இன்று உலக நீரிழிவு தினம்
2017-11-14 10:06:10 | General

பொருளாதார வளர்ச்சிக்கு உடல், உள ரீதியாக ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்புவது வலுவான அத்திவாரமாக அமையுமென்ற உறுதியான நம்பிக்கை உலகளாவிய ரீதியில் இப்போது அதிகரித்துக் காணப்படுகிறது. உற்பத்தி, வர்த்தகம், புதிய கண்டுபிடிப்புகளை ஆரோக்கியமானவர்களாலேயே மேற்கொள்ள முடியுமென்ற எண்ணமும் பரந்தளவில் காணப்படுகிறது.

ஆயினும் உலக நாடுகளில் கொடிய தொற்றுநோய்களும் ஆட்கொல்லித் தொற்றாநோய்களும் மனித குலத்தின் இருப்புக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வருகின்றன. தொற்றா நோய்களில் நீரிழிவு இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவுக்கு தாக்கியுள்ள வியாதியாகும். 

2014 இல் நீரிழிவினால் 422 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.  1980 இல்  108 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த தசாப்த காலத்தில் நீரிழிவினால் பாதிக்கப்படுவோர் தொகை மிக வேகமாக அதிகரித்திருப்பதை அவதானிக்க முடியும்.

சத்தமின்றிக் கொல்லும் வியாதியான நீரிழிவு தொடர்பாக பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வையும் அறிவூட்டலையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன், 2007 இல் ஐ.நா. பொதுச் சபை நவம்பர் 14 ஐ (இன்று) சர்வதேச நீரிழிவு நோய் தினமாக பிரகடனப்படுத்தியிருந்தது. 


"மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான பலதரப்பட்ட முயற்சிகளை முன்னெடுப்பதற்கும் சிகிச்சையையும் சுகாதாரப் பராமரிப்பு கல்வியையும் பெற்றுக்கொள்வதற்கான அவசர தேவைப்பாடு காணப்படுவதும் அடையாளம் காணப்பட்டிருப்பதாக' பொதுச் சபையின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேவேளை, உறுப்பு நாடுகள்  நோய்த் தடுப்பு , சிகிச்சை, பராமரிப்பு என்பன தொடர்பாக தேசியக் கொள்கைகளை விருத்திbசெய்வதற்கு ஊக்குவிப்பு அளிப்பதாகவும் அத்தீர்மானம் அமைந்திருந்தது.

உலக நீரிழிவாளர் தொகையில் ஐந்திலொருபங்கினர் தென்கிழக்கு ஆசியாவில் வசிப்பதாக நீரிழிவாளர் சங்கம் தெரிவித்திருந்தது. நீரிழிவு நோயினால் இளைய சமூகமும் பீடிக்கப்படும் தன்மை அதிகரித்துக் காணப்படுகிறது. நகரப் பகுதிகளிலேயே நீரிழிவாளர் தொகை அதிகளவுக்கு அதிகரித்து இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.  


உலகில்  2030 இல் நீரிழிவு நோயாளர் எண்ணிக்கை 55 கோடியை தாண்டிவிடுமெனவும் ஆதலால் இந்நோயைத் தடுத்து நிறுத்த செயற்பாட்டுத் திறன் வாய்ந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் உலக சுகாதார அமையம் அறிவுறுத்தியிருக்கிறது. கட்டுப்பாடான வாழ்க்கை முறைமையின் மூலம் நீரிழிவு நோயையும் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முடியுமென மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதேவேளை, நவீன தொழில்நுட்பத்தையும் புராதன இயற்கை முறைமையையும் ஒன்று சேர்த்து நீரிழிவைத் தடுப்பதற்கான சிகிச்சை முறைமை இப்போது பல நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்றது. ஆரோக்கியமான உணவுப் பழக்கமும் உடற்பயிற்சியும் புராதன முறைமையாகும்.

அதேவேளை, போஷாக்கு நிறைந்ததும் நீரிழிவு நோயாளர்களுக்கென விதந்துரைக்கப்பட்டதுமான உணவு வகைகளை உட்கொள்வதும் மிகவும் முக்கியமான விடயம். அதேசமயம் தினமும் உடற்பயிற்சி செய்யுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். உடற்பயிற்சிக்கு முன்னர் தியானம் அதாவது மனதை ஒருநிலைப்படுத்துதல் அவசியமென புராதன சுதேச மருத்துவம் கூறுகிறது.


சர்வதே நீரிழிவு நோய் சம்மேளனத்தின் தரவுகளின் பிரகாரம் இலங்கையில் வயது வந்தோர் தொகையில் 8.5% மானோர் நீரிழிவால் பீடிக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடம் 
( 2016) 12 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் நீரிழிவினால் பாதிக்கப்பட்டோர் தொகை காணப்பட்டது. அதிக எடை, போதிய உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம், பரம்பரை, உணவுப் பழக்க வழக்கம் என்பவை நீரிழிவுக்கான காரணங்களாக கூறப்படுகின்றன.

நீரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடின் 
சிறுநீரக வியாதி, இதய நோய், பக்கவாதம் போன்றவற்றுக்கு இலக்காகிவிடும் ஆபத்தும் உள்ளது. சர்வதேச நீரிழிவு தினம் நவம்பர் 14 இல் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் இந்த வருடம் உலக சுகாதாரத் தினத்தின் கருப்பொருளாகவும் நீரிழிவு நோயை தெரிவு செய்திருப்பது இந்த வியாதி தொடர்பாக எவ்வளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றதென்பதை வெளிப்படுத்துகின்றது. ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துடன் மன அழுத்தத்தைக் குறைக்கும் யோகா, தியானம் என்பனவும் இந்தத் தொற்றாநோயின் தாக்கத்தைக் குறைக்கும். 

TOTAL VIEWS : 2283
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
4lzxc
  PLEASE ENTER CAPTA VALUE.