இலஞ்சம், ஊழல் தொடர்பான மனநிலை மாற வேண்டும்
2017-03-17 13:18:19 | General

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ட்ரான்ஸ் பரன்சி இன்டர்நெஷனல் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட கணிப்பீடொன்று இலங்கையர்கள் பொலிஸாருக்கு அதிகளவு இலஞ்சம் கொடுப்பதாக வெளிப்படுத்தியிருக்கிறது.

இந்தப் பிராந்தியத்திலுள்ள 17 நாடுகள் மத்தியில் இக் கணிப்பீடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. "மக்களும் ஊழலும்; ஆசிய  பசுபிக்' என்ற தலைப்பிலான அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த 17 நாடுகளைச் சேர்ந்த 22 ஆயிரம் பொது மக்களிடம் ஊழல் தொடர்பாகவும் கடந்த 12 மாதங்களில் இலஞ்சம் கொடுத்த அவர்களின் அனுபவம் பற்றியும் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.

இந்தியா, பாகிஸ்தான், சீனா, இலங்கை, அவுஸ்திரேலியா, தாய்வான், ஜப்பான் , ஹொங்கொங், தாய்லாந்து, மியன்மார், தென்கொரியா, கம்போடியா, இந்தோனேஷியா,மங்கோலியா, மலேசியா, வியட்நாம் உட்பட ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகள் பல, ஊழல் தொடர்பாக போராடிக் கொண்டிருப்பதை  இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. இந் நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளில் 10 பேருக்கு 6 பேர் என்ற விகிதத்தில் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக போராடும் நிலைமையில் இருப்பதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


ஆயினும் இந்தியா, இந்தோனேஷியா, இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த மக்களில் அரைவாசித் தொகையினருக்கு மேற்பட்டோர், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கையாள்வதற்கு தமது அரசாங்கங்கள் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன என்ற அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளனர்.

ஆனால், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பெறுபேறுகள் காணப்படுகின்றன என்ற கருத்தையும்  அவர்கள் கொண்டுள்ளனர். ஊழல் அதிகரித்து வருவது தொடர்பாக சிலரே உணர்ந்துள்ளதையும் கணிப்பீடு  வெளிப்படுத்துகிறது. 17 நாடுகளில் இலங்கையில் இலஞ்சம் கொடுக்கும் சதவீதம் 15 ஆக இருப்பதாக கணிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த மதிப்பீட்டில் ஊழல் தொடர்பான முக்கியமான பிரச்சினைகளைக் கையாள்வதில் அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து இலங்கையும் தாய்வானும் சிறப்பாக செயற்படுவதும் சுட்டிக்காட்டப்படுகிறது. அதேசமயம் இலஞ்ச, ஊழல் ஒழிப்புக்கு எதிராகப் போராடுவதற்கு உதவியான வலுவூட்டல் நடவடிக்கைகள் மிகத் தாழ்ந்த மட்டத்திலேயே  இருப்பதாக  பலர் கருதுவதும் வெளிப்பட்டிருக்கிறது. 


இந்த விவகாரத்தில் சிறப்பாக செயற்படும் நாடுகளிலும் மேம்பாடு காண்பதற்கான பகுதிகள் இருப்பதையும் அறிக்கையில்  காண முடியும். அதேவேளை பல வருடங்களாக பொலிஸார் ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பதாக  பொது மக்கள் மனங்களில் ஏற்பட்டிருக்கும் எண்ணப்பாடு மாற்றமடையவில்லை என்பதை ட்ரான்ஸ்பரன்சி இன்டர் நெஷனல் அமைப்பினால் தொடர்ந்து வெளியிடப்பட்டு வரும் அறிக்கைகள் காண்பிக்கின்றன.

இலங்கையைப் பொறுத்தவரை முன்னைய ஆட்சியில் பொலிஸார் தண்டனை விலக்கீட்டுச் சிறப்புரிமையுடன் செயற்பட்டதாகவும் விமர்சனங்கள் மேலெழுந்திருந்தன. ஆனால், குறிப்பிட்ட சிறிய தொகையினர் மீதான குற்றச்சாட்டுகளை ஒட்டுமொத்தமாக சகலர் மீதும் தெரிவிக்க முடியாது.

