ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம்
2018-01-02 12:21:39 | General

தமிழ்த் திரைப்பட உலகில் முன்னணி நட்சத்திரமாக கொடி கட்டிப்பறந்து கொண்டிருந்த ரஜினி காந்த் அரசியலில் பிரவேசிக்க தீர்மானித்திருப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருக்கின்றமை தமிழகத்தின் அரசியல் காட்சிகளை சில சமயம் மாற்றியமைக்கக் கூடும்.

தற்போதுள்ள அரசியல் கட்சிகள் மக்களை "கொள்ளையடிப்பதாக' சாடியுள்ள ரஜினிகாந்த், புதிய கட்சியொன்றை அமைத்து புனிதத் தன்மையான அரசியலை   முன்னெடுக்கப் போவதாகவும் மாநிலத்தில் அடுத்த தடவை இடம்பெறவுள்ள சட்ட சபைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் சூளுரைத்திருக்கிறார். 

ஜனநாயகமென்ற போர்வையில் அரசியல் கட்சிகள் தமது சொந்த மக்களையே கொள்ளை அடிக்கின்றன. அந்த முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது. நாட்டின்  அரசியல் தவறான பாதையில் சென்றுவிட்டது என்று ரஜினிகாந்த் தனது ஆதரவாளர்கள் மத்தியில் தெரிவித்திருக்கிறார்.

பெயர், புகழுக்காகவோ அல்லது பணத்துக்காகவோ தான் அரசியலுக்கு வரவில்லையெனவும் கடந்த ஒரு வருடம் மாநிலத்திற்கு வெட்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் மாநில அரசியலைப் பார்த்து ஏனைய மாநிலங்கள் ஒவ்வொன்றும் நகைத்துக் கொண்டிருப்பதாகவும் இதில் மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியமெனவும் அவர் தெரிவித்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது. 

திரைப்பட நட்சத்திரங்கள் உட்பட அத்துறை சார்ந்த பிரபலங்கள் தமிழக அரசியலில் பிரவேசிப்பது கடந்த பல தசாப்தங்களாக தமிழகம் உட்பட இந்தியாவின் இதர மாநிலங்களில் இடம்பெற்றுவருகிறது. அந்தப் பட்டியலில் இப்போது ரஜினிகாந்தும் இணைந்திருக்கிறார். மறைந்த தமிழக முதல்வர்களும் தமிழ்த் திரைப்பட உலகில் மட்டுமன்றி மக்கள் மனங்களிலும் நீங்காத இடத்தைப் பிடித்திருந்த எம்.ஜி. இராமச்சந்திரன், ஜெயலலிதா ஜெயராம் மற்றும் சிவாஜி கணேசன் , எம்.ஜி. ஆரின் பாரியார் ஜானகி, நடிகர் விஜயகாந்த், நெப்போலியன், சரத்குமார், குஷ்பு என்று அரசியல் திரை நட்சத்திரங்களின் பெயர்ப் பட்டியல் நீண்டதொன்றாகும். 

அத்துடன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்களும் முன்னாள் முதல்வர்களுமான அறிஞர் அண்ணத்துரை, கலைஞர் கருணாநிதி ஆகியோரும் தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியவர்களாவர். அதேவேளை,  ரஜினி காந்த்துடன் திரைப்பட உலகில் சமகாலத்தவரான கமலஹாசனும் அரசியலில் பிரவேசிப்பாரென எதிர்பார்க்கப்பட்ட தருணத்தில் காலத்தின் கட்டாய மென்று தனது வருகை  குறித்து ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். 

 தமிழ் நாட்டில் அடுத்த தேர்தல் 2021 இல் இடம்பெறவேண்டியுள்ள போதும் அதற்கு முன்பாக நடைபெறும் சாத்தியப்பாடு அதிகளவுக்கு காணப்படும் நிலையில், ரஜினிகாந்தின் பிரவேசம் கடந்த 5 தசாப்தங்களுக்கும் மேலாக அதிகாரத்தை தம்வசம் வைத்திருந்த தி.மு.க. , அ.தி.மு.க. ஆகிய இரு பிரதான கட்சிகளுக்கும் பாரிய சவாலாக அமையுமென கருதப்படுகிறது. தனிமனித ஆளுமையை  மையப்படுத்தியதாகவே தெற்காசிய அரசியல் அதிகளவுக்கு காணப்படுகிறது.

தமிழகத்தில் அந்தத் தன்மையை அதிகளவுக்கு பார்க்க முடியும். அ.தி.மு.க.  பொதுச் செயலாளரும் தமிழக மக்களின் மனம் கவர்ந்த தலைவியுமான ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அக்கட்சி பிளவுபட்டிருக்கிறது. ரஜினி காந்தின் வருகையால் தி.மு.க. வுக்கு பாதிப்பு ஏற்படாதென அதன் தலைவர் ஸ்டாலின் கூறினாலும் தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்துமென்பதை அதிகளவுக்கு எதிர்பார்க்கமுடியும். 

அதேவேளை, ஆரம்பிக்கப்படவுள்ள கட்சியின் பெயரை இன்னமும் ரஜினி காந்த் அறிவித்திருக்கவில்லை. அதுவரை ஏனைய கட்சிகளை பற்றி கருத்து தெரிவிக்கவோ அல்லது அரசியல் பற்றி கதைக்கவோ வேண்டாமென தனது ஆதரவாளர்களை அவர்கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆயினும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலில் புதிய கட்சி பற்றி அறிவிக்கக் கூடுமென எதிர்பார்ப்புகள் காணப்படுகின்றன. சிவாஜி ராவ ஷேக்வாத் என்பது ரஜினி காந்தின் பெயராகும். மராத்தி குடும்பத்தைச் சேர்ந்த அவர் பஸ் நடத்துநராகவும் மற்றும் சிறுதொழில்களையும் புரிந்துள்ளார். 

தமிழ்த் திரைப்படவுலகில் அவர் பிரவேசித்த பின்னர் தமிழ் நாடு அவரை ஆரத்தழுவியிருப்பதுடன், அவரை வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று ஒருபோதுமே  மாநில மக்கள் கருதுவதில்லை. ஆயினும் கடந்த காலத்தை விட இப்போது  மதம், மொழி, சாதி, வர்க்க வேறுபாடுகளால் தமிழகம் அதிகளவுக்கு துருவ மயப்படுத்தப்பட்டிருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.

“ஆன்மீக அரசியலை‘ ரஜினி காந்த் மதச் சார்பற்ற அரசியலாக மாற்றவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுமெனவும் அதனால் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்குமென்றும் அரசியல் விமர்சகர்கள்  கூறுவதையும் காணமுடிகிறது.

எம்.ஜி.ஆர். பாணியில் ரஜினி காந்தின் ரசிகர்கள் மன்றமே அவரை அரசியலுக்குள் கடும் பிரயத்தனத்துடன் முன்தள்ளிவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜனநாயக ரீதியான கட்சி அரசியல் என்பது "பகவத் கீதை ' யை போதிக்கும் மகாபாரத நாடகம் போன்றதொன்றல்ல என்றும் “ அரசியல், பொருளாதாரம் ‘ பற்றிய நுண்ணிய நயவேறுபாடு பற்றிய புரிந்துணர்வு அதற்கு தேவைப்படுகின்றதெனவும் தமிழகப் பேராசிரியர் ஒருவர் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிக் கூறியிருப்பது அதிகளவுக்கு யதார்த்தமான கூற்றாக தோன்றுகிறது.

TOTAL VIEWS : 1201
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
bu3xs
  PLEASE ENTER CAPTA VALUE.