தடுத்து வைக்கும் காலத்தை தீர்மானிக்கும் வறுமை
2017-12-28 11:14:55 | General

இலங்கையில் ஆட்கள் கைது செய்யப்படுவதற்கு முக்கியமான காரணங்களிலொன்றாக "வறுமை' தென்படுவதாக ஐ.நா. மனித உரிமைகள் குழுவொன்று தெரிவித்திருப்பதுடன் வறுமையை குற்றத் தண்டனையாக்குவதற்கு பதிலாக மாற்று வழிமுறைகளை கண்டறியுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதை அவதானிக்க முடிகிறது.

தரமான சட்ட ரீதியான பிரதிநிதித்துவத்தை கொண்டிருப்பதற்கான வசதியை (பொருளாதார ரீதியில்) கொண்டிருந்தால் குற்றச்சாட்டுக்குள்ளாகி தண்டனை அனுபவிப்போரின் வழக்குகளின் பெறுபேறுகள் சிறப்பானதாக அமைந்திருக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தன்னிச்சையாக தடுத்து வைத்திருப்பது தொடர்பான விவகாரத்திற்குப் பொறுப்பான ஐ.நா.வின் செயற்குழு சுட்டிக்காட்டியிருக்கிறது. 

இந்த மாத முற்பகுதியில் தன்னிச்சையாக தடுத்து வைத்திருத்தல் தொடர்பான விவகாரத்துக்குப் பொறுப்பான ஐ.நா. குழுவினர் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். 


அவர்களுடன் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அதிகாரிகளும் உடன் வந்திருந்தனர். அக்குழுவினரின்  இலங்கைப் பயணம் தொடர்பான அறிக்கையொன்றில் தாங்கள் ஆரம்பக் கட்டத்தில் கண்டறிந்தவற்றிலிருந்தும் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

நபரொருவர் தடுத்து வைக்கப்படுவாரா என்பது பற்றியும் எவ்வளவு காலத்துக்கு அவர் சுதந்திரம் பறிக்கப்பட்டவராக இருப்பார் என்பது பற்றியும் தீர்மானிக்கும் காரணியாக வறுமையே இலங்கை பூராகவும் இருப்பதாக தோன்றுகிறது‘ என்று தமது அறிக்கையில் அக்குழு தெரிவித்திருக்கிறது. இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பலரை தமது பயணத்தின் போது இக்குழுவினர் சந்தித்திருந்தனர்.

தங்களுக்கு தரமான சட்டரீதியான பிரதிநிதித்துவத்தை கொண்டிருப்பதற்கான வசதி இருக்குமானால் தமது  விவகாரங்களுக்கு சிறப்பான பெறுபேறுகளை பெற்றிருக்க முடியுமென அவர்கள் குழுவினருக்கு தெரிவித்திருக்கின்றனர்.


பயங்கரவாத தடைச்சட்டம் அல்லது வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் போதைவஸ்துப் பாவனையால் புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் வைக்கப்பட்டிருப்போர் போன்றவர்களும் ஐ.நா. குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டிருப்போரில் உள்ளடங்கியிருக்கின்றனர்.

இதேவேளை நாட்டில் வறுமை பாரியதொரு பிரச்சினையாக உருவெடுத்திருப்பதை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நிரோசன் பிரேமரட்ண ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு அளித்திருக்கும் பேட்டி வெளிப்படுத்தியிருப்பதாக  தோன்றுகிறது.

இப்போது வறுமை தொடர்பாக எந்தவொரு பதிலும் இல்லை. 10 இலட்சம் மக்கள் நாளொன்றுக்கு ஒரு வேளை உணவையே அருந்துகின்றனர். 461,000 பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்ல வேண்டிய வயதில் பாடசாலை செல்லாமல் இருக்கின்றனர்.

வறுமைப் பிரச்சினைக்கு   தீர்வு இல்லை என்று குறிப்பிட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. அதேசமயம் நீண்டகால யுத்தத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் குறிப்பாக கொடூரமான இறுதி யுத்தம் இடம்பெற்ற வடக்கில் ஏனைய மாகாணங்களை விட வறுமை மட்டம் அதிகளவில் உள்ளதை புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியிருந்தன. 

ஜீவனோபாயத்திற்கான அடிப்படை வசதிகளின்மையால் அதாவது தொழில்வாய்ப்பு, மூலதனம் போன்றவை இல்லாததால் அதிக தொகையினர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். இதற்கப்பால் சுமார் 25  30 யாசகர்கள் வீடற்றோர், வீதியோரம் வசிப்போர் தென்னிலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அறிக்கைகள் கிடைத்திருப்பதாகவும் ஐ.நா. செயற்குழு குறிப்பிட்டிருக்கிறது.

சுதந்திரத்தைப் பறிக்கும் விளைவுகளைக் கொண்ட எந்தவொரு வடிவத்திலுமான பாரபட்சமும் எதேச்சாதிகாரமுமான நடவடிக்கையென தெரிவித்திருக்கும் அக்குழுவினர் வறுமையை தண்டனைக்குரிய குற்றமாக்குவதிலும் பார்க்க அதனை இல்லாமல் செய்வதற்கு சமூக சேவைகள் உட்பட மாற்றீடான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கிறது. 

நாட்டின் பின்தங்கிய கிராமப் பகுதிகளை பிரதானமாக இலக்கு வைத்து "கிராம சக்தி' முன்முனைப்பை வறுமை ஒழிப்புத் தொடர்பாக அரசாங்கம் ஆரம்பித்திருந்தது. அத்துடன் 2017 ஆம் ஆண்டை வறுமை ஒழிப்பு ஆண்டாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரகடனப்படுத்தியிருந்தார்.

ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாட்டில் வறுமை மட்டம் தாழ்ந்ததாக இருக்கின்ற போதிலும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு முக்கிய காரணங்களிலொன்றாக வறுமை இருப்பதாக ஐ.நா. குழு சுட்டிக்காட்டியிருப்பதை அரசாங்கம் கவனத்திற் கொண்டு செயற்பட வேண்டும். 

TOTAL VIEWS : 1297
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
coxv6
  PLEASE ENTER CAPTA VALUE.