இடம்பெயர்ந்தோர் அவலத்திற்கு துரிதமான தீர்வு அவசியம்
2016-07-23 13:14:11 | General

யாழ். மாவட்டத்தில் இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் 31 முகாம்களையும் மூடிவிடுவதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாகவும் ஆகஸ்ட் 15 இல் 971 குடும்பங்களையும் மீளக் குடியமர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் பலாலி மற்றும் காங்கேசன்துறைப் பகுதிகளில் இராணுவத்தின் உதவியுடன் 204 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருப்பதாகவும் அறியவருகிறது.

நீண்டகாலமாக இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் முகாம்களின் அவலநிலை தொடர்பாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொடர்ந்து விசனமும் கவலைகளும் வெளிப்படுத்தப்படுகின்றன.

பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் போன்ற உலகின் முக்கிய பிரமுகர்களும் இந்த முகாம்களுக்கு நேரடியாகச் சென்று அங்கு பலகாலமாக தங்கியிருக்கும் மக்களின் துன்பங்களை கேட்டறிந்து ஆறுதல்கூறிச் சென்றிருந்தனர்.

யுத்தம் முடிவுக்கு வந்து 7 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் புதிய தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம் பதவிக்கு வந்து சுமார் 20 மாதங்களாகின்ற நிலையிலும் இந்த முகாம் மக்களின் வாழ்வில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாத நிலைமை தொடருகின்ற நிலையில் அந்த முகாம்களை மூடிவிட்டு அங்குள்ள குடும்பங்களை மீள் குடியமர்த்தும் அரசின் திட்டம் அந்த மக்களுக்கு சிறிது ஆறுதலை ஏற்படுத்தக்கூடியதாகும். 


ஆனால் துரிதமாக இந்நடவடிக்கைகள் இடம்பெறுமா என்பது தொடர்பாக ஐயுறவே காணப்படுகிறது. "இந்த முகாம்களை மூடுவது தொடர்பாக காலவரையறை இல்லை. ஆனால் எங்களால் முடிந்தளவுக்கு நாங்கள் அதனை செய்ய முடியும்' என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கூறியிருப்பதையும் அவதானிக்கமுடிகிறது.

இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக கடந்த மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் உயர் மட்டக் கூட்டமொன்று இடம்பெற்றிருந்தது. அக்கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவும் கலந்துகொண்டிருந்தனர்.

அந்தச் சந்திப்பின் போது ஜனாதிபதி சிறிசேன வழங்கியிருந்த வழிகாட்டலுக்கமைய இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள முகாம்களை மூடிவிட்டு அங்குள்ளோரை மீளக்குடியேற்றம் செய்யும் முன்நகர்வை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிடுவதாகத் தோன்றுகிறது.

அத்துடன் கடந்த டிசம்பரில் கோணாப்புலத்திலுள்ள இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாமொன்றுக்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 6 மாத காலத்திற்குள் அந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுமென உறுதியளித்திருந்தார்.

10 இலட்சம் ரூபா செலவில் வீடொன்றை அமைக்கும் விதத்தில் வீடுகளை நிர்மாணிக்க 971 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கு கடந்த புதன்கிழமை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் 204 வீடுகள் கட்டிமுடிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.


மீதமாக இருக்கும் 767 குடும்பங்களையும் மீளக் குடியமர்த்த காணியை அடையாளம் காணும் நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இடம்பெயர்ந்தோர் தொடர்பான அரசாங்கத்தின் அணுகுமுறை தொடர்பாக விமர்சனங்களும் அதிகஅளவிற்கு காணப்படுகின்றன.

இந்த இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ள பெரும்பாலான மக்களின் காணிகள் மயிலிட்டி மற்றும் சுமார் 12 கி.மீ. நீளமான கரையோரப் பகுதியில் இருப்பதாகவும் அந்த நிலங்கள் இப்போதும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாகவும் வலி. வடக்கு புனர்வாழ்வு, மீள்குடியேற்றக் குழுவின் தலைவரான அருணாசலம் குணபாலசிங்கம் என்பவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மயிலிட்டி மீன்பிடித்துறைமுகத்தை மீளக் கையளிக்காமலும் கரையோரப்பகுதிகளுக்கு சுதந்திரமான முறையில் செல்வதற்கு இடமளிக்காமலும் இருந்தால் அரசாங்கத்தினால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அதிகளவுக்கு வெற்றியை பெற்றுக்கொள்ள முடியாமலிருக்குமென அவர் குறிப்பிட்டிருப்பதையும் அவதானிக்கமுடிகிறது.

அதேசமயம் மீள் குடியேற்றம் தொடர்பாக அரசாங்கம் உருவாக்கியிருக்கும் செயலணியில் வடக்கு மாகாணசபை ஓரங்கட்டப்பட்டிருப்பதாகவும் அதனை ஏற்றுக்கொள்ளப்போவதில்லையெனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதுடன், இதற்கு வடமாகாணசபை கடும் எதிர்ப்பையும் வெளியிட்டிருக்கிறது. 


இந்தச் செயலணித்திட்டத்திற்கு வடமாகாணசபையின் வகிபாகம் முழுமையாக இல்லாமல் செய்யப்பட்டிருப்பதாகவும் கடந்த காலங்களைப் போன்றே அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களைப்புறக்கணித்து மத்திய அரசு தனது பலத்தை அதிகரித்துக்கொண்டிருப்பதாகவும் முதலமைச்சர் கடும் ஆட்சேபனையை வெளியிட்டிருக்கிறார். 


மூன்று தசாப்த காலத்திற்கும் மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் வடகிழக்கு மாகாண மக்களே. அதிலும் குறிப்பாக இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வன்னி மற்றும் யாழ். மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தனர்.

3 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளிலும் தங்கியிருந்தனர். அவர்களில் கணிசமான தொகையினர் குறிப்பாக வலிகாமப்பகுதியினர் யாழ். மாவட்டத்திலுள்ள 31 இடம்பெயர்ந்தோருக்கான நிலையங்களில் தங்கியிருக்கின்றனர்.

அவர்கள் உட்பட இடம்பெயர்ந்த சகல மக்களையும் சாத்தியமான அளவுக்கு அரசாங்கம் துரிதமாக மீள்குடியமர்த்த வேண்டும். இந்நடவடிக்கைகளில் வடக்கு மக்களின் ஆணையைப் பெற்றிருக்கும் தமிழ்க்கூட்டமைப்பு நிர்வாகத்துடன் அதிகளவுக்கு அரசு இணைந்து செயற்படவேண்டும்.

அரசியல் அதிகாரம் என்பதற்கு அப்பால் இதுவொரு மனிதாபிமானப் பிரச்சினையென்பதை உணர்ந்து கொண்டு இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வை மேம்படுத்த ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

 

TOTAL VIEWS : 1880
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
r6ucj
  PLEASE ENTER CAPTA VALUE.