யாழ்ப்பாணத்துடன் உறவை நாடும் சிங்கப்பூர்
2016-08-02 11:53:49 | General

ஏறத்தாழ யாழ்ப்பாணக் குடாநாட்டின் பரப்பளவைக் கொண்ட சின்னஞ் சிறு நாடான சிங்கப்பூரின் அரசாங்கம் கொழும்புடன் நல்லுறவைக் கொண்டிருக்கும் இத் தருணத்தில் கொழும்புக்கு அப்பால் யாழ்ப்பாணத்துடனும் உறவுகளை விரிவுபடுத்த விரும்புவதாக சிங்கப்பூர் பிரதமர் லீ ஸியன் லூங் தெரிவித்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தருணத்தில் இருநாடுகளுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கைச்சாத்திடுவது தொடர்பாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போதே சிங்கப்பூர்  பிரதமர் லூங் இக் கருத்தை தெரிவித்திருக்கிறார்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சிங்கப்பூர் கம்பனிகளுக்கு நுழைவாயிலாக இலங்கை அமைய முடியுமென்ற நம்பிக்கையை அவர் வெளியிட்டிருக்கிறார். 


 19 ஆம் நூற்றாண்டு முதல் சிங்கப்பூரிலுள்ள இலங்கையர் சமூகம் சிறியளவில் இருந்தாலும் கூட அதன் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை வழங்கியிருந்ததாகவும் பிரதமர் விக்கிரம சிங்கவுடனான சந்திப்பின் போது சிங்கப்பூர் பிரதமர் நினைவு கூர்ந்திருக்கிறார்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் குறிப்பிடத்தக்க தொகையினரான யாழ்ப்பாணத் தமிழர்கள் அச்சமயம் ஒரே நாடாக இருந்த மலேசியாவுக்கும் 
சிங்கப்பூருக்கும் புலம்பெயர்ந்திருந்தனர். சிவில் நிர்வாக சேவை மற்றும் நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் கணிசமான அளவுக்கு தமது பங்களிப்பை செலுத்தியிருந்தனர்.

20 ஆம் நூற்றாண்டின் பின் நடுப்பகுதியில் சிங்கப்பூர் தனிநாடாக உருவான மலாயா தீவகற்பத்தின் குடியேற்றத்தில் அங்கம் வகித்த யாழ்ப்பாணத் தமிழர்கள் சிங்கப்பூரின் நிர்வாக மற்றும் அரசாங்க சேவைகளுக்கு அடித்தளமிடுவதற்கு உதவியிருந்தனர் என்பதை சிங்கப்பூர் பிரதமர் நினைவு கூர்ந்திருப்பதையும் காணமுடிகிறது.


அத்துடன், சிங்கப்பூரின் முதலாவது வெளிவிவகார அமைச்சரான சின்னத்தம்பி இராஜரட்ணம் யாழ்ப்பாணத்தில் பிறந்தவரென்பதை  குறிப்பிட்டிருக்கும்  பிரதமர் லூங், நீண்ட காலமாக இருந்து வரும் கலாசார ரீதியானதும் மக்களுக்கிடையிலானதுமான பிணைப்புகளை வலுவானதாக கட்டியெழுப்ப எதிர்பார்த்திருப்பதாக கூறியிருக்கிறார்.

இதன் ஓரங்கமாக யாழ். பொதுநூலகத்தை சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சின் உதவியுடன் மேம்படுத்துவதற்கு உதவியளிப்பது குறித்து அவர் அறிவித்துள்ளமை மிகவும் வரவேற்புக்குரிய விடயமாகும். ஆசியாவிலேயே தலை சிறந்த நூலகமாக விளங்கிய யாழ். நூலகம் 1981 இல் எரிக்கப்பட்ட போது உலகத் தமிழர்கள் பெரும் வேதனையடைந்தனர். தற்போது மீண்டும் பல நாடுகளினதும் நலன் விரும்பிகளின் உதவியுடன் அந்த நூலகம் புனரமைக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அதற்கு புதிய நூல்களை வழங்குவதற்கான விருப்பத்தையும் சிங்கப்பூர் பிரதமர் வெளியிட்டிருக்கிறார். 


சிங்கப்பூரின் தேசிய நூலக சபை மற்றொரு 500 நூல்களை யாழ். நூலகத்திற்கு வழங்குமெனவும் யாழ். நூலகத்துடன்  கொண்டிருக்கும் நீண்டகால ஒத்துழைப்பின் அடிப்படையில் இந்த நூல்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். யாழ். நூலக புனர்நிர்மாணப் பணிகளுக்கு சிங்கப்பூர் முன்னரும் உதவியிருந்தது. 2014 இல் இளைஞர் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை சிங்கப்பூர் அறிவித்திருந்தது.

இதன் மூலம் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் மூவாயிரம் இளைஞர்களுக்கு உதவியளிக்கப்பட்டது. 10 ஆயிரம் ஆங்கில நூல்களை அன்பளிப்பாக சிங்கப்பூர் வழங்கியிருந்தது.  சுமார் 2 இலட்சம் தமிழ் மக்களைக் கொண்டிருக்கும் சிங்கப்பூரில் மூன்றாவது பெரிய கலாசார குழுமமாக தமிழர்கள் வாழ்கின்றனர்.

கல்வியில் மேம்பட்ட சமூகமாகவும் மதம்,கலாசாரம், மொழிச் சுதந்திரத்தைக் கொண்ட சமுகமாகவும் அங்குள்ள தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 
சிங்கப்பூரின் ஸ்தாபகத் தலைவர் லீ குவான் யூவின் தீர்க்க தரிசனமே பல்லின, பல்மத, பல மொழி பேசும் மக்கள் சிறிய தொகையினராக இருந்தாலும் கூட அவர்கள் யாவரையும் உள்ளீர்த்து ஒருங்கிணைத்து உலக அரங்கில் தனித்துவமான பிரதிமையை அந்நாடு பெற்றுக் கொள்ள உதவியிருந்தது.

இப்போது இலங்கையுடன் பல தரப்பு வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வரும் சிங்கப்பூர் யாழ்ப்பாணத்துடனும் உறவுகளை கட்டியெழுப்ப விரும்புகின்றமை சிறப்பான  விடயமாக அமையும். யுத்தத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட வட பகுதியை அபிவிருத்தி செய்வதற்கு அந்நாட்டிடமிருந்து பொருளாதார உதவியை மட்டுமன்றி அறிவு மற்றும் அனுபவம் சார்ந்த உதவிகளையும் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு இரு தரப்பினர் மத்தியிலும் நெருக்கமான உறவும் புரிந்துணர்வும் அவசியம். அதற்கான காலம் கனிந்திருப்பதாக தோன்றுகிறது.

TOTAL VIEWS : 2522
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
aix3i
  PLEASE ENTER CAPTA VALUE.