வறிய நாடுகளை மோசமாக பாதிக்கும் சீரற்ற காலநிலை
2017-10-31 12:04:59 | General

உலகின் வறிய நாடுகள் பலவற்றில் சீரற்ற காலநிலையால் மரணங்களும் பொருளாதார இழப்புகளும் அதிகரித்துக் கொண்டிருப்பதாகவும் அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கு தயார்படுத்துதல் குறைவாக இருப்பது நிலைமையை மேலும் மோசமாக்குவதாகவும் நெருக்கடி விவகாரங்கள் தொடர்பான நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

கடந்த 35 ஆண்டுகளில் உலகளாவிய ரீதியில் சம்பவித்திருந்த காலநிலையுடன் தொடர்புபட்ட மரணங்களில் 60 சதவீதமானவை வருடாந்தம் 1000 டொலர்களுக்கும் குறைவான வருமானத்தைப் பெறும் மக்கள் மத்தியிலேயே இடம்பெற்றிருப்பதாக ஜேர்மனியின் மீள்காப்புறுதி நிறுவனமான மூனிச் றீயைச் சேர்ந்த மூலோபாய நிபுணர் ஏர்னால்ட் ரோச் என்பவர் தெரிவித்திருக்கிறார்.

வெள்ளம், சூறாவளி, கடும் வரட்சி, காட்டுத் தீ போன்றவற்றால் இந்த மரணங்கள் நேர்ந்துள்ளன. லண்டனில் கடந்த வாரம் இடம்பெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் போது இதனைத் தெரிவித்திருக்கும் ரோச், மோசமான காலநிலையால் நிகர தேசிய உற்பத்தியில் இந்த நாடுகள் பாரிய இழப்புகளை எதிர்நோக்கியிருப்பது குறித்தும் கூறியிருக்கிறார்.


எமது நாடும் வெள்ளம், கடும் வரட்சி, மண்சரிவு, கடும் காற்று போன்ற இயற்கையின் சீற்றத்தினால் அடிக்கடி மோசமான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. இதனால் அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அதேவேளை காலநிலை மாற்றமானது மீண்டெழுவதற்கான உள்சார் கட்டமைப்பை கட்டியெழுப்புவது உட்பட பல்வேறு நீண்டகால கொள்கைகளில் கவனத்தைக் குவிக்க வேண்டிய தேவையை உணர்த்தி நிற்கிறது.

ஆனால் இந்த விடயத்தில் அணுகுமுறை குறைவானதாகவே காணப்படுகிறது. பாரிய தொகையை செலவிட்டு மேற்கொள்ளப்பட்ட உள்சார் கட்டமைப்புத் திட்டங்கள் சீரற்ற காலநிலையினால் ஏற்படக்கூடிய தாக்கங்களுக்கு ஓரளவுக்கேனும் ஈடுகொடுக்கக்கூடியவையாக மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். இந்த உள்சார் கட்டமைப்புப் பணிகளுக்காக ஏற்கனவே பெருந்தொகை  நிதி வெளிநாட்டுக் கடனாக பெறப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் நாடு தொடர்ந்தும் பெரும் கடன் சுமையில் சிக்கியிருப்பதாக அரசாங்கத்தின் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
எதிர்வரும் காலங்களில் காலநிலை மாற்றத்தால் நகரப் புறங்கள் மோசமாகப் பாதிக்கப்படக்கூடுமெனவும் எச்சரிக்கப்படுகிறது. இதனால் நீடித்து நிலைக்கக்கூடிய வகையில் அதாவது கடும் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கக் கூடிய முன்னேற்பாடுகளைக் கொண்டவையாக நகரப் பகுதிகளின் உள்சார் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

மோசமான காலநிலையால் ஏற்படக்கூடிய ஆபத்துகள், நெருக்கடிகளை தடுத்து நிறுத்துவதற்கான மூலோபாயக் கொள்கைகளை செம்மையான முறையில் அரசாங்கம் வடிவமைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் பொருளாதார வளர்ச்சியில் மேலும் பின்னடைவை ஏற்படுத்திவிடும்.

நெடுஞ்சாலைகள், பல மாடி அடுக்குகளுடனான கட்டிடங்கள் தலைநகர் கொழும்பு உட்பட பல நகரங்களில் நிர்மாணிக்கப்படுகின்றன. இவற்றை அமைக்கும் போது மழை, வெள்ளம், காற்றுக்கு தாக்குப்பிடிக்கக்கூடியவையாக மரணங்கள், பொருளாதார இழப்புகளை தவிர்க்கும் வகையில் மேற்கொள்ளப்படுவது அவசியம்.


அதேவேளை இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படக்கூடிய பயிரழிவு போன்ற பாதிப்புகள் விவசாயிகளுக்கு ஏற்படும் போது, அதனால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை குறைப்பதற்கு காப்புறுதித் திட்டங்கள் பயனுள்ளவையாக அமையும்.

காலநிலை மாற்றத்தை கையாள்வது தொடர்பாக 2015 இல் மேற்கொள்ளப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையின் பிரகாரம் 2020 தொடக்கம் வறிய நாடுகளுக்கு காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் தூய்மையான சக்தி என்பனவற்றுக்கு உதவுவதற்காக நிதியுதவி வழங்குவதை ஆரம்பிக்க வருடாந்தம் 100 பில்லியன் டொலரைத் திரட்டுவதாக செல்வந்த நாடுகள் உறுதியளித்திருந்தன.

அதேவேளை தவிர்க்க முடியாத இழப்புகள், சேதாரங்கள் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் போது அவற்றுக்குத் தீர்வு காண சர்வதேச ரீதியான பொறிமுறையொன்றை ஏற்படுத்துவது தொடர்பாகவும் நாடுகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. 
அடுத்த மாதம் பொன் நகரில் ஐ.நா.வின் காலநிலை தொடர்பான பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ள நிலையில் "சர்வதேச ரீதியான பொறிமுறை' குறித்து அதிகளவு கவனம் செலுத்தப்படும்.


சாத்தியம் இருப்பதாக காலநிலை தொடர்பான நிபுணர்கள் கூறுகின்றனர். அதேவேளை காலநிலை மாற்றப் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு உதவுவதாக செல்வந்த நாடுகள் உறுதியளித்திருக்கின்ற போதிலும் இந்த விவகாரத்தில் தேவைகள் அதிகரித்துவரும் நிலையில், அவற்றை நிறைவேற்ற முடியாமல் போய்விடுமென்ற கவலைகளும் காணப்படுகின்றன.

ஏனெனில் சர்வதேச மட்டத்தில் உதவியளிக்கும் பிரதான கொடையாளிகளில் ஒன்றான அமெரிக்கா, உறுதிமொழிகளிலிருந்தும் பின்வாங்குவதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அனர்த்தங்களை  இலங்கை உட்பட அனைத்து நாடுகளும் அதிகளவுக்கு உணர ஆரம்பித்திருக்கின்றன.

இந்நிலையில் அதனை எதிர்கொள்வதற்கு தயார்படுத்துதலில் முழுமையாக ஈடுபடுவதற்குரிய சீரான கொள்கைகளை வகுத்து நடைமுறைப்படுத்துவதிலேயே கவனத்தை செலுத்துவது அவசியம். 

TOTAL VIEWS : 1504
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
uzk0x
  PLEASE ENTER CAPTA VALUE.