அதிகாரப் பலமிக்க அரசியல் வாதிகளுக்கும் குறித்த சிறிய தொகையினரான பொலிஸாருக்கும் இடையிலான பிணைப்புகளே சில சமயம் இத்தகைய தீங்கான சூழ்நிலை சட்டம், ஒழுங்கை  அமுல்படுத்தும் தரப்பினர் மத்தியில் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகின்றனவென்ற எண்ணப்பாட்டையும் முழுமையாக நிராகரிக்க முடியாது.   அதேவேளை, இலஞ்சம், ஊழல் அதிகரிப்பதற்கு முக்கியமான காரணம் பொருளாதார ரீதியான பிரச்சினையே என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

"கொடுத்துப் பெற்றுக் கொள்ளுதல்' என்ற மனோபாவம் எமது மனங்களில் ஆழமாக வேரூன்றி விடுவதும் இலஞ்சம், கொடுப்பதும் பெற்றுக் கொள்வதும் "பெரிய பாவமான காரியமல்ல' என்ற அலட்சிய மனோபாவம் காணப்படுவதும் அதிகளவுக்கு அழுத்தமாக மனங்களில் பதிந்துவிட்ட தன்மையும் காணப்படுகிறது.

ஊழல் , மோசடிகளைக் கையாள்வதற்கு தற்போதைய அரசாங்கம் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக தன்னால் முடிந்தளவுக்கு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது என்பது உண்மை தான். ஆனால், இந்த நடவடிக்கைகள் இலஞ்சம், ஊழல் இடம்பெறாமல் தடுப்பதையே அதிகளவுக்கு இலக்கு வைத்திருப்பதாகத் தோன்றுகிறது. 


ஆனால், இந்த தீமையான நடவடிக்கைகள் திரும்பத் திரும்ப மேலெழுந்து வராமல் முற்றாக  இல்லாதொழிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் அதிகளவுக்குத் தேவைப்படுகின்றன என்பதை மறுக்க முடியாது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவை சுயாதீனமாக இயங்கச் செய்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஊழலைத் தடுத்து நிறுத்துவதற்கான விசேடமான சட்ட ரீதியான ஏற்பாடுகள், வெளிப்படைத் தன்மையான முறைமைகளை மேம்படுத்த மேற்கொண்டிருக்கும் முன்முனைப்புகள் என்பவற்றை இந்த இலஞ்ச, ஊழல் மோசடிகளுக்கு எதிரான பாதையில் பயணிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் முயற்சியாக நோக்க முடியும்.

ஆட்சியுடன் தொடர்புபட்ட அநேகமாக சகல தகவல்களையும் பெற்றுக் கொள்வதற்கான வெளிப்படைத் தன்மையைக் கொண்ட முறைமையாக அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட மூலத்தை உதாரணமாகக் காண்பிக்க முடியும். இது இலஞ்ச, ஊழலுக்கு  எதிரான போராட்டத்திற்கு முக்கியமான கருவியாக உதவ முடியும்.

ஆனால் இந்தச் சட்டத்தை பொது மக்கள் இலகுவாகப் பயன்படுத்தக் கூடிய விதத்தில் செம்மையாக அமுல்படுத்துவதிலேயே  சாதகமான பெறுபேறு தங்கியுள்ளதென்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். உண்மையில் நல்லாட்சிக்கான நடவடிக்கைகளில் பதிலளிக்கும் கடப்பாடு அல்லது பொறுப்புக் கூறுதல் என்பதன் "வகிபாகத்தை' குறைவாக எடை போடக் கூடாதென்பதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டிய தேவைப்பாடு இங்கு காணப்படுகிறது.

பொது மக்களின் நலன்களை முன்னிறுத்தியே சட்டங்களும் ஒழுங்குவிதிகளும் உருவாக்கப்படுகின்றன. அவற்றை செம்மையாக நடைமுறைப்படுத்தும் போதும் அமுல்படுத்தும் தரப்பினர் உட்பட சகல தரப்பினரும் அவற்றுக்கு அமைவாக செயற்படும் போதும் சமூகங்களைப் பாதிப்படையச் செய்யும் இந்த இலஞ்ச, ஊழல் நடவடிக்கைகளை முழுமையாக விரட்ட முடியும்.

TOTAL VIEWS : 1757
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
m6qsw
  PLEASE ENTER CAPTA VALUE.