நீதிக்கு சவாலாகும் நீதி அமைச்சர்?
2017-07-17 11:49:37 | General

இலங்கையில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது, நீதிமன்றங்கள் சுதந்திரமாக இயங்குகின்றன, ஒவ்வொரு இலங்கை குடிமகனதும் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடத்தப்படும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள், பயங்கரவாத தடைச் சட்டம்  நீக்கப்படும் என  2015 ஆம் ஆண்டு ஆட்சி பீடமேறிய நல்லாட்சி அரசு சர்வதேசத்திற்கு உரத்துக் கூறி வருகின்ற நிலையில்  சிறுபான்மையினத் தவர்கள் மீது நடத்தப்படும் இனவாத ரீதியான தாக்குதல்களை நியாயப்படுத்தல், பௌத்த மதவாதிகள், சிங்கள இனவாதிகளுக்கு ஆதரவளித்தல், மனித உரிமை ஆர்வலர்கள். ஐ.நா.நிபுணர்களுடன் மோதல்கள் என நீதியுடன் தொடர்புபட்ட அத்தனை விடயங்களுடனும்  இலங்கையின் நீதி மற்றும் பௌத்த   சாசனங்கள் அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ முரண்பட்டு வருவதை அண்மைக்காலமாக அவதானிக்க முடிகிறது.


அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கையின் நிலைமைகள் தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்து கலந்துரையாடி தகவல்களை பெற்று இலங்கையின் மனித உரிமை மீறல்கள், நீதிக்கு முரணான செயற்பாடுகள் குறித்து கடுமையான அறிக்கை ஒன்றை ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர்  பென் எமர்சன் விடுத்தமை தொடர்பில் அவருடன்  நீதி மற்றும் பௌத்த   சாசனங்கள் அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ நேரடியாக மோதிக் கொண்டமை  இலங்கைக்கு எந்தவித நன்மைகளையும் தந்துவிடப் போவதில்லை.

மாறாக இலங்கை சர்வதேச மட்டத்தில் சிறிது சிறிதாக கட்டி எழுப்பிவரும் நற்பெயரை தகர்க்கவே இந்த முரண்பாடுகள் வழியேற்படுத்தும். அது மட்டுமன்றி ஜெனீவாவில் இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா என்ற பாரிய சந்தேகத்தையும் உலக நாடுகளுக்கு இலங்கை தொடர்பில் ஏற்படுத்தும். இது இலங்கையை சர்வதேச நாடுகள் மீண்டும் தனிமைப்படுத்தும் நிலையைக்கூட உண்டாக்கலாம்.


இலங்கையில் மோசமான சித்திரவதைகள் இடம்பெறுகின்றன, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது  செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும், போர்க் குற்றச்சாட்டில் இராணுவத்தை விசாரிக்க வேண்டும் என ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் பென் எமர்சன் வலியுறுத்தி அறிக்கை விட்ட நிலையிலேயே நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ அவருடன் தர்க்கப்பட்டதுமட்டுமன்றி இலங்கையில் எந்தவித போர்க்குற்றமும் இடம்பெறவில்லை, யாரும் சித்திரவதை செய்யப்படவில்லை, இராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்ற இடமளிக்கப்படாது,   இராணுவம் முன்னெடுத்தது மனிதாபிமான நடவடிக்கையே. அதில் எந்தவித மனித உரிமை மீறல்களோ போர்க் குற்றங்களோ இடம்பெறவில்லை, பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்படமாட்டார்கள், எம்மை எவராலும் அடிபணிய வைக்க முடியாது என ஆவேசப்பட்டுள்ளார்.


நீதி மற்றும் பௌத்த   சாசனங்கள் அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவிக்கும் கருத்துகள், நடவடிக்கைகள் தொடர்பில் பேரினவாதிகளும் பௌத்த மதவாதிகளும் சந்தோசப்படலாம், திருப்தியடையலாம். ஆனால் இலங்கையின் நற்பெயர் தொடர்பிலும் சிறுபான்மையின மக்களின் நலன்கள் தொடர்பிலும் அக்கறையுள்ள எவரும் நீதி மற்றும் பௌத்த   சாசனங்கள் அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷவின் செயற்பாடுகள்,சர்வதேசத்துடனான மோதல்கள், பொதுபலசேனா போன்ற மதவாதிகளுக்கான ஆதரவுகள், இனவாதிகள்,மதவாதிகளுக்கு வழங்கப்படும் சட்டப் பாதுகாப்புகள் தொடர்பில் திருப்தியடைய முடியாது.

ஏற்கனவே முஸ்லிம் மக்களுக்கு எதிராக பொதுபல சேனாவினர் முன்னெடுத்துவரும் இன, மதவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்ததாகவும் பொலிஸாரால் தேடப்பட்டுவந்த பொதுபலசேனாவின் ஞானசார தேரரை மறைத்து வைத்திருந்ததாகவும் கூட நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோதும் அவற்றை அவர் நிராகரித்திருந்தார்.பௌத்த மதவாதிகளுக்கு ஆதரவான போக்கால் நீதி அமைச்சர் விஜேயதாச மீதான நம்பிக்கையை மட்டுமன்றி நீதித்துறை மீதான நம்பிக்கையையும் முஸ்லிம் மக்கள் இழந்துள்ளதுடன், நல்லாட்சி அரசையும் இனி நம்ப முடியாது என்ற வெறுப்பு நிலைக்கும் அவர்கள் வந்துள்ளனர். 


இவ்வாறான நிலையில் தான் இலங்கையில் எந்தவித போர்க் குற்றமும் இடம்பெறவில்லை, யாரும் சித்திரவதை செய்யப்படவில்லை, இராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்ற இடமளிக்கப்படாது, பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள்,  எம்மை எவராலும் அடிபணிய வைக்க முடியாது என ஆவேசப்பட்டு, தமிழ் மக்களின் இலங்கை நீதித்துறை மீதான நம்பிக்கையையும் நல்லாட்சி அரசு மீதான எதிர்பார்ப்பையும் இல்லாது செய்யும் நிலையை ஏற்படுத்தியுள்ளார்.

இலங்கையின் நீதி மற்றும் பௌத்த   சாசனங்கள் அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ, தான் இலங்கையின் சிறுபான்மையினங்களான தமிழ், முஸ்லிம் மக்களின் நலன்கள் தொடர்பில் அக்கறையில்லாதவன், நாட்டுப்பற்றாளன், சிங்கள தேசாபிமானி எனக் காட்டி சிங்கள கடும் போக்குவாதிகளின் ஆதரவுத் தளத்தை பெற முயல்வதையே அவரின் நீதிக்கு விரோதமான பேச்சுகள், நடவடிக்கைகள் மூலம் காணக்கூடியதாகவுள்ளது. இது முழு நாட்டுக்கும் கேடாகவே முடியும்.

TOTAL VIEWS : 1419
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
e5sbt
  PLEASE ENTER CAPTA VALUE.