தலைமைத்துவப் பண்பு
2017-07-21 09:56:51 | General

"தலைமைத்துவ நெருக்கடி' என்பது தற்போது அதிகளவுக்கு பேசப்படும் பொருளாக காணப்படுகிறது. உண்மையில் ஏன் தலைமைத்துவத்திற்கு நெருக்கடி ஏற்படுத்துகிறது? அதிகாரத்தில் இருக்கும் பலரின் பொறுப்புணர்வற்ற தன்மை அல்லது இரண்டாம் தரமான போக்கே தலைமைத்துவ நெருக்கடிக்கான காரணமாகக் கருதப்படுகிறது.

அரசியல் பிரதிநிதிகளாயின் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றத் தவறினால் அல்லது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்திருந்த தமது உறுதிமொழிகளின் அடிப்படையில் மக்கள் ஆணையைப் பெற்று அதிகாரத்திற்கு வந்த பின், அவற்றை நடைமுறைப்படுத்தத் தயங்கினால் அல்லது மறுத்தால் அவர்களைப் பின்பற்றியவர்கள் தங்களின் தலைவர்களாக அல்லது பிரதிநிதிகளாக அவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதேவேளை அரசியல் தலைமைத்துவத்தின் வகிபாகம் குறித்து பெரும்பாலானவர்கள் "கண்மூடித்தனமான' அபிப்பிராயத்தையே கொண்டிருக்கின்றனர். 


அத்துடன் அரசியல் என்பது வெறுமனே "அதிகாரத்தை' மட்டுமே 
சார்ந்ததென்ற எண்ணப்பாடும் அதிகளவுக்குக் காணப்படுகிறது. அதாவது தலைமைத்துவமும் அதிகாரத்தைக் கொண்டிருப்பதும் சமனானதொன்று என்ற கருத்தே பெரும்பாலானவர்கள் மத்தியில் நிலவுகிறது. உண்மையில் இது தவறானதாகும். வெறுமனே அதிகாரத்திலிருப்பது ‘தலைமைத்துவத்திலிருந்தும்‘ வேறுபட்டதொன்றாகும்.

ஜேர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கிய ஹிட்லர், தன்னைத்தானே தலைவராக பிரகடனப்படுத்தியிருந்தார். அவர் அதிகாரத்தைக் கைப்பற்றி சகல எதிராளிகளையும் அழித்தொழித்தபோதே அவரின் எதேச்சாதிகாரம் குறித்து பலர் அறிந்துகொண்டனர். தலைமைத்துவம் என்ற போர்வையில் தன்னை ஆட்கள் பின்பற்றும் விதத்தில் சாதுரியமாக ஹிட்லர் அவர்களை மூளைச்சலவை செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன் அச்சுறுத்தி, மிரட்டிப் பலவந்தமாக அதிகாரத்தை கைப்பற்றியிருந்ததையும் வரலாறு காண்பிக்கிறது.

ஆனால் உண்மையான தலைமைத்துவப் பண்பென்பது இதற்கு முற்றிலும் மாறபட்டதொன்றாகும். பொதுவான அபிலாஷைகள், கொள்கைகள், விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டதாக மக்களால் ஆகர்சிக்கப்பட்டு தமது முன்னோடியாக அல்லது வழிகாட்டியாக ஒருவரைப் பின்பற்ற வைப்பதே தலைமைத்துவத்திற்கான பண்பாக அமைய முடியும்.


அதேவேளை "தலைமைத்துவம்' தொடர்பான தவறான எண்ணப்பாடும் சிலர் மத்தியில் காணப்படுகிறது. தலைமைத்துவப் பதவியை "விலைகொடுத்து' வாங்கிவிட முடியுமெனவும் சிலர் சிந்திக்கின்றனர். சொத்துக்கள் அல்லது பாவனைப் பொருட்களாகக் கூட சிலர் தலைமைத்துவத்தை எண்ணுவதற்குத் தலைப்படுகின்றனர். அரசியல் தலைவர்கள் தமது வாரிசுகளை தலைமைப் பதவிக்குக் கொண்டுவருவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளை இதற்கு உதாரணமாகக் கூற முடியும்.

ஆனால் ஒருவரின் தனிப்பட்ட ஆளுமை, சிறப்பான குணாம்சங்கள், செயலாற்றல், அறிவுக் கூர்மை என்பனவே உண்மையான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும். அதேவேளை "தொழில் முறைமையை' அடிப்படையாகக் கொண்ட தலைமைத்துவம் மற்றும் "நிலைமாற்ற' தலைமைத்துவமென்ற இரு வகையாக தலைமைத்துவம் காணப்படுகிறது. தொழில்முறைமையை அடிப்படையாகக் கொண்ட தலைமைத்துவம் அரசியல் மற்றும் ஆட்சித்துறை சார்ந்ததாக இருக்கும்போது "வாக்குக்காக  அபிவிருத்தி அல்லது மானிய உதவி' என்ற தன்மை அங்கு வெளிப்படுகின்றது. 


அதேவேளை நிலைமாற்றத் தலைமைத்துவம் என்பது தார்மீக ரீதியான தலைமைத்துவப் பண்பைக் கொண்டதாகவும் புத்திஜீவித் தனமான தலைமைத்துவமாகவும் தொலைநோக்கு கொண்ட தலைமைத்துவமாகவும் புரட்சிகரமான அணுகுமுறையை உள்ளீர்த்துக் கொள்ளும் தலைமைத்துவமாகவும் அமைய முடியும். நிலைமாற்ற பண்பு கொண்ட தலைமைத்துவம், தன்னைப் பின்பற்றுவோரை அல்லது தன்னை ஆதரிப்போரைத் திருப்திப்படுத்துவதற்காக அதிகளவுக்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றும்.

நிலைமாற்றப் பண்பு கொண்ட தலைமைத்துவங்களே சர்வதேச ரீதியாகவோ தேசிய ரீதியாகவோ பிராந்திய அல்லது கிராமிய மட்டத்திலோ சிறந்த தலைவர்களாக வரலாற்றில் இடம்பிடித்துக் கொள்கின்றனர். தமிழ் மக்களை  குறிப்பாக வட, கிழக்கை வரலாற்றுபூர்வ வாழ்விடமாகக் கொண்டவர்களைப் பொறுத்தவரை நிலைமாற்றத் தலைமைத்துவப் பண்பு கொண்டதும் யாவரையும் ஒரு குடையின்கீழ் அணிதிரட்டி வைத்திருக்கக்கூடியதுமான தலைமைத்துவங்களே அதிகளவுக்கு தேவைப்படுவதாகத் தென்படுகிறது.

 

TOTAL VIEWS : 995
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
nt8aj
  PLEASE ENTER CAPTA VALUE.