைதியையும் நல்லுறவையும் தோற்றுவிக்க முடியுமென்பதை மண்டேலா போன்ற தலைவர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர். 


2015 ஜனவரிக்குப் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இலங்கையிலும் இன, மத ரீதியான தேசிய நல்லிணக்கத்தை தோற்றுவிக்குமெனவும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வொன்றைத் தேடித் தருமென்ற நம்பிக்கை சிறிதளவு துளிர்விட்டிருந்த போதும் அந்தத் திசை நோக்கிய பயணத்தில் காணப்படும் மெத்தனப்போக்கு தென்னிலங்கையிலிருந்து இரு பிரதான கட்சிகள் உட்பட அரசியல் கட்சிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள், பிரமுகர்களிடமிருந்து வெளிப்படுத்தப்படும் கருத்துக்களும் நம்பிக்கையை ஏற்படுத்துபவையாக காணப்படவில்லை. தமது பிரச்சினைகளுக்கு நியாயபூர்வமான தீர்வு கிடைக்குமென்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மக்களுக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கு "குளம்வற்றுமென கொக்கு காத்திருந்த கதை' யாகவே தோன்றுகிறது.

 

TOTAL VIEWS : 1031
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
moa2q
  PLEASE ENTER CAPTA VALUE.